அறுபதாங்கோழி…!

​என்ன ஏது என்று உணர்வதற்குள் சில அரிய விஷயங்கள் நடந்தேறி முடிந்து விடுகின்றன. முக்கியத்துவம் உணர்ந்த பிறகு திரும்ப அந்தக் கணங்களுக்கு போகவோ, ‘ரீவைண்டு’ பண்ணியோ வாழ முடிவதில்லை.

பறம்பு மலைக் காட்டுச் சரிவில் கொற்றவை கூற்றின் போது  ஈச்சங்கள்ளுக்கு ஏதுவாக இருக்குமென்று கபிலருக்கு தர வேண்டுமென்று அந்நிலத்தையாண்ட தலைவன் வேள்பாரி விரும்பிய காட்டுப் பறவை ‘அறுபதாங்கோழி’,

‘சிக்க வேண்டுமென்று அதுவே முடிவு பண்ணினால்தான் அது சிக்கும்’ என்று சொல்லப்படும் அறுபதாங்கோழி என்றெல்லாம் சு.வெங்கடேசனால் சொல்லப்படும் அரிய அறுபதாங்கோழி என் முன்னே கண்டேன்.

காட்டுப் பாதையின் ஒரு புறத்திலிருந்து மேய்ந்து கொண்டே வந்து எங்கள் பாதையில் குறுக்கே வந்த அதைக் கண்டதும் ‘காட்டுக் கோழி!’ என்று கூவிய என்னுடன் வந்த சிக்கந்தருக்கு ‘இல்லை, இது வேறு! இது அறுபதாங்கோழி! சரியாகப் பாருங்கள்’ என்று சொல்ல முடியவில்லை என்னால். 

காணக்கிடைக்கா அரிய ஒன்று முன்னே வரும் போது, ‘ முன்புறம் கோழி போன்றும், பாதிக்கு மேல் பின்புறம் சேவல் போன்றும் இருக்கும் இது அறுபதாங்கோழி. உண்மையில் குறிஞ்சி நிலத் தலைவன் கடம்பன் முருகன் தன் கொடியில் கொண்டிருப்பது இதைத்தான், சேவலையல்ல!’ என்று விளக்கிக் கொண்டிருக்கவா முடியும்! 
காட்டின் ஒரு பக்கத்திலிருந்து வந்து சில கணங்கள் இருந்துவிட்டு எதிர்த் திசையில் ஓடி மறைந்து விட்டது. இறங்கிப் பார்த்தால் கண்ணில் தென்படவில்லை. 
‘மொத்தம் ஆயிரத்து தொள்ளாயிரம் ஹெக்டரு எனது கண்கானிப்பில இருக்குங்க. புலிகளும், கருஞ்சிறுத்தைகளும் இங்கதான் அதிகம் நடமாடுதுங்க. காட்டெரும கன்னுக்குட்டிகள, வாயசான மாடுகள அடிச்சி தின்னுடுங்க. இங்க பாருங்க என் சென்சஸ் கேமராவில சிக்கின புலிகளை, சிறுத்தைகளை…!’ என 

வனச்சரகர் முரளி என்னிடம் பகிர்ந்து கொண்ட பெருந் தகவல்கள்,  பொறுக்கக் கூட ஆளில்லாமல் தரையில் உதிர்ந்து கிடந்த மலை நெல்லிக் கனிகள், நானே பறித்து உண்ட கைபடாத அரை நெல்லி என எதுவும் என்னுள்ளே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, அரிய அறுபதாங்கோழி கண்ணிலே இருந்ததால்.

நவமலைக் காட்டுப் பயணம் என் மறக்க முடியா பயணம்.
பரமன் பச்சைமுத்து

நவமலை

19.12.2016

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *