வலசைக்கு வந்த ஃப்ளெமிங்கோ

பிசி, எக்ஸ்டி, ஏடி என கணிப்பொறிகள் பயன்பாட்டில் இருந்த எண்பதுகளின் இறுதியிலான என் கல்லூரிக் காலங்களில் ஃப்ளாப்பி டிஸ்க்கள் கோலோச்சின.

360கேபி(கிலோ பைட்ஸ்) அளவு சேமிக்கும் கொள்ளளவு கொண்ட டிடிகே அல்லது ஆம்க்கிட் தயாரிப்பு ஃப்ளாப்பி டிஸ்க்களை நாங்கள் பயன்படுத்தினோம். பேசிக், ஃபோர்ட்ரான் போன்ற நிரல் மொழிகளை இயக்க அன்று அது போதுமானதாக இருந்தது. உள்ளடக்கத்தை குறிப்பதற்காக ஒட்டப்படும் ‘லேபிள்’களில் எங்களது ஓவியத்திறமையைக் காட்டுவோம், ஊர்ப்புறங்களில் இருசக்கர வாகனத்தின் முன் பக்க எண் பலகையில் கண்டதை வரைந்து வைத்திருப்பார்களே அப்படி.

முரளிப்பிரகாஷ் சிதம்பரத்திலிருந்து நெய்வேலிக்கு குடி பெயர்ந்த என் வகுப்புத் தோழன். முரளிப்பிரகாஷ்தான் சிதம்பரம் மாரியப்பா நகரில் டாக்டர் லட்சுமணன் என்றொரு பேராசிரியர் ‘டி பேஸ் 3’ சொல்லித்தருகிறார் என்று எனக்கு சொன்னவன். அவரிடம் பணம் கட்டி டிபேஸ் 3 கற்றுக் கொண்டு, மன்னம்பந்தல் வந்து அனைவருக்கும் இலவசமாக அதைக் கற்றுத் தந்தேன் அந்நாட்களில். அவரது ஏடி & டி கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் முன் ‘சி எல் எஸ்’ போட்டு திரையை சுத்தமாக்க வேண்டும் என்ற கண்டிப்பு கொண்டவர் டாக்டர் லட்சுமணன். வெளியில் வந்து சிரித்தாலும், அவர் முன் அதை செய்யவே வேண்டும். நேரடியாக ஆஃப் செய்து விட்டால் கடுங்கோபம் கொள்வார். அப்பொதே வயோதிகம் தொட்ட அவர் இப்போது இறந்து போயிருக்கலாம்.

முரளிப்பிரகாஷும் நானும் ஒரே ப்ராஜெக்ட் டீமில் இருந்தோம். முரளிப்பிரகாஷ் இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறான். வங்கியொன்றில் பணி புரிகிறான். ஆம்வே பொருட்களில் ஆர்வம் உள்ளவன்.

….

பருவ நிலை மாறுபாட்டினாலும், கடல் சூழலில் இருந்த மாசினாலும் வழக்கமாக வரும் காலத்தில் வராமல், 45 நாட்கள் கழித்து வெளிநாடுகளிலிருந்து தனுஷ்கோடிக்கு வலசைக்கு வந்துள்ளனவாம் ஆயிரக்கணக்கான ஃப்ளெமிங்கோ பறவைகள். தனுஷ்கோடி கடலில் வெள்ளைவெளேரென்று பெருங்கூட்டமாய் ஆயிரக்கணக்கில் ஃப்ளெமிங்கோ பறவைகளை பாலிமர் தொலைக்காட்சியின் செய்திகளில் பார்த்ததும் ஒரு பரவசம் வந்தது. ‘ச்சே! இப்ப கெளம்பி அங்க போய் பார்த்தா நல்லா இருக்குமே!’ என்று எண்ணம் சடக்கென்று வந்து போனது.

பரந்து விரிந்த பெரு நீலக் கடல் பின்னணியில் வரிசையாய் கூட்டமாய் ஆயிரக்கணக்கில் ஃப்ளெமிங்கோ பறவைகளை பார்ப்பதே ஓர் அனுபவமாய் இருந்தது. தூத்துக்குடி மெட்டல்ஸ் கார்த்தியோடு ஒரு முறை பழவேற்காடு போன போது, ஆயிரக்கணக்கில் பெலிகன் பறவைகளை கண்டு அனுபவித்தது நினைவுக்கு வருகிறது.

ஃப்ளெமிங்கோ…. எத்தனை நாடுகளைக் கடந்து இங்கே வந்திருக்கும்! நினைவுகளில் வழியையும் திசையையும் வரைபடத்தையும் வைத்துக்கொள்கின்றன அவை என்பது பேரதிசயம். ‘ஃப்ளெமிங்கோவ பாக்கனும்!’

‘செங்கால் நாராய்… செங்கால் நாராய்…’ தமிழ்ப் பாட செய்யுள் ஓடுகிறது உள்ளே.

….

‘முதல் பகுதி முரளிப் பிரகாஷுக்கும், இரண்டாம் பகுதி ஃப்ளெமிங்கோவிற்கும் என்ன சம்மந்தம் பரமன்?’ என்ற கேள்வியெழலாம் உங்களுக்கு.

சில வார்த்தைகளை, சில நிகழ்வுகளை, சில நினைவுகளை சிலதோடு முடிச்சு போட்டு வைத்து விடுகிறது உள்ளிருக்கும் நம் உள்ளம்.

ஏவிசிசி காலத்தில் டிடிகே ஆம்கிட் தயாரிப்பு ஃப்ளாப்பி டிஸ்களை நாங்கள் பயன்படுத்திய காலமதில், முரளிபிரகாஷ் பயன்படுத்திய ஃப்ளாப்பி டிஸ்க் ‘ஃப்ளெமிங்கோ’!

– பரமன் பச்சைமுத்து
27.02.2024

#Flemingo #Danushkodi #ஃப்ளெமிங்கோ #நாரை #Paraman #ParamanPachaimuthu #Avcc #Mannampandal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *