‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று பெயர் பெற்ற சஞ்சய் தத்தின் கதையை வைத்து ராஜ்குமார் ஹிராணி செய்திருக்கும் திரைப்படம் – சஞ்சு.

துவக்க காலத்தில் போதையில் சிக்கிய சஞ்சய் தத், வெகு நாட்களுக்குப் பிறகு ஏகே – 56 வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு வழக்கில் சிக்கி சிறை சென்ற சஞ்சய் தத் என்ற இரண்டு பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு திரை பின்னியிருக்கிறார்கள்.

பெரிய இடத்துப் பையன் என்பதால் ‘கோயில் காளை’யாகத் திரிந்து எதற்கெல்லாம் அடிமையாகி எப்படியெல்லாம் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறான் பையன், மனைவியின் கேன்சர் போராட்டம் பையனின் போதையடிமை என பல்வேறு போராட்டங்களுக்கிடையில் பையனை எப்படி மீட்டெடுக்க உதவுகிறார் தந்தை என்று அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சஞ்சத் தத்தை விட அவரை மீட்டுடுக்கப் போராடும் தந்தை சுனில் தத்தின் பாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

நீண்ட நாளுக்குப் பிறகு மணீஷா கொய்ராலா. சஞ்சய் தத் மீது சோனம் கபூர் பாத்திரத்திற்கு வெறுப்பு வருவதைப் போலவே அனுஷ்கா சர்மா பாத்திரம் மீது நமக்கு வெறுப்பு வருகிறது.

கண்கள், நடை, உடை, சாயல் என சஞ்சய் தத்தாகவே உருமாறியிருக்கிறார் ரன்பீர் கபூர். இறுதிக் காட்சியில் நிஜ சஞ்சு வந்த போதும் இவரையே பார்க்கத் தோன்றுமளவிற்கு செய்திருக்கிறார்.

ஒரு எழுத்தாளரின் தேடலில், ஒரு நண்பனின் கேள்விக்கு நாயகன் அளிக்கும் பதில், அதற்கு இன்னொரு நண்பன் கேட்கும் கேள்வி, அதற்கு சஞ்சு சொல்லும் பதில் என்ன என்று விறுவிறுப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் திரைக்கதை செய்திருக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. முந்தைய படத்தில் பேண்ட்டை கழட்டி புன்புறத்தைக் காட்டுவது என்று காட்சிகள் வைத்தவர், இதில் விதைப்பையை கசக்க முற்படுவது என்று வைத்து விட்டார்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சஞ்சு’ : ராஜ்குமார் ஹிரானியின் பஞ்ச்சு. நன்று.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *