மஞ்சுமல் பாய்ஸ் தந்த எண்ணம்

பஞ்சு அருணாச்சலம் தன் வாழ்நாள் முழுக்க சொல்லியும் எழுதியும் வந்த ‘ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதைதான் முதல் ஹீரோ’ என்ற கருத்து மறுபடியும் மறுபடியும் நீரூபனமாகிக் கொண்டேயிருக்கிறது ஆண்டாண்டுகளாக. இப்போது ‘மஞ்சுமல் பாய்ஸ்’ மூலமாகவும்.

வேலை நேரத்தில் வேலை, மீதி நேரத்தில் குடி, கயிறு இழுக்கும் போட்டி என பொழுது போக்கும் எதையும் அசிரத்தையாக செய்யும் கேரளத்தின் இளந்தாரிப் பையன்கள் கோவாவுக்கு திட்டமிட்டு மாறி கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு வர, அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் சிரத்தையாக இணைந்து தங்களை தரும் படி ஆகிறது என்பதை சொல்லும் கதையை திரைக்கதையில் சிறப்பாக்கி ‘மஞ்சுமல் பாய்ஸ்’ செய்திருக்கிறார்கள்.

கேரளத்திலிருந்து ‘குணா’ குகைக்கு வந்து விழுந்த இளைஞர்களின் உண்மைக் கதையை சரியாக உணர்ச்சி மசாலா சேர்த்து சினிமாவாகத் தந்திருக்கிறார்கள். ஒரு சம்பவத்திற்கு பிறகு இவர்கள் இப்படி மாறுகிறார்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தொடக்கத்தில் அவர்களை இலக்கற்ற குடி வெறியர்களாகவும், அமைதியற்றவர்களாகவும், அரசு அதிகாரிகளை அலட்சியம் கொண்டவர்களாகவும் காட்டுகிறார்கள் என்பது புரிகிறது.

இளையராஜாவின் ‘கண்மணி அன்போட, காதலன் நான்… நான்…’ பாடலை சிறப்பாக சேர்த்திருக்கிறார்கள்.

‘கும்பளாங்கி நைட்ஸ்’ஸில் சிறப்பாக நடித்தவர் குட்டனாக வந்து கலக்கியிருக்கிறார். ‘மஞ்சுமல் பாய்ஸ்’ நல்ல முயற்சி.

….

ஆண்டுக்கு குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு முறை காடு, மலை, குகைகள் என பல ஆண்டுகளாக தேடி அலைந்து திரிந்த என் சில அனுபவங்களை படத்தின் முதல் பாதியில் சில இடங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தன.

‘கல்கொத்தி’ மலையின் ஏறி பள்ளத்தாக்கின் இடுக்கில் இறங்கிய போது, முகத்தினருகே திடுமென பாம்பு ஒன்று எழுந்து நின்றதும், என்னைப் படமெடுப்பதற்காக தயாரான குத்தாலிங்கம் பதறி உறைந்து நின்றதும் நினைவுக்கு வருகிறது.

மேட்டுப்பாளையம் மலையேற்றத்தில் உடன் வந்த பூபாலன் கீழேயே தங்கிவிட உச்சியில் தனியனாக ஒற்றை யானையை கண்டு விலகி விரைந்ததும், நீலாங்கரையில் மீனவர்களோடு படகில் பயணித்து திடீரென கடலில் குதித்து நீந்தி மீண்டும் படகிற்கு வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தன. சிவசமுத்திரா நீர்வீழ்ச்சியிலும், ஒகேனேக்கல்லில் வெளியில் தெரியா ஐந்தறுவிகளின் பின்பக்கம் மேலேறி உச்சியில் நின்றதும் நினைவுக்கு வருகிறது. கபினியில் முதலை இருக்கிறது என்று சொன்ன பிறகும் வேண்டுமென்றே குதித்து விரைவாக நீந்தி கரையேறி ‘எப்பூடி?’ என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.
(இதை எழுதும் போது வந்த பழைய காடு மலையேற்ற நினைவுகளால், பழைய படங்களை தேடி எடுத்தேன். சில இணைப்பில்)

எந்த மலையேற்றத்திலும், எந்த சுற்றுலாவிலும் அமைதியைக் கெடுக்கும் சூழலை சிதைக்கும் செயலில் இறங்கவில்லை நாங்கள் எவரும்.

மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை, ஒரு சூழலியல் ஆர்வளனாக முதல் பாதியின் சில காட்சிகள் என்னைத் தொந்தரவு செய்தன, திரைக்காக அதீதமாக காட்டுகிறார்கள் என்பது தெரிந்தும் கூட.

காட்டை, காட்டின் அமைதியை புரிந்து கொள்ளாத மனிதர்கள் காடுகளுக்குப் போவதை தடை செய்ய வேண்டும்.

காடு என்பது ஒரு தனி உலகம். பல்லுயிர்களும் ஓன்றோடொன்று இணைந்து வாழும் ஓர் உலகம். தூரத்திலிருந்த படி மனிதர்களுக்கு உதவி செய்கிறது காடு. காடுகளுக்கு உள்ளே நுழையும் மனிதர்கள் அதன் அமைதியைக் கெடுத்து நாசம் விளைவிக்கிறார்கள். காட்டின் உள்ளிருக்கும் உயிர்கள் உணவுத் தேவைக்காக மட்டுமே மற்றதை அழிக்கின்றன. மனிதன் உள்ளே நுழைந்து வெறுமனே அழிக்கிறான்.

காடு என்பது ஒரு கூட்டுத் தவம், காட்டுத் தவம். அமைதியான பேரியக்கம். மனிதர்கள் காடுகளை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் காட்டுக்குள் போகவே கூடாது.
சுற்றுலா வரும் ஒவ்வொருவரையும் குழு குழுவாய் அமர வைத்து சூழலியல் அடிப்படையை கவனிக்க வைத்து கையி்ல் அடையாள பேட்ச் அணிவித்து அதன் பிறகே ‘காட்டுக்குள் செல்லலாம்!’ என அறிவிக்கும் படி விதிகள் செய்ய வேண்டும்.

– பரமன் பச்சைமுத்து
15.03.2024FB_IMG_1710218839294

FB_IMG_1710219299045

FB_IMG_1710219225376

FB_IMG_1710219218228

FB_IMG_1710219237168

FB_IMG_1710219213409

FB_IMG_1710219134106

FB_IMG_1710219145732

FB_IMG_1710219094300

FB_IMG_1710219009889

FB_IMG_1710219019556

FB_IMG_1710218839294

FB_IMG_1710218846579

FB_IMG_1710218758924

FB_IMG_1710218733378

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *