‘விக்ரம் வேதா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

விக்ரம் வேதா - Copy

விக்ரம் வேதா

ஒவ்வொரு முறை விக்ரமாதித்தன் எதிர்கொள்ளும் போதும் அவனது முதுகின் பக்கமாக வந்து அவனது கழுத்தை நெருக்கி ‘இதற்கான சரியான விடையை சொல், இல்லாவிடில் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்’ என்று ஒரு கதையைச் சொல்லி பிறகு மறுபடியும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிக்கொள்ளும் என்று காலங்காலமாய் நாம் கேட்ட விக்ரம்(மாதித்யன்) – வேதா(ளம்) கதையை இக்காலத்து திருடன் போலீஸ் கதையாக ரசிக்கும்படித் தந்திருக்கிறார்கள்.
‘போட்டுத்தள்ளிட்டு நைட்டு நிம்மதியாத் தூங்குவேன். ஏன்னா, இவங்க யாருமே உத்தமனுங்க கெடையாது!’ என்ற வகையில் இயங்கும் என்கவுண்டர் விறைப்பு போலீஸ், ஆள்-அம்பு-சேனை என்று பயங்கரத் திட்டம் போட்டு தலைமறைவுத் தாதாவை நோக்கிப் பயணிக்கும் தருவாயில், தேடப்படும் தாதாவே தனியே நடந்து வந்து எதிரில் நின்று ‘அத நீ கண்டு புடி சார்!’ என்று வேதாளப்புதிர் போடுமிடத்தில் படம் வீறு கொண்டு எழுகிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வாகும் பத்து நிமிடங்கள் தவிர இறுதிக்காட்சி வரை ‘தட தட’வென்று பயணித்து ஈர்க்கிறது திரைக்கதை.

நாயகன் – வில்லன் என்ற வட்டங்களுக்குள் நாங்கள் நுழைய விரும்பவில்லை, நல்ல பாத்திரங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு நடிகர்கள் வந்தாலே நடிப்புத் தீனிக்கு பாத்திரங்கள் வரும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மாதவன் – விஜய்சேதுபதி அட்டகாசமான தேர்வு. இருவரும் அசத்தியிருக்கிறார்கள். டென்ஷனே இல்லாமல் போட்டுத் தள்ளுவது, எல்லாம் முடித்துவிட்டு ஒரு ‘பெக்’ உள்ளே தள்ளிவிட்டு உறங்குவது, மனைவியுடன் காதல் வெளிப்பாடு, வேதா சொல்லும் புதிரைக் கேட்டு சிக்கி நிற்பது, விடை கண்டு வெடிப்பது என அருமையாகச் செய்திருக்கிறார் மாதவன்.
விஜய் சேதுபதி வடையைக் கையில் வைத்துக் கொண்டு வரும் காட்சி முதல் ‘ஏன் சார், இவனுங்க வாங்கன சம்பளத்துக்கும் உண்மையா இல்லை. இருந்த மனுஷனுக்கும் உண்மையா இல்ல.’ என்று பேசி சடாலென திரும்பும் அந்தக் கடைசிக் காட்சி வரையில் ‘அள்ளு’கிறார். கடைசிப் பத்து நிமிடங்களில் அப்ளாஸ் வாங்குகிறார்.
ஷ்ரத்தாவிற்கு முக்கிய பாத்திரம், வரலட்சுமிக்கு சிறிய பாத்திரம். இருவரும் கொடுத்ததை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
படம் முடிந்து வந்தும் ஒட்டிக்கொண்டு வந்த பின்னணி இசை நம்முள்ளே ஓடுகிறது. ஒளிப்பதிவு அழகு, எல்லாருமே அழகாக தெரிகிறார்கள், குறிப்பாக விஜய் சேதுபதி – சேட்டா பாடலில்.
விக்ரம் – விஜய்சேதுபதி இவர்களைத் தாண்டி படம் நெடுக நம்மை ஈர்ப்பது சிறப்பான வசனங்கள்.
சரியான நடிகர்களைத் தேர்வு செய்து, நல்ல வசனங்களையும் திரைக்கதையையும் வைத்து சரியாகக் கட்டி படம் தந்த வகையில் வெற்றியடைத்து நிற்கிறார்கள் புஷ்கர் – காயத்திரி.
வீ – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘விக்ரம் வேதா’ : பார்க்கலாம் நல்லா.

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *