நிலமடந்தைக் கெழில் ஒழுக நீர் வேண்டும்…


பனிப்பொழிவால் தள்ளிப் போன எங்கள் பருவமழையே வா! 
நிலமடந்தைக் கெழில் ஒழுக…

நீர் வேண்டும் அல்லவே!

நீர் வேண்டும் அதனால் ‘நீர் வேண்டும்’  வா! 
அண்டை மாநிலங்கள் தரமறுப்பதை ஆண்டவன் தருவானென்று தெரியும், 

அரிய நீரே வா, ஆற்றாமை தீர்க்க வா!
ஒரு மாதத்து மழையை ஒரே நாளில் மதம் பிடித்து கொட்டாமல்,

இரண்டோ மூன்றோ மாதங்கள் எடுத்து மிதம் பிடித்து பொழிவாய்  மாமழையே.
வடகிழக்குப் பருவ மழையே வருவாய்,

வளம் தந்து வளர்ச்சிகள் பல தருவாய்!
வளிமாசு, ஒலிமாசு கடந்து இல்லாமையால் ‘காசு…காசு’ என்றே கதற வைக்கும் மனமாசு என பூமிப்பந்தின் அத்தனை மாசுகளையும் கழுவித் துடைக்கும் ஒரே மருந்தே வா! 
வா… பெய்!

எங்கள் குடைகள் பொத்துக் கொண்டு ஊற்றுமளவுற்கு பெய்!

மடைகள் திறந்து மதகுகள் வழியுமளவிற்கு பெய். 
நிலம் குளிரட்டும்,

நிலத்தடி நீர் உயரட்டும்

நீர் வரவேண்டும் அதனால் நீர்வர வேண்டும் வா!
சுடு நீரும் குறுமிளகும் தூதுவேளையும் கண்டங்கத்தரியும் துண்ணூற்றுப் பச்சிலையும் துளசியும் இஞ்சியும் கொண்டே இருமலை கபத்தை எதிர்கொண்டு எங்களை காத்துக் கொள்கிறோம் நாங்கள். பூமியை காக்க உயிர்களை காக்க நீ வாயேன்!
வா மழையே வா, 

மாமழையே வா!
பயிர்கள் துளிர்க்கட்டும்,

உயிர்கள் செழிக்கட்டும்,

வளர்ச்சி கிட்டட்டும்,

மலர்ச்சி வரட்டும்…

மழையே வா!
மலர்கள் தூவி

மனமார விழைகிறோம்,

மழையே வா! 
– பரமன் பச்சைமுத்து

31.10.2016

சென்னை 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *