‘மாநகரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Maanagaram-2016

Maanagaram-2016

பிழைப்புக்காக பலர் வந்துகொண்டேயிருக்கும் பெருநகரில் பிழைப்புக்காக எதையும் செய்யும் சில மனிதர்களின் பிழையால், பிழையில்லாமல் போய்க்கொண்டிருக்கும் சிலரது பிழைப்பில் மண் விழுகிறது. எதிரேபார்த்திராத அந்த அனுபவங்களை அந்த சாமான்ய மனிதர்கள் எப்படி எதிர் கொள்ளுகிறார்கள் என்பதை பக்கத்திலிருந்து பார்ப்பது போல படமாக்கித் தந்திருக்கிறார்கள்.  

‘ஊருக்கே போயிடறேன்’ என்பவனையும் ‘ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை’ என்பவனையும் இரண்டு நேர்கோடுகளில் கொண்டு வந்து கடைசியில் இணைத்த விதத்தில், எடுத்துக்கொண்ட கதையை கொஞ்சம் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் கடைசி சீன் வரை இழுத்துக் கட்டிய டைட்டான திரைக்கதையாக தந்த விதத்தில், பாத்திரங்களை ‘நச்’சென்று படைத்து அதற்கான நடிகர்களைத் தேர்வு செய்த விதத்தில் என பல விஷயங்களில் வெற்றிக் கொடி கட்டியிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இதுதான் முதல் படமாம், நம்பமுடியவில்லை!

ஊரிலிருந்து வரும் வரும் பட்டதாரியாக ஸ்ரீ, உள்ளூர் லவ்வில் லயிக்கும் சந்தீப் கிஷன், எச்ஆர் எக்சிகியூட்டிவ்வாக வரும் ரெஜினா, ‘ஒர்ருவா முட்டாய் பத்து குடுங்க..ம்ம்… ஒன்னு..ரெண்டு…மூணு…. பத்து, சரி எவ்ளோ ஆச்சி?’ என்று கேக்கும் ராமதாஸ் முணீஸ்காந்த், சார்லி, ‘நான்தான் கார்த்திக், இவர் எங்க ட்ரைவர், யோவ் வாய்யா!’ என கலக்கும் அந்த சிறுவன், காவல்துறை அதிகாரிகள் என ஒவ்வொருவரும் அருமையாக தங்களைத் தந்திருக்கின்றனர், இந்தப் படம் இவர்களுக்கு ஒரு விசிடிங் கார்டாக அமைந்து விட்டது.

எவ்வளவோ நல்ல விஷயங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் நகரத்தை வெறும் கெட்ட விஷயங்களை மட்டுமே கொண்டிருப்பதாக காட்டியிருப்பது கொஞ்சம் நெருடுகிறது என்றாலும் ஒரு வெளியூர்க்காரனின் பார்வையில் ஒரு மாநகரம் முதலில் எப்படித் தெரிகிறது அப்புறம் என்னவாகிறது என்று காட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒப்பனிங் குத்தாட்டம் – ஒரு கையால் லாரியைத் தூக்கும் அசகாய சூர நாயகத்தனம் – காமிராவைப் பார்த்து பேசி கதரடிக்கச்செய்யும் ‘பன்ச்’கள் போன்ற கொடுமைகளைத் தாண்டி ஓர் இயல்பான நல்ல பொழுதுபோக்கான சினிமா தேடுவோர்களுக்கான நம்பிக்கை இந்த படம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘மாநகரம்’ – மகிழ்ச்சி, சிறப்பு. நிச்சயம் பார்க்கலாம்.

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Facebook.com/ParamanPage

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *