‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ – Part 8

nathipol 8

nathipol 8

8. ‘துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை

 

மிக உயரத்திலிருக்கும்போது கீழே குனிந்து பார்க்காதவரை உயரம் பற்றிய பிரக்ஞை எதுவுமேயில்லாமல் செய்வதை தொடரமுடியும்.  கீழே ஒரு முறை பார்த்துவிட்டால் ‘எவ்வளவு உயரம்!’ என்பதான ஒரு எண்ணம் வந்துவிடும்.

டோக்யோவின் ஷினகாவா பகுதியில் இருக்கும் பெரும்புகழ்பெற்ற ‘ஹோட்டல் ஷினகாவா பிரின்ஸ்’சின் முப்பத்தியேழாவது மாடியில் அமர்ந்திருந்த மத்வமைந்தனுக்கு வெளியில் தெரிந்த வானமும் மேகங்களும் எப்போதும் போலவே தெரிந்தன.  வெளியில் வானமும் மேகங்களும் மட்டுமே தெரிந்ததால் அது முப்பதியேழாவது மாடி மிக உயரம் என்பது தெரியவேயில்லை.  இன்னும் கொஞ்சம் நேரம் போனால் உடல் நடுங்கும் என்ற அளவிற்கு குளிரூட்டப்பட்டிருந்த அந்த ‘பேன்க்கொயட் ஹால்’லில் குறித்த நேரத்திற்கு முன்னமே வந்துவிட்ட அவன் காத்திருந்தான்.   இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போவது அவனுக்கான விழா.   மத்வமைந்தனின் மனம் எங்கோ பறந்து ஓடியது.

ஜப்பான் என்ற இந்த தேசத்திற்கு முதன்முதலாய் வந்திறங்கியபோது இதே ஹோட்டலின் வேறொரு அரங்கில்தான் அவனக்கு ஜப்பானிய கலாசார பண்பாடு மற்றும் உணவருந்தும் முறை பற்றிய பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது.  முதன்முதலில் உணவுக் குச்சி எனப்படும் ‘சாப் ஸ்டிக்’கை அவன் எதிர்கொண்டது அங்கேதான். 

‘இந்த ஒரு ஜோடி உணவுக் குச்சியை செங்குத்தாக வானத்தைப் பார்க்கும் வகையில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அந்த உணவை நம் முன்னோர்களுக்குப் படைக்கிறோம் என்று பொருள்படும்…….  இங்கே ஜப்பானில் ரசத்தை தேக்கரண்டியால் பருகக் கூடாது. குவளையில் நேரடியாக வாய் வைத்தே குடிக்க வேண்டும்….   ஸுஷி வகை உணவுகளை உண்ணும்போது உணவுக் குச்சியில்லாமல் கைகளால் எடுத்து உண்ணலாம். ஸுஷி வகை உணவில், தட்டிலிருந்து எதையாவது எடுத்து உண்டால் ஒரே முறையில் வாயில் இட்டுக்கொள்ள வேண்டும் அல்லது கையால் பிடித்துக் கொண்டு கடித்துக் கடித்து உண்டு முடிக்க வேண்டும்.  எக்காரணத்தைக் கொண்டும் கடித்து விட்டு தட்டில் மீதியை வைக்கக் கூடாது. அது மிக அருவருக்கத் தக்க செயல்….. உணவுக் குச்சிகளை ஒன்றோடொன்று உரசி ஒசை எழுப்பக் கூடாது…’

மட்ச்சுகோ சேஆன் என்ற சராசரி உயரம் கொண்ட ஒரு ஜப்பானிய பெண்மணி இரு நாள் பயிற்சி வகுப்பில் சொல்லித்தந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது அவனுக்கு. 

‘இப்படித்தான் இந்தியாவிற்கு வரும் வேற்றுதேசத்துகாரர்களுக்கு யாரேனும் ஒரு அன்னலட்சுமி வகுப்பெடுப்பாரோ! ‘தென்னிந்தியாவில் உணவை உண்ணும்போது உணவை எடுப்பதற்கு நான்கு விரல்களை ஒரு தேக்கரண்டி போல பயன்படுத்த வேண்டும். விரல்களின் இரண்டாவது மடிப்பு வரை பயன்படுத்தலாம்.  ஐந்தாவது விரலாகிய கட்டை விரலை, உணவை உள்ளே தள்ளுவதற்கு பயன்படுத்தலாம். ஐந்து விரலையும் உள்ளே திணிப்பது அநாகரீகம்.  வாழை இலையில் உணவருந்தி முடிக்கும்போது மேல்பாகத்து இலை கீழ்பாகத்து இலையை மூடுமாறு மடிக்க வேண்டும். கீழ் பாகத்தை மேல் பாகத்தை மூடுமாறு மடிக்கக் கூடாது. அது அவமரியாதை. இறப்பு போன்ற  துக்க காரியங்களின் போது மட்டுமே அப்படி மடிக்க வேண்டும்.  அடுத்தவர் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.  நீங்கள் உண்டு முடித்துவிட்டால் பக்கத்திலிருப்பவரிடம் அனுமதி பெற்றே எழ வேண்டும்’ என்றெல்லாம் சொல்லித் தருவார்களோ.   

‘குட் ஈவினிங் மாத்வமாய்ந்தான்!’

 தனது சுய சிந்தனையில் ஆழ்ந்திருந்த மத்வமைந்தன் வெளியுலகம் வந்தான். எதிரில் இஸாவோ நிற்பதைக் கண்டான்.  பதில் வணக்கம் ஜப்பானிய மொழியில் சொன்னான்.

‘கொன்னிச்சிவா’

‘ஹை… கொன்னிசிவா’

அவர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள். தனது அலுவலகப் தோழர்கள் ஒவ்வொன்றாய் உள்ளே வசந்து கூடுவதை கண்டான் மத்வமைந்தன்.  ஹோட்டலின் சிப்பந்தி ஒருவர் நனைந்த ஆனால் சூடான கைத்துவாலைகளை தந்து கொண்டிருந்தார்.  அவனும் ஒன்றை வாங்கி தனது கைகளையும் முகத்தையும் அழுத்திச் துடைத்துக் கொண்டான்.  கூட்டம் தொடங்குகிறது என்று அறிவிப்பு வந்ததும் அவரவர் ஒரு இடம் தேடி அமர்ந்து கொண்டனர்.  விழா நாயகனான மத்வ மைந்தன் மேடைக்கு அழைக்கப் பட்டு அமர்த்தப்பட்டான்.

 திட்ட இயக்குனர் மசாஹிக்கோ எழுந்து பேசத் தொடங்கினார்.

‘இந்தியாவிலிருந்து வந்து சில காலங்களில் நம்மோடு நெருக்கமாகி நம்மோடு கலந்து பழகி பணியாற்றி ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து விட்டவர் திரு. மத்வமைந்தன்.  இப்போது தனது திட்டப் பணிகள் முடித்து இந்தியாவிற்கே திரும்புகிறார். இன்னும் கொஞ்சம் நாட்கள் அவர் நம்மோடு இருந்திருக்கலாம்.  தலைமை அலுவலகம் திட்டப் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பும்படி கொட்டுள்ளதால் அவரும் கிளம்பவேண்டியதாகிறது.’

‘மத்வமைந்தன் கடல் கடந்த அந்த நமது புத்த பகவானின் அவதார தேசத்திற்கு போய் சேர்ந்து விட்டாலும், அவருக்கும் நமக்குமான தூரம் அதிகம் இருக்கப் போவதில்லை. செல்லிடப் பேசியின் வழியே, குறுந்தகவல் வழியே, இணையத்தின் வழியே அவரோடு இணைந்து விடலாம் நாம்!’

‘மிகத் திறமையாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்ட மத்வமைந்தனிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது நமக்கு. ஈகோ பார்க்காமல் கிடைத்த இந்தக் கொஞ்ச நேரத்தை பயன்படுத்தி கலந்துரையாடலாம்.  இதோ மத்வ மைந்தன் உங்கள் முன்னால்…’

 மேடையின் நடுவில் அமர்த்தப்பட்ட மத்வமைந்தனை நோக்கி கேள்விகள் வந்தன.

‘இந்த உலகத்திலேயே உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?’

‘என்னை ரொம்பப் பிடிக்கும்’

‘உங்க வாழ்க்கை இப்படித்தான் போகணும்ன்னு திட்டமிட்டு போவீங்களா?’

‘திட்டமிட்டு அதை நோக்கி நகர்வேன். ஆனால் வாழ்க்கை வேறு விதமான நிகழ்வுகளைத் தந்தாலும் ஏற்றுக் கொண்டு அடுத்து என்ன செய்வதென்று பார்ப்பேன்!’

‘நான் உங்களோட இரண்டு  ‘ப்ராஜெக்ட்’ல வேலை பார்த்திருக்கேன். இரண்டுமே மிக மிக சவால்களும் அதிக சிக்கல்களும் நிறைந்த ப்ராஜெக்ட்ஸ்.  மற்றவர்கள் நிச்சயம் பின் வாங்கியிருப்பார்கள்.  நீங்கள் எப்படி இவற்றை எதிர்கொண்டீர்கள்? ஏன் பயமே வரவில்லை? அது என்ன ரகசியம்.  நான் உங்க ஜூனியர். அத சொல்லிக் கொடுத்துவிட்டால் எனது தொழில்முறை வாழ்க்கை மேம்பட்டு விடும். சொல்லுங்கள்’

‘நல்ல கேள்வி! முதல் விஷயம். நாம் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு விஷயத்தை அல்லது சூழலை எதிர்கொள்ளப் போகும்போது நமக்கு பயம் என்ற உணர்வு வரும். தொண்ணூற்றியைந்து சதவீதம் பேருக்கு இந்தப் பயம் வரவே செய்யும். இது இயல்பு. பயம் ஒரு வகையில் உங்களை எச்சரிக்கிறது. ‘மை பாய், பார்த்து எச்சரிக்கையாகப் போ!’ என்று சொல்லி அனுப்புகிறது.

இந்த பய உணர்வை புரிந்து கொண்டு அடுத்த நிலைக்கு போக வேண்டும்.  இங்கேயே நின்று விடுபவர்கள் வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். இதைக் கடந்து மேலே செல்பவர்கள் வெற்றியாளனாகக் கொண்டாடப்படுகிறார்கள்.  பயம் என்பது ‘இழப்பு’ பற்றியது. ‘இருப்பதும் போய்விடுமோ!’ ‘பின் எதற்காக அடுத்த நிலைக்கு முயற்சிக்க வேண்டும்?’ ‘இப்படியே இருந்துவிடலாமே!’ என்றெல்லாம் ஒருவனை சிந்திக்கச் செய்து அவனை மேலே ஏற விடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறது.  இதைத் தாண்டிச் சென்றவர்கள் வெற்றியாளர்களாய் நிற்பார்கள். சாதனைகள் செய்து மிளிர்வார்கள்.

‘எப்படி இதைத் தாண்டிச் செல்ல முடிகிறது அவர்களால்?’  அவர்கள் அனைவரும் வெற்றிக்கான ஒரு அணுகுமுறையை வைத்திருப்பார்கள்.  என்ன அணுகுமுறை? ஒரு கேள்வியை கேட்டு, அதை வைத்து இயங்குவார்கள்.

“நான் ஈடுபடப் போகும் இதில், ஒரு வேளை எல்லாமே தவறாகப் போய் விட்டால், இறுதியில் என்னவாகும்? “  இந்த ஒரு கேள்வி எல்லாவற்றையும் மாற்றிவிடும்.  ‘அட் த மேக்சிமம் வாட் கேன் கோ ராங்?’ என்ற இந்தக் கேள்வி நம்மை என்னவெல்லாம் இழக்க நேரிடலாம், எதெல்லாம் தவறாக போகலாம், ‘கடைசியில் என்ன ஆகும்?’ என்று எண்ணிப் பார்க்கச் செய்யும். 

பயம் என்பது இழப்பைப் பற்றியது. இருப்பது போய்விடுமோ என்று எண்ணும் போது பயம் வருகிறது.  ‘சரி, என்னவெல்லாம் போய்விடும்?’ என்ற திசையில் சிந்திக்கும்போதும் பயத்தைத் தாண்டிய பார்வை வருகிறது. பயத்தைக் கடந்து பார்ப்பதால் பயம் குறைந்து துணிச்சல் வந்துவிடுகிறது.

எதுவெல்லாம் தவறாகப் போகும் என்று சிந்திக்க முடிவதால், அதைப் பற்றி முன்கூட்டியே நினைக்கப் முடிகிறது, அது நடவாமல் இருக்க என்ன செய்யலாம் என்றும், ஒரு வேலை அப்படி ஆகிவிட்டால் என்ன செய்யலாம் என்றும் தீர்வுகள் நோக்கி பயணிக்க முடிகிறது.  ‘அதிக பட்சம் என்ன இழப்பு ஏற்படும், பெரிய இழப்பு என்ன,  எதிர்கொள்வோம்!’ என்ற நிலைக்கு மனம் வந்து விடுகிறது.

துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை!’    உளவியல் ரீதியாக ‘இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை’ என்ற நிலையில் இருப்பவனுக்கு இழப்பைப் பற்றிய பயம் வருவதில்லை. துணிந்து செயல்படும் நிலைக்கு வந்துவிடுகிறான் அவன்.  நான் என்னை அந்த நிலையில் வைத்துப் பார்த்து கணக்கிட்டு அங்கிருந்து செயல்படுகிறேன். ‘இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை’ என்ற நிலையில் நின்று பார்த்து கணக்கிட்டு ‘துணிந்தும் துரிதமாகவும் செயல்படுபவனுக்கு ஒவ்வொன்றும் வரவே!’ என்று செயலில் இறங்கி விடுகிறேன்.  துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை!’    பயத்தை வென்று ஜெயத்தை கொள்ளும் வழி இதுவே! ‘

‘நீங்கள், ஜப்பானிலிருந்து போனதும் எங்களை மிஸ் பண்ணுவீர்களா?’

‘ஜப்பான் தேசத்தை அதிகம் மிஸ் பண்ணுவேன்!’

‘எப்போது நீங்கள் இந்தியாவிற்குப் புறப்படப் போகிறீர்கள்?’

‘நரித்தா ஏர்போர்ட்டிலிருந்து நாளை மறுநாள் இரவு விமானம்’

                                                                                                                                                        (தொடரும்)

  ‘வளர்ச்சி’ தமிழ் மாத இதழில் நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை + தன்னம்பிக்கைத் தொடர் ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’

: பரமன் பச்சைமுத்து
சென்னை

04.03.2017
Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *