‘ப. பாண்டி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

PowerPaandi.png - Copy

PowerPaandi.pngகுடும்பம் குழந்தைகுட்டி வேலை வாழ்க்கை என்றே பம்பரமாகச் சுழன்று இயங்கிப் பழகிய தகப்பன், தன் பிள்ளைகளின் காலத்தில் தாத்தாவாக ஆகும்போது முதிர் பருவத்தில் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை, பொருந்திப் போகும் நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் தனுஷ் அழகாகச் சொல்லியிருக்கும் படம்.

எல்லாமுமாகவும் மையப்புள்ளியாய் இருந்தவன் எதுவாகவும் வேண்டாம் என்று வாழ்க்கை ஓட்டத்தில் ஒதுக்கப்படும் போது உண்டாகும் இந்த முதிர்பருவ உளவியல் பிரச்சினை ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினை. தகப்பன் – மகன், மருமகன் – பேரன்,பேத்திகள் என்று எல்லோரிடமும் எல்லாருக்கும் அன்பு இருந்தாலும், அவரவர் நிலையிலிருந்து இயங்கும்போது அது அடுத்தவர் நிலையில் தவறாகி விடுகிறது என்பதே யதார்த்தமான உண்மை. இந்த நுணுக்கமான உண்மையை பிள்ளைகளுக்கு சமட்டியால் அடித்தும், பெற்றவர்களுக்கு கன்னத்தில் அறைந்தும் என இருதரப்பு பார்வைகளையும் சொல்லி அசத்தி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தனுஷ்.

ராஜ்கிரன், ரேவதி, மடோனா, பிரசன்னா, சாயாசிங், இரு குட்டிகள், பக்கத்து வீட்டு ‘யோ யோ’ பையன் என நடிகர்கள் தேர்விலேயே சரியாகச் செய்து பாதி வெற்றி பெற்றுவிட்டார்.

‘ஜாக்கிங் பண்ணிட்டுதான் மத்ததெல்லாம். ஒடம்பு முக்கியமில்ல!’ என்ற முதல் ஃப்ரேமில் தொடங்கி பலவருட மடிப்புகளைக் கொண்டிருக்கும் அந்த காதல் கடிதத்தை தந்துவிட்டு புல்லட்டில் சிக்னலில் நிற்கும் அந்த கடைசி ஃப்ரேம் வரை படம் மொத்தத்தையும் (ஃப்ளாஷ்பேக் தவிர்த்து) தூக்கி தன் தோளில் சுமக்கிறார் ராஜ்கிரண் ‘பவர்’ஆக. ‘இன்னைக்குத் தாத்தா ஒரு ஸ்டண்ட் சீன் பண்ணேன்!’ என்று சொல்லும் இடங்களில் பேரக்குழந்தைகளிடம் ‘பவர்’ அன்பு, ‘என்னை லெஜண்டு மாதிரி பாக்கறாங்கப்பா!’ என்று தரையில் உட்கார்ந்து சொல்லும் இடத்தில் ஆற்றாமை அங்கீகாரத்தேடல், ‘தட்டித் தூக்கிட்டோம்ல’ எனும்போது உற்சாக பீறிடல், பூந்தொட்டியை நடுவீட்டில் உடைத்துவிட்டு ‘தூக்கம் போவுதா! எத்தனை நாள் தூக்கம் எழந்திருப்போம் உன்ன வளக்க!’ என்று விரல் சொடுக்கும் போது வேதனையை கொட்டும் தகப்பன், யாருமில்லா தனியறையிலும் போர்வைக்குள் கவிழ்ந்து கொண்டு ‘இன்னும் ஒம்மனசுல நான் இருக்கனா?’ என்ற முகநூல் சாட்டில் மற்றும் ரேவதியோடு இருக்கும் அந்த மொட்டைமாடி காட்சியில் தேக்கி வைத்திருந்த சங்கராபுரத்து உணர்வு வழிதல் என ராஜ்கிரண் படம் முழுக்க பட்டையை கிளப்புகிறார். விருது கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ரேவதி அருமையான பாத்திர ஆக்கம். ‘ஊர் என்ன பேசும்?’ என்ற கேள்விக்கு ‘எந்த ஊர்… சென்னையா, ஹைதராபாத்தா இல்ல சங்கராபுரமா? போம்மா!’ என்று மகள் பதில் சொல்லிப் போனபின்பு தனியே அந்த பாதி ராத்திரியில் உள்ளே ஒரு திடீர் உணர்வு பிரவாகம் வந்து அதை விரல்களால் மேசையில் தட்டுமிடத்தில் எழுந்து ஆடும் அந்த இடத்தில் மிளிர்கிறார்.

பிரசன்னாவும், சாயாசிங்கும் பளிச்சென்று இருக்கிறார்கள், நன்றாகச் செய்திருக்கிறார்கள். இவர்கள் பயன்படுத்தப்பட வேண்டியவர்கள்.

‘ஏ ஆட்டம் முடிஞ்சிடிச்சில்ல. வாங்கடா போவோம்!’ ‘இனிமேதான்டி ஆட்டமே இருக்கு!’ என்ற அறிமுகக் காட்சி வசனங்கள் படத்திற்காகவா இல்லை யாருக்காகவோ வைத்ததா என்ற எண்ணம் வரவே செய்கிறது. தனுஷ் நடிப்புப் பற்றி சொல்லவே வேண்டாம். அவரது பாத்திரம் இன்னும் குறைக்கப்பட்டிருக்கலாம். மடோனா நன்றாகச் செய்திருக்கிறார்.

ஐபேட், ஹெட்ஃபோன், திக் ஃப்ரேம் கண்ணாடி, டின் பியர் என வந்து ‘நீ அவங்க வாழ்க்கைய வாழறியா, ஒன் வாழ்க்கைய வாழறியா?’ என்பது மாதிரியான முதிர்ச்சியான கருத்துகளை உதிர்க்கும் எல்லாம் தெரிந்திருக்கும் ஆனால் ‘ யோவ்… பேசறா… ஆனா ஃப்ரெண்டாம்!’ என்று தெரியாமல் தவிக்கும் இக்கால இளைஞன் பாத்திரம் நேர்த்தி. (பிரிவு இல்லாதிருந்தால் இந்த பாத்திரம் அனிருத்திற்கு தரப்பட்டிருக்கும் என்பது என் தனிப்பட்ட ஊகம்)

விஐபியில் ஆரம்பித்த மொட்டைமாடி காட்சிகளை வேல்ராஜ்க்கு இதிலும் தொடரும் பணி தரப்பட்டுள்ளது.

ஷான் ரோல்டனின் பின்னணி சில இடங்களில் ராஜாவை நினைவு படுத்துகிறது. நன்றாக இருக்கிறது.

ராஜ்கிரண், சாயாசிங், வேல்ராஜ் என தான் உயரக் காரணமானவர்களை கூட்டி வந்து படம் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் இயக்குனர்.

முதல் பாதி கொஞ்சம் மெதுவாகப் போகிறது, டிடி பேசுவது அப்படியே தனுஷ் பேசுவது போலவே அதே மாடுலேஷனில் உள்ளது, நல்ல கதையில் சினிமாட்டிக்கான மிகைப்படுத்தல் செருகல்கள் என குறைகள் இருந்தாலும், கதை – அதை சொன்ன விதம் – நடிகர்களின் பங்களிப்பு என பல நிறைகள் உள்ளன.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘ப. பாண்டி’ – பவர்ஃபுல்லான பாண்டி. பாருங்கள்!

: திரைவிமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *