சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

சிட்டுக்குருவி1

சிட்டுக்குருவி1

அதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற
அலட்டல்கள் அதிகமில்லா
அக்காலமதில்

சித்திரை உச்சத்திலும்
உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள்
வேய்ந்த வீட்டில்

அறுத்த நெற்கதிர்களை
அழகாகக் கட்டி
உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி

அடுத்த அதிகாலை
அதிசயமொன்று நடந்தது
அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது
அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது

எங்கிருந்தோ வந்து சேர்ந்தன
சின்னஞ்சிறிய சீவன்களிரண்டு
நான் நின்றேன் வியந்துமிரண்டு

நாங்கள் வாழ்ந்த வீட்டிற்குள்ளே
தாங்கள் வாழ ஓர் வீடு கட்டின
வைக்கோலை செருகி கூடு கட்டின
இணைகள் இரண்டும் கூடிக் களித்தன
விறைவாய் வெளிர்பச்சை முட்டைகள் இட்டன

பள்ளிக்குச் சென்ற போதும்
பாடங்கள் படித்த போதும்
பையனிவன் மனசெல்லாம்
உத்தரத்து குருவிகளிடமே

பள்ளி மணியடித்ததும் பையைக்கூட எடுக்காமல்
பறந்தோடி வருவேன்
பழுப்புக் குருவிகளைப் பார்க்க

பழைய சோற்றின் பருக்கைகள் இறைத்து விருந்து வைப்பாள் அம்மா
தரைக்கு இறங்கி கொத்தித் தின்று கத்தித் திரியும் அவை சும்மா

குருவிகள் வளர வளர்ந்தேன்,
குருகளோடே வளர்ந்தேன்,
குருவிகளோடே அலைந்தேன்
பறக்கும் குருவிகளில் யாவிலும்
என் வீட்டுக் குருவியெது என்றே சுழன்றேன்

நான் வளர்ந்து நின்றதும்
பாலித்தீன் பைகள் செய்து
தானியங்கள் தரையில் இறையாமல் தடுத்தேன்

உத்தரத்தின் உயரத்தில்
காற்றை வாரியிறைக்கும் குளுகுளு மின் விசிறி வைத்தேன்

மண்புழுக்கள் கொண்டிருந்த மண்சாலைகளை மாற்றித்
தார்ச் சாலைகளாக்கி
தகிக்கும் வெப்பம் உமிழச் செய்தேன்

காற்றும் வெளிச்சமும் உள்நுழையா மாளிகைகள் கட்டி
கண்ணாடி பதித்துக் குளிரூட்டிக் கொண்டேன்

மரங்களை அழித்தேன்
புதர்களை கழித்தேன்
விளை நிலங்களை விலை நிலங்களாக்கினேன்

உள்ளேயும் வரமுடியாமல்
வெளியேயும் வாழ முடியாமல் சிட்டுக்கள்
சில பறந்தோடிப்போயின
பல செத்தொழிந்தன

எறும்பு ஈ மாடு கன்று குருவி
செடி கொடி மண் என்று எல்லாவற்றோடும் வாழ்ந்தவர்களுக்குப் பிறந்த நான்
எதைப்பற்றியும் அக்கறையின்றி
தான் மட்டும் வாழும் வழியில் விரைந்தேன்

‘சிட்டுக்குருவிகள் செத்தொழிந்தன’ என்றோர் அறிக்கை கேட்டதும் அரண்டெழுந்தேன் ஒரு நாள்

செல்லிடப் பேசியின் கோபுரங்கள்தான் காரணமென்றொரு பழியை சும்மா சுமத்திவிட்டு என் வழியில் விரைகிறேன்!

நான்…
சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

#உலக ஊர்க்குருவிகள் நாள்
#மார்ச் 20

– பரமன் பச்சைமுத்து
சென்னை
20.03.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *