‘சஞ்சாரம்’ – எஸ் ராமகிருஷ்ணன் : நூல் விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

wp-15986362771258330977967652512003.jpg

‘முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது.

பதினெட்டு படிகள் கொண்ட சூலக்கருப்பசாமி கோவிலின் முன்னாலிருந்த சிமெண்ட் திண்டில், வெளிறிய ஆரஞ்சு நிற சால்வையை விரித்து உட்கார்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்த ரத்தினம் திடுக்கிட்டு நிமிர்ந்த போது, ‘தாயோளி நிறுத்துறா! சாமிக்கு யாரு வில்லு குடுக்கறதுங்கற பிரச்சினையே இன்னும் முடியல. அதுக்குள்ள வாய்ல வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க! ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணாம இன்னைக்கு சாமி வேட்டைக்குப் புறப்படாது பாத்துக்கோங்க’ என்று கத்திக் கொண்டிருந்தான் சின்னு ‘

இந்த முதல் பத்தியே மொத்த நாவலையும் சொல்லி விடுகிறது.

பக்கிரி என்ற கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞன் ஒருவனின் வாழ்க்கையை, இயல்பாகவே இசை கைவரப் பெற்ற அவன் அதைக் கற்றுக் கொள்ள பட்ட இம்சைகளை, ஊர் ஊராக நாதஸ்வரம் இசைக்க அவன் சென்ற போது பட்ட அனுபவங்களை, ஒவ்வொரு ஊராக கூட்டிப் போய் நாதஸ்வர ‘சஞ்சாரம்’ செய்து  தருகிறார் எஸ் ராமகிருஷ்ணன்.

மூதூர், அரட்டானம்,கரிசக்குளம், உறங்காப்பட்டி, ஒதியூர், மருதூர், அருப்புக்கோட்டை, சோலையூர், காரியாப்பட்டி என நாயகனின் நினைவுகளுக்குள் புகுந்து நாமும் ஊர் ஊராக சஞ்சாரம் செய்து திரும்புகிறோம். பழையதற்குள் போய் நிகழ்காலத்திற்கு வந்த பின்னும் ராகவையா, வெள்ளைக்கார ஹாக்கின்ஸ், தன்னாசி, சரஸ்வதி என சில பாத்திரங்கள் நம்மோடே ஒட்டிக் கொண்டு வந்து நிற்கின்றனர்.

சோழ தேசத்து தஞ்சை மண்டல நாதஸ்வரக் கலைஞர்கள் கொண்டாடப்பட்ட அளவிற்கு கரிசலின் கலைஞர்கள் கொண்டாடப்படவில்லை, கரகாட்டப் பெண்களில் குலுக்கல்களிலும், கல்யாண பேண்ட் நிகழ்ச்சி செண்ட மேள சத்தங்களிலும், இறைவனால் தரப்பட்டதாக ஒரு சாரரால் நம்பப்படும் அவர்களது நாதஸ்வர இசை அமுக்கப்பட்டது என்ற சோகத்தை கதை மாந்தர்கள் வாயிலாகவும் நாவல் முழுக்க இழையோடும் மென் சோகத்தாலும் வெளிப்படுத்துகிறார் எஸ்ரா. நமக்கும் கடத்தி விடுகிறார்.

‘இப்படியெல்லாம் கூட ஓர் இசைக்கலைஞனை படுத்துகிறார்களே மனிதர்கள்!’ என்ற எண்ணத்தை நம்முள்ளும் எழுப்பி விடுகிறது நாவல்.  கோவில் திருவிழாக்களில், நம்மூர் விழாக்களில், திருமணங்களில் எப்போதோ வந்து வாசித்த நாதஸ்வர தவில்காரர்களின் முகங்கள் உருவங்கள் நம் உள்ளே வந்து போகின்றன என்பது இந்நாவலுக்குக் கிடைத்த வெற்றி.

‘எவன் இப்பல்லாம் முழுசா நாதஸ்வர இசையைக் கேக்கறான். எல்லாப் பயலும் சினிமாப் பாட்டைதான் நாதஸ்வரத்துல வாசிக்கச் சொல்லி கேட்கரானுவ!’ என்று பக்கிரி் சொல்வது மடேர் என என் மண்டையில் அடித்தது போல இருந்தது.  ‘தில்லான மொகனாம்பாள்’ திரையிசையில் வந்ததைத் தாண்டி வேறெதும் நமக்குத் தெரிவதில்லையே. மீதி எல்லாமுமே திரையிசைப் பாடல்களே. ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா’, ‘சிங்கார வேலனே தேவா’ ‘சொல்லச் சொல்ல இனிக்குதடா’ என்று தொடங்கி ‘காற்றில் வரும் கீதமே…’ ‘தென்னை மரத் தோப்புக்குள்ள குயிலே…’ என்று இளையராஜாவிற்கு மாறி ‘அலை பாயுதே கண்ணா’ ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா’ என்று ரஹ்மானில் சஞ்சரிப்பதை மட்டுமே கேட்டு் மகிழ்ந்து கலைந்து போகிறோமே! அந்தக் கலைஞன் எவ்வளவு கற்றிருப்பான், வெறும் திரைப்பாடல்களை வாசிக்க வைத்து அவமானப்படுத்துகிறோமே!’ என்று திரண்ட எண்ணம் இன்னும் கலையவே இல்லை.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த ‘சஞ்சாரம்’ நாவல், 2018 ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதை வென்றெடுத்திருக்கிறது.

எந்த திருமணத்துக்குப் போனாலும் நாதஸ்வரம் வயலின் கச்சேரி செய்பவர்களின் அருகில் அல்லது அவர்களைப் பார்த்தே அமரும் வழக்கம் கொண்டவன் நான்.
இந்நாவலை படித்தால் இனி் நீங்களும் அவர்களைக் கவனிக்காமல் கடக்க முடியாது.  ரத்தினத்தின் சாயலையோ பக்கிரியின் சாயலோ அவர்களிடத்தில் உங்களுக்குத் தெரியக்கூடும்.

எஸ் ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ – நல்லனுபவம்.

– பரமன் பச்சைமுத்து
28.08.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *