வேலூர் சரவணபவன்

நேற்று முன்தினம் பெங்களூரூவிற்குப் பயணிக்கும் போது மதிய உணவு சாப்பிட வேலூர் சரவணபவன் வந்தேன். இன்று சென்னை நோக்கிப் பயணிக்கும் வழியில் மதிய உணவிற்காக அதே வேலூர் சரவணபவன்.

இரண்டுக்குமிடையே நிறைய நடந்துவிட்டன.

ஒரு மலையில் ஏறியது, ஒரு அனுபவக் கட்டுரை, உறவினர் ஒருவர் வீட்டில் தடாலடியாக புகுந்து மகிழச்செய்தது, உயிர் நண்பனோடு ஓரிரவு தங்கி மகிழ்ந்தது, தெரியாத ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் அந்நியனாய் நுழைந்து வாழ்வியல் வகுப்பெடுத்து சிரிக்க வைத்து அழ வைத்து சிந்திக்க வைத்து வளர்ச்சியை நோக்கி நகர வைத்து அன்யோன்யமானவனாய் வெளியேறியது, அதிகாலைக் குளிரில் பெரிய ஏரியின் அருகில் தியான அனுபவம், ஸ்போர்ட்ஸ் சைக்கிளிங் முயற்சி, எலக்ரானிக்ஸ் சிட்டியில் ஊர்த்தம்பியோடு உணவு, ஓசூரில் மலர்ச்சி மாணவரோடு இளநீர், இரண்டு முறை மனமுருகி பிரார்த்தனை, இவற்றிற்கிடையே நிறைய கனவுகள் வளர்த்தல் என நிறைய அனுபவங்கள் பெற்று கொஞ்சமேனும்  முன்னேறியிருக்கிறேன் என்று தோன்றுகிறது.  ஒரு நாள் முழுக்க வாழ்வியல் பயிற்சி ஆங்கில உரை அதிகாரிகளுக்கு எடுத்ததில் எந்தெந்தத் தவறுகளையெல்லாம் களைய வேண்டும் என்றறிந்ததில் என் ஆங்கிலம் கொஞ்சூண்டு வளர்ந்திருக்கிறது.  இவையெல்லாம் என் வாழ்வில் நடந்தேறக் காரணமான அந்த இறை சக்தி மீது இன்னும் ஆழ்ந்த நம்பிக்கை வந்திருக்கிறது.

நேற்றைய நாளிற்கும் இன்றைய நாளிற்கும் இடையே கொஞ்சமேனும் மாறியிருந்தால், முன்னேறியிருந்தால், தவறு களைந்திருந்தால் அது வளர்ச்சி.
இல்லையேல் அது தளர்ச்சி. 

நாளின் பொழுதுகளை நல்ல அனுபவங்களால் நிறைக்கும் என் இறைவா, நன்றி!

முன்தின உணவிற்கும், இன்றைய உணவிற்கும் இடையில் இடையில் என் வலிமை கூடியிருக்கிறது.

கொஞ்சமேனும் முன்னேற்றம் என்ற நினைப்பே, ‘நான் வளர்கிறேனே மம்மீ!’ என்று பாட வைக்கிறது.

‘ஸ்பெஷல் மீல்ஸ்’ வருகிறது, எனக்கு சாப்பிட வேண்டும்.

– பரமன் பச்சைமுத்து
வேலூர்,
07.04.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *