‘மலைகள் அழகானவை’ அல்லது ‘மலேய்டா…!’

மலைகள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. ‘குணா’ பார்த்து விட்டு ‘புண்ணியம் செய் மனமே’ அந்தாதி சொன்ன கமலஹாசன் பாத்திரம் நம்மைப்போலவே இருக்கிறதே என்று வியந்திருக்கிறேன்.  கர்நாடகாவில் இருந்த காலங்களிலெல்லாம் மலைமுகடுகளில் திரிந்திருக்கிறேன்.

சென்ற ஆண்டு சாவன்துர்கா, மேற்குத் தொடற்சியின் கல்கொத்தி மலை மற்றும் போளூர் அடுத்த பர்வதமலை ஏறிய போது கால்கள் விரையும் வேகங்கண்டு ‘மனிதக் கால்களா, மலைக் குரங்குக் கால்களா!’ என்று உடன் வந்தவர் வியந்ததை அறிவேன்.   மலையைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவகை ‘பிசிறு’ பிடிக்கும் எனக்கு.

கோவையிலிருந்து ஊட்டி சென்ற போது, ஒரு மலையைப் பார்த்து ஏறி கிறங்கி இறங்கி வந்தபோது என் காரில் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்தது. அந்தக் குரங்கோடு கழித்த தருணங்களின் தாக்கமே  ‘குரங்கிலிருந்து பிறந்த மனிதா’ கட்டுரையாகி ‘மனப்பலகை’யில் இடம் பிடித்தது.

உடற்பயிற்சி செய்வதே மலையேறத்தான் என்பது என் உள்ளே இருக்கும் ஒரு விதி.  என் உடற்பயிற்சி வகுப்பிற்கு வருபவர்களையும் அதற்கே தயார் செய்து அழைத்துப் போவதென் வழக்கம்.

உலகத்து அத்தனை நதிகளின் நீர் பருக வேண்டும், சில கடல்களில் பயணிக்க வேண்டும், பல மலைகளில் ஏறி உச்சி பார்த்து உருக வேண்டுமென்பது என் சிறிய ஆசை.   என் மலை ஆசை, என் மாணவர்களுக்குத் தொற்றி, ‘சார், சொந்தமா ஒரு மலை, அதில  ஒரு வீடு’ என்றாகிப் போனது புதுச்சேரி சதீஷ் என்ற மாணவரின் முடிவு.

மலைகள் பிரமிப்பானவை. அதனால்தானோ என்னவோ,  ‘மலேய்டா…!’ என்ற அந்த ‘பஞ்ச் டயலாக்’ சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாத்திரத்தின் தன்மையை உயர நிறுத்துகிறது.

மலை பெரிய அதிசயம். பூமிப்பந்தை நிறுத்தி வைக்க அழுத்தமாய் அறையப்பட்ட ஆணிகள் அவை என்பது இசுலாமிய நம்பிக்கை.  பிரம்மனுடைய தவறால் கோபம்கொண்டு வெடித்து நெருப்புப் பிழம்பாய் நின்று பின்பு குளிர்ந்து அருணையாய் நிற்கிறது எனப்படும் திருவண்ணாமலையாகட்டும்,
அதிலிருந்து சில கிலோமீட்டரில் தனித்து நிற்கும் சோமாசிப்பாடி குன்று ஆகட்டும், அல்லது ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் இருந்த இந்திய பகுதி பூமித்தட்டுகள் மோதலில் பிய்த்துக்கொண்டு ஆசியாவில் இணைந்த போது பெரிதாக எழுந்ததாக சொல்லப்படும் இமயமலை ஆகட்டும் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பை கொண்டிருப்பதாகவே தோன்றும் எனக்கு.  பூமிக்கடியில் இணைந்தே செல்லும் கிழக்குத் தொடற்சி மலையைப் போலத்தான் எல்லா மலைகளும் அடியில் ஆழத்தில் இணைந்திருக்குமோ என்று கூட எண்ணம் வருவதுண்டு எனக்கு.

காலங்கள் மாற மாற வெய்யில், மழை, பனி பட்டு மலையின் தன்மை மாறுமாம். சில இறுகி உடைந்து போகுமாம்.  செஞ்சி பாதையில் மேல்மலையணூர் பக்கத்தில் இருக்கும் மலை பிரமிக்க வைக்கும்.   எந்திரன் படத்தில் வரும் பல சிட்டி ரோபோக்கள் இணைந்து ஒரு பெரிய உருவமாய் நிற்குமே ‘ஐ வாண்ட் சனா டாட்’ என்று, அப்படித்தான் தோன்றும் அம்மலை. பல நூறுவருட மலை முற்றிலும்  உடைந்து கற்குவியலாய், வானவீதியில் ரோடு போட்டுவிட்டு மீந்த ஜல்லிகளை பூமியில் ஒரே இடத்தில்  கொட்டி குமித்து வைத்ததைப் போல.  ராஜா தேசிங்கின் கோட்டையை விட இந்த குவியல் கற்கள் மலை அதன் காலம் பற்றி என்னை அதிகம் சிந்திக்க வைத்திருக்கிறது.

மலைகள் இன்னும் பூமியை மனிதர்களிடமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் உற்பத்திசெய்யும் கரிமில வாயுவிற்கெதிராய் பல ஆக்ஸிஜன் ஃபேக்டரிகளை நடத்துகின்றன.

யுப்ராஸ் மலையில் ஆசியாவில் ஏறி ஐரோப்பாவில் இறங்கினால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டாலும், ஜப்பானின் ஃப்யூஜியில் ஏறியிருந்தாலும், மேற்குத் தொடற்சி மலை என்றால்  ஒரு தனி மகிழ்வெனக்கு.
மேற்குத்தொடற்சி மலையை யுனெஸ்கோ எடுத்துக் கொண்டதில் அப்படியொரு மகிழ்ச்சி எனக்கு. எப்படியாவது திரும்ப ஆட்சியைப் பிடித்து தன் சமாதிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் இடம் பிடித்துவிட வேண்டுமென்று உட்கார்ந்திருக்கும் ஓர் அரசியல் தலைவரைப் போலவே என் அந்திம காலம் மேற்குத் தொடற்சி மலையில்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான்.

‘ஆழம் அதிகம் இருக்கும் இடத்தில் அலைகள் அடிக்காது, ஆர்ப்பாட்டம் இருக்காது’ என்று கடல் பற்றி கண்ணதாசன் சொன்னது மலைகளுக்கும் பொருந்தும்தானே. உயரம் அதிகம் இருக்குமிடத்தில் ஆர்ப்பாட்டங்கள் இருப்பதில்லை. சில வருட வாழ்க்கை, ஒரு வெற்றிக்கே உயர உயர குதிக்கும் மனிதர்களுக்கு அருகில் மலைகள் உயர்ந்து நிற்கின்றன.
எத்தெனையெத்தனை நூற்றாண்டுகளாய் நின்றும், எது நடந்தபோதும் என் முப்பாட்டனுக்கு முப்பாட்டனை பார்த்த மலை, அப்படியே நின்று கொண்டிருக்கிறது ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யாமல்.

ஒரு மலையில் இருக்கும் தாவரங்களும் மற்ற மலை தாவரங்களும் வேறுபடுவதை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு மலைத்தேனிற்கும் வேறு வேறு மருத்துவ குணங்கள் தெரியுமல்லவா? கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் போகும் நெடுஞ்சாலையில் இரு மலைக்கிடையே போகும்படியான பாதையில் இருமங்கிலும் இருக்கும் கருவேல மரங்களை கவனித்திருக்கிறீர்களா? சிறுவர்களுக்கு சலூனில் செய்யப்படும் ‘மஷ்ரூம் கட்’ போல மேற்பக்கம் வெட்டப்பட்டது போலவே அவை வளர்வதை கவனித்திருக்கிறீர்களா?

மலைகள் அழகானவை. அதன் சரிவுகள் செழிப்பானவை. அதற்காகத்தான் பிரித்தானியர்கள் இந்த மண்ணைப் பிடித்துக் கொண்டார்களோ என்ற சந்தேகம் நெடுநாட்களாய் உண்டெனக்கு.

மலைகள் ஒரு வகையில் மழையைப் போன்றவை. அதனுடன் எது சேர்ந்தாலும் இன்னும் அழகாகிவிடும். காலைச்சூரியன், மாலைச்சூரியன், ஆர் வி உதயகுமார் பட வீடு, குமரன் கோவில்கள், கோடை வாசஸ்தலங்கள், ரிசார்ட்டுகள் என எதுவானாலும் மலை சேர்ந்தால் இன்னும் அழகு சேரும்.

மனிதர்கள் மலைகளை மதிக்க வேண்டும் என்றேதான் சமயங்களும் மலைகளை சேர்த்தே வைத்தனவோ தங்களோடு!
தென்னாடுடைய சிவனேயானாலும் வசிப்பது கயிலாய மலை,  குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடங்கள், தேவகுமாரனின் மலைப் பிரசங்கம், சேஷசைலம், ஏழுமலையான், செந்தூர் கடலிற்குள் முருகனின் வேல்பட்டழிந்த மலை என்று சமயங்கள் எல்லாமும் மலைகளை மலையளவு உயர்த்தியே பிடிக்கின்றன.

விடுமுறையில் உற்சாகம் வேண்டி ஒரு ‘தீம் பார்க்’கிற்கு போய் வருகையில் சக்தியிழந்து வரும் நீங்கள், ஒரு மலைக்குப் போய் வருகையில் சக்தி சேர்ந்து வருவதை உணர்ந்திருக்கிறீர்களா? மண்ணுக்கும் மலைக்கும் உயிருண்டு என்று நம்மாழ்வார் சொன்னதை நம்புவீர்களா?

ஒவ்வொரு முறை உச்சி முகட்டில் ஏறி நிற்கும் போதும் உயிராற்றல் பெருகுவதாய் ஓர் உணர்வெனக்கு.

அடுத்த முறை ஒரு மலையைப் பார்க்கும் போது, இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அவை வரலாறுகளை தின்று இன்னும் நின்றுகொண்டிருக்கின்றன.

(கிருஷ்ணகிரிக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் வரும்
‘ஞானமலை’யில் ஏறி நிற்கிறேன்)

– பரமன் பச்சைமுத்து
05.04.2016

1 Comment

  1. subramaniyan

    விடுமுறையில் உற்சாகம் வேண்டி ஒரு ‘தீம் பார்க்’கிற்கு போய் வருகையில் சக்தியிழந்து வரும் நீங்கள், ஒரு மலைக்குப் போய் வருகையில் சக்தி சேர்ந்து வருவதை உணர்ந்திருக்கிறீர்களா? மண்ணுக்கும் மலைக்கும் உயிருண்டு என்று நம்மாழ்வார் சொன்னதை நம்புவீர்களா?

    என்னை மிகவும் கவர்ந்த , சிந்திக்க வைத்த வரிகள். பரமனின் எழுத்து நடை மிகவும் அழகாக உள்ளது வாழ்துகள் பரமன்.
    தி.சுப்ரமணியன்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *