உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்…

images (2)

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

நான்காம் வகுப்பு படித்த காலத்திலோ ஐந்தாம் வகுப்பு பள்ளி காலத்திலோ என் மண்டைக்குள் நுழைந்த பாயிரம் இது. இரா. அன்பழகன் வழியே என்னுள் நுழைந்தது இது.

மணக்குடியில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமிக்கு பெரிய பந்தலிட்டு பத்து நாட்களுக்கு ராமாயணம் உரை நிகழ ஏற்பாடு செய்வார் கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரில் எப்போதுமே விளிக்கப்படாத மெத்தவூட்டு ஐயர். அதுதான் மணக்குடி, குறியாமங்களம், ஆயிபுரம் என சுற்றியிருந்த ஊர்களில் அவரது பெயர்.

மாலை ஆனதும் பந்தலில் சிவப்பு பட்டைகளும் வெள்ளைப் பட்டைகளும் கொண்ட பச்சை வண்ண தரைவிரிப்பு விரிக்கப்படும். கூம்பு ஒலிபெருக்கியும், சீமானின் சின்னமும் தயாராக வைக்கப்பட்டு, சீர்காழி குரலில் ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா!’ பாடல் இசைத்தட்டின் வழியே ஒலிக்க வைக்கப்படும்.

‘ஊர்ல ஏதோ நடக்குதே!’ என வருகிறவர்கள், சுண்டலுக்காக வருகிறவர்கள், நிறைய சிறுவர்கள் இருப்பதால் விளையாடுவதற்காக வரும் என்னைப் போன்ற சிறுவர்கள், உண்மையாய் ராமாயணத்தை கேட்க வந்தவர்கள் என அனைவரும் பந்தலில் ஒன்று கூட, உரையாற்றும் இரா. அன்பழகன் அவர்கள் புவனகிரியிலிருந்து பச்சை வண்ண டிவிஎஸ் 50யில் வந்திறங்க, ராமாயணம் தொடங்கும்.

உள்ளே தஞ்சாவூர் ஓவியத்தில் இருக்கும் குண்டு மூஞ்சி ராமர் படத்துக்கு தீபாராதனை காட்டியதும், வெளியே சம்மணமிட்டு தயாராக அமர்ந்திருக்கும் அன்பழன் சார் தொடங்க ஆயத்தமாவார். மொத்த கூட்டமும் அவரையே பார்க்க, மொத்த உலகமும் சத்தமின்றி அமைதியில் உறைந்து நிற்கும் அந்த நேரத்தில், கண்களை மூடி குரலை உயர்த்தி அன்பழகன் சார் மைக்கில் தொடங்குவார்…. ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்…’

அவரது குரலும், தூய வெள்ளுடையில் அவரது தோற்றமும், அந்த கம்பீரமும் சிறுவனான என்னை சில நிமிடங்களுக்கு அடித்து உட்கார வைக்கும். பத்து நாட்களும் இது தொடரும், ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்…’ செவி வழியே நுழைந்து என் மூளையின் உள்ளே பதிய வைக்கப்பட்டது.

கம்பன் எழுதிய ராம காதையின் முதல் பாயிரம் என்பதெல்லாம் தெரியாமலேயே கம்ப ராமாயணம் தொடங்கி வைக்கப்பட்டது அவ்வயதில் என்னுள்.

35 ஆண்டுகளுக்குப்பிறகு திருப்பத்தூர் கம்பன் கழகத்தில் முக்கிய பேச்சாளனாக ‘கம்பனிடம் கற்கிறேன்’ என்ற தலைப்பில் கம்ப ராமாயணம் பற்றிய வாழ்வியல் உரையாற்ற அழைக்கப்பட்ட போது, அன்பழகன் சாரை நினைத்துக் கொண்டு நான் உச்சரித்தது ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்…’

ஆண்டுகள் கூட கூட அதே பாடலின் வரிகளின் பொருளும் அடர்த்தியும் வேறு விதமாய் தெரிகிறது என்னுள்.

இறைவனை இத்தனை அழகாய் ஆழமாய் மொத்தமாய் சொல்ல முடியுமா? வியப்பு கூடுகிறது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன்…’ என்னும் பன்னிரெண்டாந்திருமுறை பெரிய புராணத்தின் பதிகம் போலவே தோன்றினாலும், இது இன்னும் ஆழம் என்று கரைக்கிறது என்னை.

சைவ நெறியை கடைபிடிக்கும் என் வீட்டில் ராமனை வணங்கியதே இல்லை. வைணவ படங்களோ வழிபாடுகளோ இல்லை அக்காலங்களில் என்றாலும் வைணவக் கடலை நோக்கி எங்களை நடக்க வைத்தது மணக்குடியில் நிகழ்த்தப்பட்ட ‘ராமாயணம் உரை’யும் இந்த ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்…’தான். (மனங்கவர்ந்த திருப்பள்ளியெழுச்சிக்கு இணையாக அல்லது சில படிகள் உயரமாக தெரிந்த திருப்பாவை பாசுரங்கள் என்னை வைணவத்தை நோக்கி பிற்பாடு இழுத்தது தனிக் கதை)

இறைவனை, இறைவனின் தன்மையை சிறு வரிகளில் சிறப்பாக செய்து விட்டு, சரணமும் செய்து விடுகிறார் கம்பர்.

எத்தனை ஆழம்!

“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.”

இன்று ஸ்ரீராமநவமி!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
17.04.2024

#கம்பர் #kambaramayanam #Kambar #கம்பராமாயணம் #KambanKazhagam #Paraman #பரமன் #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #Paraman #ParamanPachaimuthu #LifeCoach
#Motivational #TamilMotivational

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *