என்ன கொடுத்தாலும் என்ன செய்தாலும் ஈடு செய்யமுடியவதில்லை…

horse_dog_swimming - Copy

horse_dog_swimming

செல்வி வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தும் நாற்பத்தியிரண்டு வயது பெண்மணி. தனது கணவனோடு ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருக்கிறார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த செல்விக்கு மூக்கினுள்ளே குடைச்சல் ஏற்பட்டு அலறி எழுந்து உட்காருகிறார். விடியும் வரை வலி பொறுக்க முடியாதென்று அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு ஓடுகிறார்கள். விசாரித்து கேட்டு பரிசோதித்து ‘மூக்கு உள்ள சதை வளர்ந்திருக்கும், அதான் வலிக்குது. இந்த மருந்த தடவுங்க. இத சாப்பிடுங்க!’ என்று சிலதை தந்து அனுப்பினர்.
 
வலி குறையவில்லை. மூக்கினுள் இருந்த வலி நேரமாக நேரமாக தலையினுள்ளே திருகு வலியாக உருமாறுகிறது. அழுது அரற்றும் அவரை அடுத்ததொரு மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறார்கள்.
முந்தைய மருந்துச் சீட்டுகளைப் பார்த்த இவர்கள் அடுத்த கட்டமாக மண்டைக்குள்ளே சோதனை செய்யலாமென்று முடிவு செய்கிறார்கள். ஸ்கேன் செய்து பார்த்தவர்கள், இது உண்மையா இல்லை கற்பனையா என்று மிரண்டு போகிறார்கள். மண்டையின் உள்ளே மூளைக்கு அடியில் இரண்டு கண்களுக்கும் நடுவில் ஒரு கரப்பான் பூச்சி உயிருடன் உலா வந்துகொண்டிருக்கிறது. தான் தூங்கும் போது மூக்கின் வழியே ஒரு கரப்பான் பூச்சி உள் நுழைந்திருக்கிறது என்பதை உணர்கிறார் அந்த பெண்மணி. அது உயிரோடு இருந்தால் திட திரவமாக இருக்கும் மூளையின் உள்ளே புகுந்தால் எல்லாம் நாசம், அது அங்கேயே இறந்துபோனாலும் அதானால் வரும் நோய்த்தொற்றுகள் பெரும் சிக்கலை உருவாக்கும் என்றெல்லாம் அறிந்து அனைவரும் அதிர்ச்சியுறுகிறார்கள். இதுதான் பிரச்சினை என்பதை கண்டறிந்து விட்டோம் நாங்கள், இதை எடுக்க கருவிகள் வேண்டுமானால் ஸ்டான்லி மருத்தவமனைக்கு போங்கள் என்று வழி சொல்லியனுப்பினார்கள் அந்த மருத்துவமனையில்.
 
பெரும் இடி ஒன்று கரப்பான் பூச்சி வடிவில் தலைக்குள் இறங்கியதே என்று எண்ணி அழுது கவலையுற்ற பெண்மணியும் அவரது கணவனும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதற்கப்புறம்
நடந்தது வரலாறு.
 
கரப்பான் பூச்சியை உயிரோடு எடுத்து ஒரு டப்பாவில் போட்டு கையில் கொடுத்துவிட்டார்கள் ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள். அந்தப் பெண்மணியின் அதிர்ச்சி வருத்தத்தை தங்கள் கையுறை அணிந்த கைகளால் துடைத்து மகிழ்ச்சியை தெளித்து விட்டார்கள்.
 
‘ஏன் இந்தப் பெண்மணிக்கு இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?’ ‘வாழ்க்கை ஏன் சில விஷயங்களை நடத்துகிறது?’ போன்ற சில விஷயங்கள் நமக்கு எட்டுவதில்லை. நமக்கு புரிவதில்லை. ஆனால் ஒன்று புரிகிறது.
 
வாழ்வில் சில நேரங்களில் சிலர் மூலமாக நமக்கு கிடைக்கும் உதவிகளை, ‘நன்றி’ என்ற வார்த்தையாலோ பொருள்களாலோ ஈடு செய்யவே முடிவதில்லை. என்ன கொடுத்தாலும் என்ன செய்தாலும் ஈடு செய்யமுடியவதில்லை நாம் பெற்ற சில உதவிகளை.
 
ஃபெடரர், தான் விளையாடும் மேட்ச்களில் தனது குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் விபத்தில் இறந்து போன தனது கோச் பீட்டர் கார்ட்டரின் பெற்றோர்களை உட்கார வைப்பது இதனால்தான் போல!
 
: பரமன் பச்சைமுத்து
03.02.2016
Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *