நதி போல ஓடிக்கொண்டிரு – 7

screenshot_20170206-124034.jpg

7.  ‘உடனிருக்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவரே!’

‘ஈசனருள் இருந்தால் இடி விழுந்தவனும் எழுந்து போவான்,  ஈசனருள் இல்லையென்றால் இடறி விழுந்தவனும் இறந்து போவான்!’ என்று தனது ‘பாண்டவர் பூமி’ நூலில் எழுதியிருப்பார் கவிஞர் வாலி.  

யாரோ எங்கிருந்தோ திடீரென வந்து நம்மை நாம் எதிர்கொள்ளவிருந்த ஆபத்திலிருந்து கைபிடித்து அல்லது குரல் கொடுத்து நம்மை நகர்த்தி காத்து விடுகிறார்கள். வாழ்க்கை யாரையாவது அனுப்பி காத்து விடுகிறது. 

செல்லிடப் பேசி சிணுங்கி அதை  கவனிப்பில் கவனம் குவித்த சிவநெறித்தேவன்,  அவனுக்கு பின்னே ‘புஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சத்தம் வந்ததையும் சில மான்கள் அவ்விடத்தை விட்டு சிதறி ஓடியதையும் இரண்டு கண்கள் அவனையே கவனிப்பதையும் அறியவில்லை. 

‘ஹலோ குரு…. கொத்தில்வா குரூ, காடேட்டூ, காடேம்மே…ஹலோ ஹலோ… மூவ்’ 

எதிரில் ஒருவர் கன்னடத்தில் தன்னைப் பார்த்து ஏதோ சொல்கிறார், என்ன என்று புரியாவிட்டாலும் அதில் தெரிந்த அவசரத்தில் ஏதோ ஆபத்து என்று உணர்ந்த சிவநெறித்தேவன் லேசாக பின் புறம் திரும்பி பார்த்தான்.  பகீரென்றது. முட்டி விடும் தூரத்தில் ‘புஸ்ஸ்ஸ்’ என்று மூச்செறிந்து கொண்டு நின்றது ஒரு காட்டெருமை.  சுதாரித்து பைக்கில் கைவைத்து ஆக்சிலேட்டரை  முறுக்கி சர்ரென அங்கிருந்து நகர்ந்து எதிர்ப்பக்கம் போய் நின்றான்.  

‘அப்பா… இண்டியன் கோர் எனப்படும் காட்டெருமை. ஒ இதைத்தான் அவன் காடேட்டூ, காடேம்மே என்று ஏதோ சொன்னானா! அவனுக்கு மொதல்ல நன்றி சொல்லணும். கன்னடத்துல எப்படி நன்றி சொல்றது?’ என்று திரும்பும்போது, பச்சை வண்ண சீருடையிலிருந்த அவன் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.  

‘ஏனு குரு, கொத்தில்வா!’ 

‘பாக்கலைங்க, ஃபோன பாத்துட்டு இருந்தேன்.’

‘ஓ! தமிளா, சரி நல்லது!’

‘அட… தமிழ் தெரியுதே உங்களுக்கு!’

‘குரு… எங்க அம்மா ஊரு தமிழ்நாடு. கும்பகோணம் பக்கம் குத்தாலம். அப்பா கன்னடம். அதனால புரியும். எங்கம்மா நிறைய ‘போனியின் சொல்வான்’ பத்தி சொல்லுவாங்க. ராஜராஜன் பத்தி சொல்லுவாங்க.  நாங்கதான் புலிகேசி தேசத்துல இருக்கோம். இப்படி கேட்டாத்தான் உண்டு’

‘போனியின் சொல்வான்…? ஓ பொன்னியின் செல்வன்?’ 

‘ஆமாம்! அதான். டீ சாப்றேங்களா?’ 

‘ம்… வண்டிய எடுங்க! அப்படி போங்க!’ 

அவன் பைக்கில் அமர்ந்ததும் வண்டியை செலுத்தினான் சிவநெறித்தேவன். 

‘நீங்க என்ன செய்யறீங்க ஐயா?’

‘ஃபோர்ஸ்ட் டிபார்ட்மென்ட். ட்ரைனிங்ல இருக்கேன். இந்த லிமிட்ட நாம கண்காணிக்கணும்.’

‘வனச் சரகர்?’

‘அதே!’

‘ஐயோ…’ இரண்டு பேருமே கூவினார்கள்.  தூரத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு பெரிய கருப்புப் பறவை துடித்துக் கொண்டிருந்தது. சிவநெறித்தேவன் வண்டியை நிறுத்துவதற்குள் இறங்கி ஓடினார் அந்த வனச்சரகர். 

ஓடிச்சென்று கையிலெடுத்தார்.  அவர் கையில் தனது கடைசி மூச்சை விட்டு உயிரை விட்டது அந்தப் பறவை.  அதை கையில் வைத்துக் கொண்டு வெகு நேரம் வெறித்தபடி இருந்தார் அவர். 

‘ச்சீ… கொன்னுட்டானுவோ!’

‘பாவிங்களா.. இதுங்க என்னடா பண்ணுச்சி உங்களுக்கு?’

யாரைப் பார்த்து கேட்கிறார் என்பது புரியவில்லை சிவநேறித்தேவனுக்கு. 

‘யாரு ?’

‘நீங்க, நான், இந்த உலகம்.. நம்ம எல்லோரும்தான்!’

‘இது என்ன தெரியுமா?  எங்கேருந்து வந்திருக்கு தெரியுமா?’

கறுப்பு நிறத்தில் காகம் போலிருந்தது. ஆனால் இறக்கையும் கண்களும்  சிவப்பாக இருந்தது.  மிக அழகாக இருந்த அது என்ன பறவை என்று அவனுக்குத் தெரியவில்லை.

‘தெரியலயே!’

‘கொன்னுட்டானுவோ! இது ‘செம்போத்து’. ஈழத்துலேருந்து பறந்து வந்த  பறவ இது. ‘

‘செம்போத்து! இப்படி ஒரு பறவையா?’

‘இதுக்கு இன்னொரு பேரு செவப்பு காக்கா!’ 

‘குயில் மாதிரி இருக்கு. பெருசா இருக்கு. றேக்கயும் கண்ணும் மட்டும் சிவப்பா இருக்கு.’ 

‘கொன்னுட்டானுவோ’ 

‘யாரு கொன்னா, எப்படி கொன்னாங்க?’ 

‘நீயுந்தான்! இங்க இருக்கிற மனுஷப் பயலுவ பூராவுந்தான்!’

சிவநெறித்தேவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் கையில் இருக்கும் அந்தப் பறவையின் உடலையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன் தொடர்ந்தான்.  

‘செம்போத்துப் பறவைங்க காட்டுல வசிக்கும். இரவில் சரியாக கண் தெரியாது இதுங்களுக்கு. அப்ப இதுங்களால உயரமா பறக்க முடியாது.  தாழ்வாகவே பறக்குங்க இதுங்க.’

‘ம்ம்ம்ம்… எப்படி செத்துச்சி? யாரு கொன்னா?’ 

‘இரவில் சாலையோரம் மேயும் இதுங்கள வண்டியில போறவன் எவனோ அடிச்சிட்டு போயிட்டான். இதுங்களுக்கு இரவில் கண்ணு தெரியாது, உயரமா பறக்கவும் முடியாது’

‘காட்டுக்குள்ள எதுக்குடா வண்டியில வரீங்க மனுஷங்களா? பஸ், கார், பைக்ன்னு எதுக்கு உள்ள எடுத்திட்டு வர்றீங்க? காடு தூரத்தில இருந்தே மனுஷப் பயலுவோளுக்கு உதவி செய்யுது. மனுஷங்க காட்டுக்குள்ள வந்து காட்ட நாசம் செய்யறாங்க.‘

‘புலிகளை அழிச்சீங்க! மயில்களை கொன்னீங்க. சிட்டுக் குருவிகளை அழிச்சீங்க. காத்த அழிச்சீங்க. மண் உயிர்களை, மண் புழுவை அழிச்சீங்க, யானைகளை கொன்னுட்டே இருக்கீங்க. இப்ப ஒரு அரிய பறவை. செம்போத்து! அதையும் கொல்றீங்களேடா பாவிங்களா?’

‘ஐயா… உங்க உணர்வு புரியுது. ஆனா இதுக்கு என்ன செய்யணும்ன்னு புரியல’

‘மொதல்ல…  காடு ஒரு தனி உலகம். ஒண்ணை ஒண்ணு சார்ந்து உயிர்ப்போட இருக்கும் உலகம்.  இந்த மரம், அதில இருக்கற பழம், அதை திங்க உட்கார்ற பறவை, அந்த பறவையின் எச்சம் விழறதுல வளர்ற நுண்ணுயிரி, அது செய்யற உதவியில இன்னும் செழிக்கற மரம்ண்னு இங்க எல்லாமே ஒண்ணோடு ஒண்ணு பின்னியது.  இங்கே உயிரினங்கள் வயித்துக்காக சாப்பிடும். அது கொலை இல்லை. ஆனா.. மனுஷன் காட்டுக்குள பூந்ததும் உயிர்கள காவு வாங்கறான். சும்மாவே காரணமில்லாம காவு வாங்கறான். இந்த செம்போத்து… எதுக்காக செத்தது?’

சிவநெறித்தேவன் அந்தப் பறவையை தன் கைகளில் வாங்கிக் கொண்டான்.  சற்று முன்பு வரை உயிரோடிருந்த ஒரு பறவை இப்போது வெறும் உடலாக இவன் கையில். பட்டுப் போல மென்மையாக இருந்தது. 

‘மொதல்ல.. காட்டைப் பத்தி புரிஞ்சிக்கணும். இல்லன்னா இங்க வரக் கூடாது. 

ரெண்டாவது, உங்களை எவன் தீனி கேட்டான் போடச் சொல்லி. கார்ல போகும்போது பறவைகளுக்கும் கொரங்குகளுக்கும்  பெரிய தர்மப் பிரபு போல நீங்க கொண்டு வர்றத்தில மிச்சம் இருக்கிற புளிசோத்தையும் லேய்ஸ் சிப்சையும் போட்டுட்டு போறீங்க. பாவிங்க. அதுங்களுக்கான உணவே இல்ல அது. அத சாப்டுட்து அதுங்க உடல் கெடுது. நீங்க போட்டுப்போற அந்த உணவைத் தேடித்தான் சாலையோரங்களில் சிறு விலங்குகளும் பறவைகளும் வருதுங்க. வண்டியில் அடிபட்டு சாவுதுங்க.’

‘மூணாவது, காட்டுக்குள் இத்தனை மணிக்கு மேல போகக் கூடாது, அப்படி போனா விவரம் தெரிந்த ஓட்டுனர்தான் போவாங்க. சொந்தக் கார் என்பதால் ஒண்ணும் தெரியலைன்னாலும் வேகமா போயிடறான்.  காட்டுக்குள் வரும்போது, நாம அவங்க வீட்டுக்குள்ள வர்றோம். அதுங்கள இடைஞ்சல் பண்ணாம போகணும் அப்படீங்கற நெனைப்பு இருக்கணும்’ 

‘வண்டிய இங்கயே நிறுத்திட்டு வாங்க. நடந்து போயி டீ சாப்பிடுவோம்!’ 

முதுகில் பையோடும், கையில் பறவையின் உடலோடும் அவரை பின்தொடர்ந்து நடந்தான் சிவநெறித்தேவன்.

‘செம்போத்துப் பறவையே, செம்போத்துப் பறவையே… நீ ஈழத்திலிருந்து பறந்து வந்தாயா?  விருந்தினராய் நம்பி வந்திருந்த உன்னை வந்த இடத்தில் வைத்து கொன்று விட்டோமா நாங்கள்? அகதிகளை வந்தவர்களை கொல்லும் தேசத்தினரைப் போல, விருந்தினராய் வந்தவரை வஞ்சித்து கொலை செய்வதைப் போல… உன்னை காவு கொடுத்து விட்டோமா? நீ பழம் உண்டு இட்ட எச்சத்தின் வழியே எத்தனை மரங்கள் புதிதாய் செழித்திருக்கும் இந்தப் பூமியில்! என் காடு செழிக்க உதவிய என் பக்கத்து நாட்டுப் பறவையே…  உடன் இருப்பதைக் கொன்று என்ன சாதிக்கப் போகிறோம் நாங்கள்?  சார்ந்தவர்களை சாகடித்துவிட்டால் உண்மையில் பாதிப்பு எங்களுக்குத்தானே!’ 

நடந்து கொண்டே காட்டை பார்த்தான். காடு வேறுவிதமாய் தெரிந்தது இப்போது.  ஒவ்வொரு மரமும் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி மேகத்தை இழுப்பதாக தெரிந்தது. கீழிருக்கும் கிளைகள் இவன் மீதும் மனிதர்கள் மீதும் ஆக்சிஜனை தள்ளுவதாக தெரிந்தது. எல்லாமே வேறு விதமாகத் தெரிந்தது. 

 ‘காடு ஒன்றை சொல்லித் தருகிறது. மரம், செடி, கொடி, பறவை, பறவையின் எச்சம், நுண்ணுயிரி, நீர், நிலம், ஆகாயம், காற்று என எல்லாமும் ஒன்றோடொன்று இணைந்தது. தொடர்புடையது. எல்லாவற்றுக்கும் எல்லாமும் வேண்டியவை. அதனதன் இயல்பில் வாழ்ந்து உன்னதம் சேர்க்கின்றன. அடுத்ததை தொந்தரவு செய்வதில்லை. இரைக்காக கொல்லும் இயல்பைத் தவிர வேறெதற்காகவும்  எதுவும் எதையும் அழிப்பதில்லை.’

‘மனிதர்களுக்கும் அப்படிதானே! நாம் எல்லோரும் ஒன்றோடொன்று இணைந்தவர்கள்தானே.  என் அலுவலக வாசலில் நிற்கும் அந்த செக்யூரிட்டி இருப்பதால்தானே அங்கே நான் விட்டுவிட்டு வந்த என் கார் பாதுகாப்பாக இருக்கிறது! இரவு ஷிஃட்டில் இருக்கும் ஏதோவொரு மின்துறை ஊழியன் சரியாக இயங்குவதால்தானே எங்களுக்கு மின்சாரம் வருகிறது. மின்சாரம் சீராக வருவதால்தான் நாங்கள் பராமரிக்கும் இணையதள கணிப்பொறி செர்வர்கள் இயங்குகின்றன. என் நிறுவனத்திற்கு வளம் வருகிறது. எனக்கும் பணியும் பாதுகாப்பும் கிடைக்கிறது.’

‘கிராமத்தில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் ஏதோவொரு மாமாவிடம் நான் பேசுவதேயில்லை.  ஆனால் ஊரிலிருக்கும் என் தந்தைக்கும் தாய்க்கும் அவர் பக்கத்தில் இருப்பதில் ஒரு தெம்பு இருக்கிறது.  பேசுவதற்காகவேணும் மனிதனுக்கு மனிதன் தேவைப்படுகிறான்.  எல்லோருக்கும் எல்லோரும் முக்கியம்.’    

அலுவலகத்தில் நண்பர்களிடம் பேச வேண்டும் போலிருந்தது. ஊருக்கு ஃபோன் செய்து பேச வேண்டும் போலிருந்தது.   வாழ்வில் வரும் ஒவ்வொரு மனிதனும் முக்கியம் என்று தோன்றியது. 

அவர்கள் நடந்தார்கள்.  

‘சர்வர் டவுன். உடனே கூப்பிடவும் அல்லது வரவும்’ என்று அவனுக்கு வந்த குறுந்தகவல் பற்றியும், ‘ அடுத்த வாரக் கடைசியிலிருந்து நீங்கள் இந்திய பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளீர்கள்’ என்று மத்வமைந்தனுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பற்றியோ அவனுக்கு தெரியவில்லை அப்போது. 
(தொடரும்)  

‘வளர்ச்சி’ தமிழ் மாத இதழில் நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை + தன்னம்பிக்கைத் தொடர் ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ 

: பரமன் பச்சைமுத்து 

சென்னை 

06.02.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *