கமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேயில்லை…

ompuri-1

 

ghostdarkanim

 

தொண்ணூறுகளின் இறுதியில் வந்து இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் பார்க்க நேரிட்டு என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் ( நடிகர் சிரஞ்சீவியையும் இது மிகவும் கவர்ந்து விடவே, இந்த நல்ல படத்தின் கதையையும் சில காட்சிகளையும் அப்படியே எடுத்து மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி பாடல்கள் சண்டைகள் என நிறைய சேர்த்துத் தாளித்து ஒரு தெலுங்குப் படம் எடுத்திருப்பார் அவர்!) அது. அமெரிக்காவில் வைக்கப்பட்டிருக்கும் இணையதள இயந்திரங்களை இங்கிருந்து நிர்வகிக்கும் பொறிஞனாக பணியாற்றிய அந்நாளைய பெங்களூர் கோரமங்களா பொழுதுகளில் நான் பார்த்து ரசித்த படங்களில் ஒன்று.
 
கென்யா நாட்டின் முக்கிய பிரமாண்டமான பாலம் ஒன்றை கட்டுவதற்காக உலகம் முழுவதிலிருந்தும் பொறியாளர்களும் பணியாளர்களும் வந்து குவிவார்கள். காட்டின் ஊடாகச் செல்லும் அந்தப் பாலத்தைக் கட்டும் முக்கிய பொறியாளனாக வந்து இறங்குவார் நாயகன் வால் கில்மர் (எங்கே போனார் இவர் இப்போதெல்லாம்?!). பாலம் – கட்டுமானம் – வேலை – இலக்கு என்று மும்முரமாகப் போகும் அந்த வாழ்க்கை, இரவு வந்தால் திகிலடிக்கும். பேயோ பிசாசோ வந்து கூடாரங்களில் இருக்கும் சிலரை வெளியில் இழுத்து குதறிக் கொன்று விட்டுப் போய்விடும். பெரும் பிரச்சினையான இதை எதிர் கொள்ள முடியாமல் வால் கில்மரும் முக்கிய பாத்திரத்தில் வரும் அழகன் மைக்கேல் டக்ளஸும் போராடி பின்னே இரவில் வந்து போவது பேய் பிசாசல்ல ஓங்கி அடித்தால் ஒன்றறை டன் வெயிட் கொண்ட ஒரு சிங்கம் என்று கண்டறிவார்கள். இருட்டினாலே கிலி பிடிக்கும் என்ற அந்த இரவுகளை எதிர்த்து போராடும் நாயகனுக்கு பிரச்சினையின் உச்சமாக பகலிலேயே கூடாரங்களைத் தேடி சிங்கம் வரத் தொடங்கும் பயங்கரமும் சேர்ந்து வரும்.
ompuri-1
 
சிங்கத்தால் ஒரு பக்கம் பிரச்சினை என்றால் இன்னொரு பக்கம் தொழிலாளர்களிடமிருந்து எழும். நாங்கள் வந்தது பாலம் கட்டவேதானேயொழிய உயிரை இழக்க அல்ல, ஒன்று என் கட்டுமானத் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுக்காப்பு கொடுங்கள் அல்லது நாங்கள் பாகிஸ்தானுக்கே திரும்பிப் போகிறோம் என்று குரல் கொடுத்து நிற்பான் கட்டுமானத் தொழிலாளிகளின் தலைவன் பாகிஸ்தானி அப்துல்லா. தொழிலாளர்களின் உயிரிழப்பு தொடரவே ஒரு நாள் ‘ நாங்கள் கிளம்புகிறோம்’ என்று மூட்டை முடிச்சுகளோடு ரயிலேறிக் கிளம்பிவிடுவான் அப்துல்லா.
 
கட்டுமானமும் நின்று தொழிலார்களும் போன பின்பு சிங்கத்தை தேடி நாயகன் செல்வான். அவன் மீது பாய்ந்து அவனைக் கொல்ல முயற்சிக்கும் சிங்கத்தை அவன் எதிர் கொள்ளும் காட்சி படத்தின் முக்கிய காட்சியாக பார்ப்பவரை இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்லும். அதற்குப் பிறகே அது ஒரு சிங்கம் இல்லை, அவை இரண்டு சிங்கங்கள் என்ற கதையின் முக்கிய திருப்பமான அந்த உண்மையை கண்டறிவான் அவன்.
 
உடலைக் கிழித்துக் கொண்டும், நண்பன் மைக்கேல் டக்ளசை இரையாகத் தந்தும் ஒரு வழியாக சிங்கங்களைக் கொன்று குருதி வழிய வால் கில்மர் எழுந்து நிற்கும் போது சொன்ன வாக்குப்படி தன் தொழிலாளர்களோடு ரயிலில் திரும்ப வருவான் அப்துல்லா.
 
‘மென் ஈட்டர்ஸ் ஆஃப் த்சாவோ’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு வந்திருந்த, ஆஸ்கார் வென்ற அந்தப் படத்தின் பெயர் ‘கோஸ்ட் அண்ட் த டார்க்னஸ்’.
படத்தின் மறக்கவே முடியாத மிக முக்கிய உணர்வைத் தாங்கிச் செல்லும் அந்த அப்துல்லா பாத்திரத்தை செய்தவர், நம் இந்திய நடிகர் ஓம் பூரி. இன்று காலை இயற்கை எய்தியிருக்கிறார் அவர். தன்னுடன் ‘ஹே ராம்’மில் நடித்த அவரைப் பற்றி தனது சுட்டுரையில் ‘அவர் மறையவில்லை, தனது படங்களின் மூலம் அவர் வாழ்கிறார்’ என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.
 
அதிகம் அவர் படங்களைப் பார்க்காத எனக்கு அந்த ‘அப்துல்லா’ பாத்திரம் மட்டுமே போதும், அவர் யார் என்பதைச் சொல்வதற்கு. பல மணிநேரங்களில் அல்லது பல பத்திகளில் சொல்ல முடியாத ‘தான் யார்!’ என்பதை ஒருவரது ஒரு துளி பங்களிப்பு அல்லது அவரது வேலையின் ஒரு சிறு பகுதியே சத்தமாகச் சொல்லிவிடுகிறது.
 
கமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேயில்லை. ‘கோஸ்ட் அண்ட் த டார்க்னஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்த என் போன்ற எத்தனையோ உலக ரசிகர்களின் மனதில் ‘அப்துல்லா’ இன்னும் இருந்து கொண்டுதானே இருப்பார்!
 
-பரமன் பச்சைமுத்து
காஞ்சிபுரம்
06.01.2016
 
www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *