மனதில் நீர்வார்த்த வானிலை அறிக்கை!

வட இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர்ப் பஞ்சம், நீரின்றி தவித்து வறட்சியால் கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது, சட்லஜ் – பாக்ரா நங்கல் நீர்ப் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது, ‘ஐபிஎல்’ஐயே தடை செய்யவேண்டும் என்ற பொதுநலவழக்குப் போடுமளவிற்கு மகாராஷ்டிரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்று தினம் வரும் செய்திகளைப் படித்து விட்டு மாநில செய்திகளைப் பார்த்தால், பகீரென்கிறது.  தென்னாற்காடு மாவட்டத்தில் சில கிராமங்களில் நிலத்தடி நீர் வறண்டு போனதால் பொதுமக்கள் சைக்கிளில் குடங்களை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர்களுக்குப் போய் நீர் கொண்டு வருகிறார்கள்.

தீபாவளி சமயத்தில் வானம் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து வெள்ளத்தில் மூழ்கித் தவித்த கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வறண்டு போனது என்ற நிலை, எல்லாத் தண்ணீரையும் கடலில் விட்டுவிடும் நம் நீர் மேலாண்மையின் நிதர்சன நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  கோடை தொடங்கும்போதே இப்படி என்றால், கோடையின் உச்சம் எப்படி இருக்கும் என்று கவலை வருகிறது. தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும்போதும், பரப்புரை செய்யப் புறப்படும் தலைவர்களைப் பார்க்கும் போதும் பற்றிக் கொண்டு வருகிறது.

‘வர இருக்கும் தென்மேற்குப் பருவமழை எப்போதும் பெய்யும் அளவை விட அதிகமாக இருக்கும்!’ என்ற வானிலை அறிக்கை கொஞ்சம் மனதில் தூறல் வீசுகிறது. தென்னாற்காட்டிற்கும் தென்மேற்குப் பருவ மழைக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி எழலாம்.  டெல்லி, மும்பை, கேரள பிரதேசத்தில் பெய்யும் அம்மழை கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதியிலும் பெய்யுமே! அதிகம் பெய்தால் மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் சில நதிகளின் வழியே தமிழகத்திற்கு நீர் வருமே!  அரசியல் தலைவர்கள்தான் உதவுவதில்லை, இயற்கையாவது உதவட்டுமே!

– பரமன் பச்சைமுத்து

13.04.2016

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *