எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,

🌹🌹

#TeachersDay

டீச்சர்…
அப்பா அம்மா வீடு தாண்டி
ஒரு உலகம் உறவு இல்லா அந்தப் பிஞ்சு வயசில்,
திடீரென எங்கிருந்தோ வந்து
உறவாகிப் போன என் ஒண்ணாம் வகுப்பு டீச்சர்…

அதட்டினாலே அழுதுவிடும் அந்த வயசில்
அன்பா அருகில் அமர்ந்து அனா ஆவன்னா சொல்லித் தந்த டீச்சர்

எலியும் சிங்கமும், காகமும் நீர்க் குடுவையும்
என கதைகள் சொல்லி
என் கனவுகளை விரியச் செய்த டீச்சர்…

எங்கிருக்கீங்க டீச்சர்?

சார்…
கூட்டலும் கழித்தலும் வகுத்தலும் பெருக்கலும் சொல்லி
கணிதத்தை என்னுள் ஏற்றியவரே…

அறிவியலையும், சிப்பாய் கலகத்தையும்,
தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் எனக்கு அறிமுகம் செய்து
சுதந்திர தினமன்று கொடியோடு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தவரே…

அய்யா…
உலக நீதியும், ஆத்திச்சூடியும், மூதுரையும், கொன்றை வேந்தனும்
என் காதில் விழக் காரணமாய் இருந்தவரே…
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையையும்,
பாரதியையும், வள்ளுவரையும் பிட்டு பிட்டு வைத்து அறிமுகம் செய்தவரே…

உயர்கல்வி போதித்த உயர் கல்வி ஆசிரியர்களே,
கல்லூரிப் பேராசிரியர்களே…

எங்கிருந்தோ வந்து என்னுள்
என்னவெல்லாமோ விதைத்துவிட்டு
எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,

எங்க இருக்கீங்க நீங்கல்லாம்?

நீங்கள் தந்த ஆங்கிலத்தையும், அறிவியலையும், கணிதத்தையும்,
தொழில் நுட்பத்தையும் வைத்து மேலே ஏறி வந்து விட்டேன் நான்.

நன்றி ஆசிரியர்களே!

நான் காணும் ஒவ்வொரு வெற்றிக்கு உள்ளேயும்
நீங்கள் கொடுத்த அறிவு இருக்கிறது.
உண்மையைச் சொன்னால் என் ஒவ்வொரு கவளத்திற்கும் உள்ளே
உங்கள் பெயரும் இருக்கிறது.

எங்கயோ இருந்த என்னை எங்கயோ ஏற்றிவிட்டுவிட்டு
எங்கயோ போய்விட்ட டீச்சர், சார்…
எங்க இருக்கீங்க நீங்கல்லாம்?

உங்களையெல்லாம் திரும்ப வந்து பார்ப்பேனா,
வாழ்க்கை அப்படியொரு வாய்ப்பு கொடுக்குமா தெரியவில்லை.
ஆனால்…

டீச்சர், சார், அய்யா…
என் ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் மொழி வாழ்கிறது,
என் அலுவலகப் பணியில் உங்கள் கணிதம் வாழ்கிறது,
என் கணிப்பொறி பரிமாற்றத்திற்கு காரணமாய்
நீங்கள் தந்த ஆங்கிலமும், அறிவியலும் நிற்கிறது.

என் ஒவ்வொரு கணமும் உங்கள் உருவாக்கமாய் வாழ்வேன்!
உங்கள் மாணவன் நான் என்று நீங்கள் பெருமைப் படும்விதமாக,
ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வேன்.
உங்கள் பெயர் சொல்லி வாழ்வேன்.
நன்றியோடிருப்பேன்.

நன்றி ஆசிரியர்களே!

இப்படிக்கு
உங்கள் முன்னாள் மாணவன்

– எனது ‘மனப்பலகை’ நூலிலிருந்து
: பரமன் பச்சைமுத்து

2 Comments

  1. uma

    Super sir

    Reply
  2. uma

    Nam anaivaranin adi manathilum odikkondirukkum azhagana thiraikaviyam sir. Nandri

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *