‘பாகுபலி – 2 ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Baahubali-2-New-Poster-Maha-Shivaratri - Copy

Baahubali-2-New-Poster-Maha-Shivaratri

 

 

 

தொடர் படங்கள் எடுக்கும் போது முந்தைய பாகம் கிளப்பிய எதிர்பார்ப்பை ஈடு செய்யும்  கயிற்றின் மேல் நடக்கும் வித்தையையை கவனமாக செய்ய வேண்டிய சுமை ஒரு இயக்குனருக்கு உண்டு. கயிற்றில் நடந்து கடந்து வருவதே சுமை என்னும் பட்சத்தில், பெரிய யானையையும் அலேக்காகத் தூக்கிக் கொண்டு அனாயாசமாக கடந்து வந்து பேருருவம் எடுத்து நிற்கிறார் ராஜமௌலி.

(நீங்கள் இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்பதால் கதை – வசனங்கள் – திருப்பங்கள் பற்றிய விஷயங்களை இங்கே தவிர்த்துவிட்டோம்)

மகாபாரத பீம – அர்ஜுன -பாஞ்சாலி – குந்தி கதைகளைக் கொண்டு பின்னப்பட்டது  என்று செய்திகள் வெளியானாலும் பெரிய பழுவேட்டரையர் – ராஜ மாதா செம்பியன் மாதேவி – மதுராந்தகன் – ஆதித்தகரிகாலன் கொலையுண்டது (ஏன் கொலையுண்டான் ஆதித்த கரிகாலன் என்ற வெளிவராத புதிர்) – அவனது அடுத்த  ரத்தமான அருண்மொழி பல ஆண்டுகளுக்குப்பிறகு பொறுப்பேற்பது – போன்ற அமைப்புகள் ‘பொன்னியின் செல்வன்’ஐ நினைவு கூறவே செய்கின்றன.

நாம் காலகாலமாக சிறுவயதில் கேட்டுப் பழகிய ராஜராணி அரசகுமாரர்கள் கதைதான். அதை திரைக் கதை அமைத்து கொடுத்த விதத்தில், மன்னிக்கவும் இழைத்த விதத்தில் அட்டகாசம் செய்திருக்கிறார் இயக்குனர்.

உயரத்தில் ஓடும் பெரும் நதியை ஒட்டிய அந்த மகிழ்மதியின் அமைப்பு, அதன் அரண்மனை, கோட்டை, அங்கிருந்து கீழே விழும் அருவி (சென்ற பாகத்தில்), குந்தலாபுறக் கோட்டை அரண்மனை, இளவரசியை அழைத்து வரும் அந்தப்படகு, பாடலின் போது அந்தப் படகில் விரியும் காட்சிகள, உள்ளே புதிதாய் வந்தவன் ஓய்வெடுக்கும் அறன்மனையறையில் வைக்கப்பட்டிருக்கும் வெங்காய மற்றும் தானியக் கூடைகள் என சிறு சிறு விஷயங்களில் கூட கலை இயக்குனரும் கணிப்பொறி வரைகலை பொறியாளர்களும் உழைத்து அசத்தி இருக்கின்றனர்.

வைரமுத்துவின் மகன் வசனங்களிலும் பாடல்களிலும் உழைத்திருக்கிறார் (முக்கியமாக அவர் உருவாகியதே முதல் பாகத்தில் வந்த அந்த காலகேய மொழி!) நன்று.

படத்தோடு ஒன்றி உள்ளே இழுத்துப் போகும் இசையைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நாசரும், சத்யராஜும், ரம்யா கிருஷ்ணனும் நிற்கிறார்கள். அசத்துகிறார்கள்.  சென்ற பாகத்தில் இவர்களை விட கொஞ்சம் உயரம் குறைவாகவே தெரிந்த பிரபாஸ் இந்தப் படத்தில் அவர்களைவிட  மிக உயரமாக அனுஷ்காவோடு சேர்ந்து எழுந்து நிற்கிறார்.  அனுஷ்காவின் பாத்திரப் பங்கில் தமன்னா நினைவிலேயே இல்லாமல் போகிறார்.  பிரபாஸ் அள்ளுகிறார், குறிப்பாக பக்கத்து நாட்டு அரண்மனையில் வில்லை வைத்து அதகளம் செய்யும் அவ்வேளையில், அரண்மனையில் தீர்ப்பளிக்கும் நேரத்தில் கீழே நின்று அந்தச் செயல் செய்யும் அவ்வேளையில்.

பிரமாண்டம் என்றால் வெறும் செலவில் மட்டுமல்ல, அதை கொடுக்கும் விதத்தில் கொடுக்கவேண்டும் என்று அடித்துக் காட்டியிருக்கிறார் ராஜமௌலி.  நாயகன் அறிமுக காட்சி, படகுப் பாடல் காட்சி என்று படம் முழுக்க அசத்துகிறார்.  தனக்குப் பிடித்த இளவரசியின் படத்தை கிழக்கு மூலையில் எடை கூடுகிறது என்று காட்டும் அந்த அளவில் தெரிகிறது, பிரமாண்டம், ரசனை, பாத்திர வடிவமைப்பு. உழைத்திருக்கிறார்கள் அத்தனைப்பேரும்.

சமீபத்தில் இப்படியொரு விருந்தை நான் சுவைத்ததில்லை.  ராஜமௌலி மிக மிக உயர்ந்து நிற்கிறார்.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘பாகுபலி – 2’ : பட்டையைக் கிளப்பல், மைல்கல், விருந்து, குடும்பத்தோடு சென்று நிச்சயம் பாருங்கள். மிஸ் செய்ய வேண்டாம்.

 

        திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *