வீராணம் ஆழப்படட்டும்!

images (5)

11 கிமீ நீளமும் 4 கிமீ அகலமும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பை மனதில் காட்சிப் படுத்திப் பாருங்களேன். எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட கடல் போல பரந்து விரிந்துதானே! அதனால்தான் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் தொடக்கத்தில் அந்த ஏரியை ‘கடல் போல விரிந்த’ என்றே குறிப்பிட்டு, அதன் மதகுகளின் எண்ணிக்கையை, அதன் நீள அகலத்தை கண்டு நாயகன் வந்தியத்தேவன் சிலாகிப்பதாக நிறைய எழுதியிருப்பார்.

கிபி 930 வாக்கில் சோழ அரசன் ராஜாத்தியனால் வெட்டப்பட்ட இந்த ஏரி, அன்றைய சோழ நாட்டின் உடையார்குடி, காட்டுமன்னார்குடி தொடங்கி வடக்கே கடல் வரையிலும் இருக்கும் பகுதிகளுக்கு நீர் தந்து வளமாக்கியது. நேற்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் இன்றைய கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதிகளை வளமாக்கி உயிர்நீர் தந்து பாசனத்தை செழிக்கச் செய்தது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்பால் சென்னை மாநகருக்கு தண்ணீரும் தந்தது.

இதோ 2024ன் கடுங்கோடையின் தொடக்கத்திலேயே அவ்வளவு பெரிய வீராணம் வற்றி விட்டது. வீராணத்தில் தண்ணீர் இல்லை.
பல ஆண்டுகளாக வீராணம் தூர்வாரப்படவில்லை என்ற குற்ச்சாட்டுகளை வைக்கவோ, மாற்றி மாற்றி கை காட்டும் வேலை செய்யவோ நாம் விரும்பவில்லை இங்கு. நாம் சொல்ல விழைவது வேறு. ஏரி வெற்றி விட்டது, இதை வாய்ப்பாக்கி மிக செம்மையாக இப்போது தூர்வாரினால் அடுத்த பல ஆண்டுகள் மண் பெயன் பெறும், மக்கள் வாழ்வார்கள். நிலம் செழிக்கும், உயிர்கள் சிறக்கும்.

மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வந்த நீரெல்லாம்
வெளியேறி கடலில் கலப்பதற்கு விட்டுவிட்டு, கோடைக்காலத்திலும் அதற்கடுத்து வரும் பாசன காலத்திலும் தண்ணீரில்லை என்று தவிக்க வேண்டி வராது.

சராசரி உயரம் கொண்ட 9 ஆட்கள் ஒருவர்மீது ஒருவர் நின்றால் ஏரியின் அடியிலிருந்து மேல் நீர்மட்டத்தை தொட முடியும் என்று கணக்கிடும் அளவிற்கு 48 அடி ஆழம் கொண்ட வீராணம், மறுபடியும் அதே ஆழம் கொள்ளட்டும், நீர்த்தேக்க திறன் மீட்கப்படட்டும், பயிரும் உயிரும் செழிக்கட்டும்! அதற்கு வீராணம் தூர்வாருதல் இப்போது நிகழட்டும்!

அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கவனிக்கட்டும்! இதை எவர் செய்யினும் அவரை கையெடுத்து கும்பிடுவேன்!

பிரார்த்தனைகள்!

பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை
27.04.2024

#VeeranamLake #Veeranam #CuddaloreDistrict #SouthArcot #வீராணம் #Summer #கோடை #WaterBody #Environment #Paraman #ParamanPachaimuthu #ParamanTouring #பரமன் #பரமன்பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *