ஊமை காக்கை ஒன்று…

​அலுவலக சங்கதிகள் சிலவற்றிற்காக என் வீட்டிற்கு வந்திருந்த கோமு தங்கம் வரவேற்பரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
சமையலறையைத் தாண்டி சன்னலின் கண்ணாடிகளில் ‘டக் டக் டக்’ சத்தம். நாங்கள் தொடர்ந்து பேசினோம். சப்தம் அதிகரித்தது. தொடர்ந்து பேசினோம்.

‘கா…கா…கா…’ என்று கரையும் சத்தம் இப்போது.
‘தங்கம் ஒரு நிமிஷம் இருங்க, காக்கா சாப்பாடு கேக்குது, அதுக்கு பசிக்கற நேரம் இப்போ! நான் வெளியில  போய்ட்டு இப்பதான் வந்தேன்!’ 
காக்காவுக்கும் அணிலுக்கும் என வைக்கப்பட்டிருக்கும் அன்னக் கிண்ணம் காலியாகவும், தண்ணீர்க் கிண்ணம் நிரம்பவும் இருந்தது.
ஒரு கரண்டி அன்னத்தை கிண்ணத்தில் போட்டு விட்டு ‘கா… கா… கா…’ என்று கூவியழைத்த பரமன் மிக விநோதமாக தெரிந்தான் போல அவருக்கு. பேசி முடித்துவிட்டு போகும் போது ‘முற்றிலும் வேறொரு விதமாய் பார்க்கிறேன் உங்களை!’ என்று சொல்லிப் போனார்.
முதலில் ‘டக் டக் டக்’ என்று சத்தமெழுப்பியதும், அதன் பிறகு ‘கா… கா… கா…’ என்று கரைந்ததும் வேறு வேறு காகங்கள் என்பது தங்கத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது கத்திக் குரலெழுப்ப முடியாத ஊமைக் காக்கை. சன்னலின் கண்ணாடியை தனது அலகால் ‘டக் டக் டக்’கென்று தட்டித் தட்டி ‘சோறு போடறியா?’ என்று எங்கள் வீட்டில் வந்து கேட்கும். இதைக் கண்டறிய எங்களுக்கு சில மாதங்கள் பிடித்தன.
காக்கையை நாங்கள் கண்டறிந்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்க,  உண்மை வேறாக இருக்கலாமோ!  இவ்வளவு பெரிய மனித சமுத்திரத்தில் அந்தக் காக்கை எங்களைக் கண்டறிந்ததோ! 
பரமன் பச்சைமுத்து

சென்னை

04.11.2016

1 Comment

  1. balamurugan

    அருமை பரமன்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *