இயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்!

‘நேத்து பொன்னியம்மன், மாரியம்மன், பனையாத்தாள் வீதியுலா. மணக்குடியில சித்திரை திருவிழாயில்லையா! அதான் கொஞ்சம் கண்ணு முழிச்சிட்டோம்!’ என்று சொல்லிடப்பேசி வழியே அப்பா சொல்லிக் கொண்டே போகையில், அவரைக் குறுக்கிட்டுக் கேட்க முயற்சிக்கும் போதே அவரே சொன்னார், ‘எப்பயும் போல மழையை எதிர்பார்த்தோம். மழை வந்தது. வாசல் தெளிச்சது போல தூத்தலோட போயிடுச்சி!’

அவருக்கும், எனக்கும், இங்கு எல்லோருக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் இப்போது மழை வேண்டும்.

‘இதே நாள் அன்று’ என்று சில ஆண்டுகள் முன்பு இதே ஜூனில் சென்னையில் அடித்துப் பெய்த மழையை காணொளிப்பதிவு செய்து இடுகையிட்டதை முகநூல் எடுத்துக் காட்டுகிறது, இன்று சென்னை 38 டிகிரியில் இருக்கையில்.

20,000 ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி்செய்து கொடுங்கள், அலுவலகத்தில் தண்ணீர் இல்லை, வராதீர்கள், வேண்டுமானால் ஹைதராபாத்துக்கோ பெங்களூருவுக்கு பணி மாற்றல் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியனுப்பி விட்டனவாம் சென்னையின் ஓஎம்ஆர் பக்கத்து மென்பொருள் நிறுவனங்கள். ‘தண்ணீர் பற்றாக்குறை, மதியம் சாப்பாடு செய்ய முடியவில்லை. வருந்துகிறோம்!’ என்று அறிவிப்பு இருக்கிறதாம் தேனாம்பேட்டையின் ஓர் உணவகத்தில்.

இதற்கு முன்னாடி அவர்கள், அதுக்கு முன்னாடி அவர்கள் என்று யாரையும் எந்த அரசையும் குறை சொல்லி சக்தியை விரயம் செய்ய மனமில்லை.
மழை வேண்டுமென மனம் கெஞ்சுகிறது.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் தொடக்கத்தில் வீட்டின் கூரையின் வழியே அருவியைப் போல வழிந்து ஓடும் அடித்துப் பெய்யும் மழை. ‘ரங்கு எந்திர்றா! ரங்கு எந்திர்றா!’ என்று ஒரு மூதாட்டி எழுப்ப உள்ளே மழையின் குளுமையால் சுருண்டு படுத்திருக்கும் ஒரு மனிதன் மெல்ல எழுவான். எழுந்தவன் கூரையிலிருந்து ஒழுகும் மழையை ஓர் உள்ளங்கையில் வாங்கி முகத்திலடித்து முகம் கழுவி உறக்கம் தெளிவான். மழையை உள்ளங்கையில் ஏந்தும் போது எப்படியிருக்கும்! சில்லென்று உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு வரும். அதை முகத்தில் வாங்குகையில் குளுமை பரவும், மூக்கின் நுனியில் இறங்கி மோவாயின் வழியே கன்னங்களின் வழியே இறங்கி நீர் ஓடும். நெற்றியிலிருந்து இறங்கியதில் கொஞ்சம் மட்டும், புருவ முடிக்கற்றையில் தேங்கி நிற்கும், மழைக்காலத்தில் மரத்தின் இலைகளில் அகப்பட்டு நிற்கும் தண்ணீரைப் போல.

அப்படி முகம் கழுவ, தமிழகத்தின் உயிர் பூக்க… அப்படியொரு மழை வேண்டும். இல்லை… ஒரு மழை அல்ல, அடுத்தடுத்து பல மழைகள் வேண்டும்.

இயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
14.06.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *