நதி போல ஓடிக் கொண்டிரு… 5 

​ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதற்கு நெருங்கிய நண்பராக இருந்துதான் செய்ய வேண்டியது இல்லை. நெருக்கம் இல்லாமலே கூட செய்ய முடியும். அதுவே நடந்தது ஹரீஷின் வாழ்விலும் அன்று.

ஹரீஷ் அந்த மென் பொருள் இணையதள நிறுவனத்தின் இணையதள கட்டமைப்பை கவனித்துக் கொள்ளும் பொறிஞன். வெப் சர்வர்கள், அதை அப்படியே நகலெடுத்து பதிவேற்றி பாதுகாப்பாய் வைத்துக் கொள்ளும் பேக்கப் சர்வர்கள், இணைய தள சேவை புரிய உதவும் ரௌட்டர் சாதனங்கள், இன்ன பிற இத்யாதி உபகரணங்கள் ஆகியவற்றால் நிறைந்தது அவனது அந்த நிறுவன வாழ்க்கை.  நீங்கள் உங்களது கணிப்பொறியில் அல்லது செல்லிடப் பேசியில் ஒரு இணைய தளத்தை பார்க்கும்போது, அதை நிகழவைக்க பின்னணியில் இந்த சாதனங்கள் எல்லாம் செயல்படுகின்றன. அந்த சாதனங்களை ஒரு குழந்தையைப் போல கண் வைத்துக் காத்து செயல்படுவது ஹரீஷ் மற்றும் இரண்டு பேரின் வேலை.

சக பணியாளனை சர்வர் ரூமில் இருக்க வைத்துவிட்டு ஆறுஆ அடுக்கு அலுவலக கட்டிடத்தின் ஆறாவது தளத்திலிருக்கும் திறந்த வெளி  உணவகத்தில் வந்து இறுக்கமாய் உட்கார்ந்திருந்தான்.  எதிரில் இருந்த கேப்பச்சீனோ ஆறி  குளிர்பானம் போல் ஆறிப் போகுமளவிற்கு உலகை மறந்து உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்.

‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ என்று வைரமுத்து எழுதியது போல சர்க்கரை, பால் இல்லாத அஸ்ஸாம் தேநீரோடு வானம் குடித்துக் கொண்டிருந்த சிவநெறித்தேவனின் பார்வை ஹரீஷின் மீது பட்டது.

சுற்றியுள்ள உலகையே மறந்து, சுய சிந்தனைகளில் ஆழ்ந்து கவலையில் உறைந்துபோய் உட்கார்ந்திருந்த ஹரீஷை கவனித்தவன் அவனை நோக்கி வந்தான். எதிரில் சிவநெறித்தேவன் அமர்ந்ததே அறியாமல் உறைந்து இருந்தான் ஹரீஷ். அவனது தோள்களை மெதுவாக தொட்டான் சிவநெறித்தேவன். உயிர் பெற்று வந்தவன் திடுக்கிட்டு அதிராமல் இருக்க அவர்களை முதலில்  இயல்பிற்கு கொண்டு வரவேண்டும்.  ‘ஹாய்… ஹலோ…’  எல்லாம் சொல்லாமல் அவர்களது சிந்தனையை வேறு தளத்திற்கு இழுத்துப் போவது சிவநெறித்தேவனுக்கு கைவந்த ஒன்று.

“காச நோய் வந்தவளும் கண்ணுறங்கும் வேளையிலே…’ எப்படி எழுதியிருக்கார் இல்ல இந்த வைரமுத்து!  ‘கடல்’ படத்து பாட்டு. என்ன சொல்றார் புரியுதா?

நோயின் கொடுமை இரவில் தெரியும். அதுவும் காச நோய் வந்தால் லொக்கு லொக்குன்னு இருமி அடி வயிறு, தொண்டை எல்லாம் இழுத்து தூக்கமே தொலைஞ்சி போயிடும்.  அப்படி காச நோய் வந்தவள் எல்லாம் கூட தூங்கிட்டாங்களாம். ஆனா யாரால தூங்க முடியலயாம்,  அடுத்த வரில சொல்றாரு!”

ஹரீஷ் சொன்னான் இரண்டாவது வரியை, ‘ஆச  நோய் வந்த மக அரை நிமிஷம் தூங்கலியே…’

சிவநெறித்தேவன் அதைத் தொடர்ந்த அடுத்த வரியை பாடினான், ‘நெஞ்சுக்குள்ளே… உம்ம முடிஞ்சிருக்கேன்…’ 

ஹரீஷும் சேர்ந்து கொண்டான்.

‘இங்கு எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ… வெள்ளப் பார்வை ஒன்ன வீசி விட்டீங்க, இதத் தாங்காத மனசு தண்ணிப் பட்ட கண்ணாடி…’  

இருவரும் பாடினார்கள். இறுதியில் வாய்விட்டு சிரித்தார்கள்.

‘உனக்கு இன்னும் சில மாசங்கள்ல கல்யாணம்ன்னு உன் டீம்ல சொன்னாங்களே!’

‘ஆமாம்… அடுத்த வாரம் டீம் ட்ரிப் வால்பாறைக்கு போலாம்னு இருக்கோம், அது ஒரு பக்கம்’

‘வால்பாறை… திருமூர்த்தி மலை, டாப் ஸ்லிப்… நம்ம தமிழ் சினிமாவின் முக்கிய ஏரியாக்கள். போயிட்டு வாங்க. செமையா இருக்கும்!’

‘இல்லீங்க. இரண்டும் முடியாது. ஏதாவது ஒண்ணுதான் பாஸிபிள்ங்கறா அனு’

சிவநெறித்தேவனுக்கு பிரச்சினை விளங்கி விட்டது. ‘காபியா… டீயா?’ என்று கேட்டு, ஹரிஷின் பதிலைப் பெற்று, எழுந்து போய் ஒரு கோப்பை கஃபே லாத்தே வாங்கி வந்தான். 

‘ஓர் உறவு துவங்கி பல நிலைகளை கடந்து வளர்கிறது. ஒவ்வொரு நிலையிலும் உறவிலிருக்கும் மனங்களின் நிலைப்பாடு வேறாக இருக்கும். ‘நீ எனக்கு முக்கியம்’ என்பது முதல் நிலை.  அந்த நிலை வந்து தொடங்கிய உறவு நெருங்கிப் பழக பழக, அடுத்த நிலைக்கு உயரும். சில விஷயங்கள் சரியாகப் போகாத போது, ‘நீ எனக்கு முக்கியம்’ என்ற நிலையில் தொடங்கிய உறவு ‘அப்போ… நான் உனக்கு முக்கியமில்லையா?’ என்ற நிலைக்கு வந்து, முற்றிப் போய்

‘நான்தான் உனக்கு முக்கியம்!’ என்ற நிலைக்கு வந்துவிடும்.

இந்த நிலைக்கு பெண் வரும் போது, ஆண் ஆடிப் போகிறான்.’ என்று சிவநெறித்தேவன் சொன்னதும், ‘அய்யோ… நம்ம லைஃல நடக்கறத அப்படியே சொல்றாரே!’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தான் ஹரீஷ்.

சிவநெறித்தேவன் தனது அஸ்ஸாம் தேநீரையும், ஹரீஷ் கஃபே லாத்தேவையும் கொஞ்சம் பருகினார்கள். சிவநெறித்தேவன் தொடர்ந்தான்.

‘‘நான்தான் உனக்கு முக்கியம்!’ என்ற நிலைக்கு வருபவர்கள் ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அடுத்தவர்கள் மீதும் அழுத்தத்தை பாய்ச்சி விடுகிறார்கள். அழுத்தம் ஏற்படுத்தும் சூட்டில் வெந்து தவிக்கிறார்கள்.’
ஹரீஷ் உலகை விட்டுவிட்டு சிவநெறித் தேவனோடு ஒன்றி விட்டான். உன்னிப்பாக கேட்டான்.

‘அன்பென்பது எப்போதும் அணைத்துக்  கொண்டே நிற்பதல்ல. நான் இருக்கிறேன் உன்னோடு என்று உணர்த்துவது. ‘எனக்கு நீ முக்கியம்’ என்று அடுத்தவருக்கு உணர்த்துவது. உன் அருகாமையும், அணைப்பும், அன்புப் பரிமாற்றங்களும் குறைந்து போயிருந்தால், அனுவுக்கு ஒரு வித இழப்பு பயம் வந்துவிடும்.

கூடவே நீ நண்பர்களோடு சில நாட்கள் வால்பாறை பயணம் என்று கிளம்புவது ஏற்கனவே இருக்கும் இழப்பு பயத்தை அதிகரிக்கும். இதன் விளைவே, நீ போகக் கூடாது என்ற தீர்மானமாக வெளிவருகிறது.’

‘நான் எப்படிப் போகாமல் இருக்க முடியும்?’

‘போக வேண்டும். கூடுமான வரை இது போன்ற பயணங்களை தவற விடக் கூடாது. ஆனால், முதலில் வீட்டில் எரியும் நெருப்பை அணைக்க வேண்டும். அப்புறம் போகலாம் வெளியூர் பயணம். இந்த ஒரு வாரம் முழுக்க ‘நான் இருக்கிறேன் உன்னோடு’ என்று உணர்த்து.

அன்பு வெறும் வாய் வார்த்தைகளாக வெளிப்படும் போது, ஆரம்பத்தில் நம்பப்படும். நடத்தையில் அது வெளிப்படத் தவறினால், நம்பிக்கை தேய்ந்து விடும். நடத்தையில் காட்டு! ஒரு வாரம் இதுதான் ப்ராஜக்ட் என்று செயல்படு. அடுத்த வாரம் வால்பாறைக்கும் போகலாம், டாப் ஸ்லிப்பில் தங்கி வனத்திற்குள்ளும் உலவலாம்!

அன்பென்பது… நான் இருக்கிறேன் என்று உணர்த்துவது. நீ முக்கியம் என்று உணரச் செய்து அன்பை ஊற்றும்போது ‘நான்தான் முக்கியம்! நான் மட்டுமே முக்கியம்!’ என்ற உணர்ச்சி வெடிப்புகள் மறைந்து போகும். கலக்கு நண்பா!’ என்று சொல்லி ஹரீஷைக் கட்டியணைத்தான் சிவநெறித்தேவன்.

‘அன்பென்பது நான் இருக்கிறேன் உன்னோடு, நீ முக்கியம் எனக்கு என்று உணரச் செய்வது…!’ என்று சொல்லிக் கொண்டிருந்தான் ஹரீஷ்.

எழுந்துபோய் வானம் பார்த்தலை தொடர்ந்த சிவநெறித்தேவன் வாய்விட்டு பாடினான்.

‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்…’

அவனது செல்லிடப் பேசி சிணுங்கியது. சிங்கப்பூரிலிருந்து ஓர் அதிர்ச்சி செய்தி என்பது தெரியாமல் அதைக் கவனிக்காமல் அவன் பாடிக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

‘வளர்ச்சி’ மாத இதழில் நான் எழுதும் “நதி போல ஓடிக் கொண்டிரு…” தொடரிலிருந்து 

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *