ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…

Ethuvum nirpathillai yenbathey - Copy

Ethuvum nirpathillai yenbatheyசிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர்.  வைரமுத்து தனது நூலொன்றில்,  ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்!  நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு இலக்கணம் என்பதைத் தாண்டி, நடிப்பு பற்றி ஆராய்ந்து அறிய முற்படுவோர்க்கெல்லாம் அகராதியாக அவர் இன்றும் திகழ்கிறார். சிவாஜி உயிரோடிருந்த காலங்களில், அவர் வாழ்ந்த தெருவில்தான் குடியிருந்தேன். ஒருமுறை கூட போய் பார்த்ததில்லை. ஒரு மாபெரும் கலைஞனை சந்திக்க முயற்சிகூட செய்யவில்லையே என்ற வருத்தம் ஓர் ஓரத்தில் என்னுள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவை, ரசிகர்களின் ரசனைகளை காலத்தை மீறி தூக்கி வந்த பெருமகன் அவர். இவர் பெயரெழுதாமல் தமிழ் சினிமாவை குறிப்பிட முடியாது.

எம் எஸ் வி ஐயா – அடேயப்பா. இன்றைக்கு  இசை உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களுக்காக அன்று வேர்வை சிந்தி அடித்தளம் கட்டியவர். ‘தமிழ்த்தாய் வாழ்த்து’இல் விறைத்து நிற்கும் தமிழ் உணர்வைத் தந்தவர். ஆர்மோனியத்திற்குள்ளிருந்து அபின் போன்ற ஒரு போதை தந்து கேட்பவரை மயக்கிப் போட்டவர். தமிழ் சினிமாவை தனியே வெகுதூரம் தன் விரல்களால் சுமந்து வந்தவர்.

ஜெயகாந்தன் – தமிழ் கூறும் நல்லுலகை உலுக்கிப் போட்டவர். எழுத்துலகை, திரைத்துறையை, மக்களின் ஆளுமைப் பற்றிய அனுமானங்களை புரட்டிப் போட்டவர். நவீன தமிழ் கிளாசிக் நாவல் வரிசை இவரில்லாமல் தொடங்காது, இவரை விட்டுவிட்டு முடியாது. தொடக்கப் பள்ளி கல்வி கூட இல்லாமல் தொடங்கி ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருது, ராஜராஜன் விருது என்று வென்று, ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் மூலம் குடியரசுத் தலைவர் விருதையும் வென்றவர். ‘ஜெயக்காந்தன் படிச்சிருக்கியா?’ என்று கேட்பது கடந்து, பிள்ளைகளுக்கு ஜெயகாந்தன் என்று பெயரிட்டுக் கொள்ளும் அளவிற்கு அவதானித்து நின்றார் அவர்.

கல்கி –  எதையும் செய்யலாம் என்னும் டிஜிட்டல் யுகத்தில் கூட ‘பொன்னியின் செல்வன்’ஐ அவர் விவரித்தது போல் அப்படியே, கெடுத்துவிடாமல் படமெடுக்க முடியுமா என்று இன்று வரை பலரை பயம் கொள்ளச் செய்திருக்கும் ஒரு படைப்பு பிதாமகன்.  மகேந்திர பல்லவனையும், சிவகாமியையும்,  அருண்மொழித் தேவனையும், வந்தியத் தேவனையும், பெரிய பழுவேட்டரையரையும், பூங்குழலியையும் தலைமுறைகள் தாண்டியும் கடத்தி வந்து தந்தது இவரால் மட்டுமே சாத்தியம். இன்று கூட ‘பொன்னியின் செல்வன்’ஐ எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.  ‘ஆடிப் பெருக்கு’ அத்தியாயம் படித்துவிட்டு வீராணம் ஏறியைப் போய் பார்க்கப் போனவர்களை நான் அறிவேன். படையப்பா நீலாம்பரி பாத்திரம் பழுவூர் ராணி நந்தினியிலிருந்து எடுத்தது என்று ரஜினியே சொன்னது உச்சம்.

இளையராஜா – இசைப் பெருமகனார். எவர் பாட்டை வேண்டுமானாலும் கேள், இரவு ஏழு மணிக்கு மேல் நீ இவர் பாட்டைத்தான் கேட்க வேண்டும் என்று அடித்துச் சொல்லப்படும் அளவிற்கு பேருருவம் எடுத்து நிற்கும் ராக தேவன். நம்மை  ஆர்மோனியம் வழியே ஆழத்திற்கு எடுத்துப் போகும், நரம்புகள் மீட்டி நம் நரம்புகளை மீட்டும் இசை அதிசயம். கல்லூரி காலங்களில் தீபாவளி பொங்கலுக்கு பத்து படங்கள் வெளியானால் அதில் ஏழு அல்லது எட்டு படங்கள் இவர் உழைத்தப் படங்களாயிருக்கும். இருபத்தியைந்து வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் யாருக்கும் மனநோய் வராமல் காத்த இசைக் கடவுள்.

கண்ணதாசன் – வாழ்வின் பெரும் தத்துவங்களை , ‘இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி!’ என்று சில வரிகளில் சொல்லி சாமான்யர்களை சிந்திக்கச் செய்த ‘வரிச் சித்தர்’. இன்று தமிழ்ப் பாடலாசிரியர்கள் வைரமுத்துவை நிமிர்ந்து பார்க்க, வைரமுத்துவே ‘அட மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும் கூடு கண்ணதாசன் சொன்னதுங்கோ’ என்று கையாண்டு நிமிர்ந்து பார்க்கும் பெரும் ஆளுமை. திரைப்படப் பாடல்களில் வாழ்வியலைத் தந்து ஒரு தலைமுறையை தெளிய வைத்த பெருமகனார்.

சுஜாதா – இவரைப் பற்றி என்னால் ஒழுங்காக சொல்லி முடிக்கமுடியுமா என்று திகைக்க வைப்பதால் ஒன்றும் சொல்லாமலேயே நிறுத்திவிடுகிறேன். ஒரு வரியில் சொல்வதானால் எழுத்துலக ஜாம்பவான் ஜா.ரா.சுந்தரேசனால் ‘வசன பாரதி’ என்று விளிக்கப் பட்டவர், என் வாழ்க்கையை மாற்றிப் போட்ட ஐவரில் ஒருவர்.

தெண்டுல்கர் – இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்பதைத் தாண்டி ‘ஐ ஸா காட், ப்ளேயிங் இன் ஆர்டர் டூ’ என்று ஆஸ்த்ரேலிய கிரிகெட் ஜாம்பவானை நிறவெறி தாண்டி வெளிப்படையாய் புகழ வைத்த பெரும் திறமை கொண்ட கிரிக்கெட் பிதாமகன். இவருக்குப் பிறகு எவரும் இல்லை என்று உலகம் கொண்டாடிய ப்ராட்மேனையே, எனக்குப் பிறகு இவர்தான் ‘ஐ ஸீ மைசெல்ஃப் இன் டெண்டுல்கர்’ என்று சொல்ல வைத்தவர். இவர் ஆட்டமிழந்தால் தொலைக் காட்சியை அணைத்து விட்டு வேறு வேலையைப் பார்த்த ஒரு தலைமுறையை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். கிரிக்கெட்டையே தவமாகக் கொண்டவர். இந்திய கிரிகெட்டையே இருபது வருடங்களுக்கு மேலாக தனியொருவனாக தன் தோளில் சுமந்தவர்.

எத்தனை எத்தனை ஆளுமைகள் என் முன்னே! இவர்கள் யாரும் ஒரே நாளில் பெரும் உருவெடுத்து நின்றதில்லை.

சில மனிதர்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பெரும் ஆளுமைகளாக உருவெடுக்கிறார்கள். தான் சார்ந்திருக்கும் துறையை தனி மனிதனாக தங்கள் தோளில் சுமந்து உயர்த்திக் கொண்டு வருகிறார்கள்.

இவர் இல்லையென்றால் இந்தத் துறையே இல்லை என்று சொல்லுமளவிற்கு தங்கள் துறைகளைத் தங்கள் தோளில் தூக்கி சுமந்து, தூக்கி நிறுத்துகிறார்கள்.

இவர்கள் இல்லாத போதும் அந்தத் துறைகள் இருக்கின்றன என்பதே பெரும் உண்மை. அவர்கள் தந்ததை  அவர்கள் மட்டுமே தர முடியும். அது ஒரு தனி ரகம். அவர்கள் இன்றியும் அத்துறைகள் இருக்கின்றன. இயங்குகின்றன.

யாரோ எங்கிருந்தோ வருகிறார்கள், அவர்கள் பங்கிற்கு எதையோ தருகிறார்கள். அவர் போனதும் அடுத்தவர், அடுத்தவர், அடுத்தவர்.

யார் இல்லையென்றாலும், யார் இல்லாத போதும் எல்லாமும் இயங்குகின்றன என்பதே நிதர்சன உண்மை. யாருக்காகவும் எதுவும் நின்றுவிடுவதில்லை.

அதே நேரத்தில், அனிருத் யுகம் வந்தாலும், ஏ ஆர் ரஹ்மான் வந்தாலும், ராஜா தந்தது தனியே நிற்கும்.

எஸ் ராமகிருஷ்ணன் காலத்திலும் ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ அதிகம் விற்கும். ‘பொன்னியின் செல்வனை’ கையிடுத்தால் வைக்க முடியவில்லை என்று சிங்கப்பூர் முகுந்தனிடமிருந்து குறுஞ்செய்தி வரும். ‘மதன மாளிகையில்…’ பாடல் மக்களை இன்னும் மயக்கவே செய்யும். அவர் எழுதிய ஒரு வசனம் ‘சரோஜா சாமான் நிக்காலோ’ என்று பாட்டின் தொடக்கமாய் மாறும், அதுவே ‘சரோஜா’ என்று படத் தலைப்பாகவே மாறும். சுஜாதா நிற்பார்.

யார் இருந்தாலும் இல்லையென்றாலும் எதுவும் நிற்காது என்பது எவ்வளவு உண்மையோ,  இருக்கும் போது தான் செய்வதில் தன்னேயே கரைத்துத் தந்து கொடுத்தவனின் படைப்பு எக் காலத்திற்கும் உயர்ந்து நிற்கும் என்பதும் அவ்வளவு உண்மை.

‘நான் செய்வதில் எவ்வளவு என்னைத் தருகிறேன்?’ என்பது கேள்வியாய் தொக்கி நிற்கிறது.

என் மகள் செய்தித் தாளை கொண்டு வந்து தருகிறாள். ஒரு தலைப்புச் செய்தி கவனம் கவருகிறது.  யாரோ பிரணவ் என்றொரு பையனாம், இதுவரை உலகில் யாரும் செய்யாத சாதனை செய்திருக்கிறானாம். ஆயிரத்து சொச்சம் ரன்கள் அடித்து விளாசியிருக்கிறானாம். ‘அடுத்த தெண்டுல்கரா?’ என்று ஹர்பஜன்சிங் ஆச்சரியப் பட்டிருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *