‘கவலையா, அதெதுக்கு?’

20170618_143208-1.jpg

வீட்டில் இப்படி இருக்கிறது நாட்டில் இப்படி நடக்கிறது உலகம் இப்படிப் போகிறது என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் கவலைகள் ஊறிப் பெருகும் இந்தக் காலவெளியில், பெரிய மனிதர்களும் ‘வல்லான்’களுமே கவலைகளில் கனத்துப் போகும் நிலையில், கவலைகளை அப்படிச் சட்டெனக் கடந்து போகும் ஒரு சாமானிய மனிதரைக் கண்டால் பிரமிப்பாக இருக்கும்தானே! இவரிடம் கற்றுக்கொள்ள சங்கதி இருக்கிறது என்று தோன்றும்தானே! உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்து உள்ளிருக்கும் உதிரத்தை மூளையை சுண்டச்செய்துவிடுமோ என்று ஐயம் கொள்ளச்செய்யும் நண்பகல் வேளையில் சென்னை அண்ணா நகரின் வீதியொன்றில் இவரைச் சந்தித்த போது எனக்கு அப்படியே தோன்றியது.

சோழ, பாண்டிய அரசுகளின் எல்லையில் இருந்த ஊர் ஆகையால் எல்லையைக் குறிக்க சுவர் (அரண்) அமைத்து இருந்த ஊர் ஆகையால் ‘அரண்தாங்கி’ என்று அப்போது அழைக்கப்பட்டு, ‘அறந்தாங்கி’ என்று ஆகிப் போன அந்த ஊரிலிருந்து வந்து சென்னையின் மையப் பகுதியில் வாழும் மனிதர் இவர். சென்னையின் அண்ணா நகர் ரவுண்டானா மற்றும் கே4 காவல் நிலையம் ஒட்டிய பகுதியில் குடியிருப்போர் பலர் மிடுக்காக உடையணிந்து செல்லக் காரணமானவர், அந்தப் பகுதியில் துணிகளைத் தேய்த்து சுருக்கம் நீக்கி ‘இஸ்திரி’ செய்து தருபவர் திரு. செல்வராஜ்.

‘எவ்ளோ வருஷமா இந்த வேலையை செய்யறீங்க ?’

‘இந்தப் பொட்டி போடற வேலையா? இருவத்தியஞ்சி வருஷமா செய்யறேன்’

‘எப்படி இருக்கு இந்த வேலை?’

‘அதுதானே நம்பள, நம்ம குடும்பத்தையே காப்பாத்துது’

‘இதுக்கு எப்படி வந்தீங்க?’

‘எப்படி வந்தனா? சார், அப்பா எனக்கு பதினோரு வயசு. படிப்பு வரல. எல்லோரும் பட்டணத்துக்கு வேலைக்கு போனாங்க. கூட்டிட்டுப் போனாங்க, நானும் அவங்களோட கெளம்பி போனேன். த்ரிப்ளிகேணியில (‘திருவல்லிக்கேணி’ என்ற தமிழ்ப் பெயரையும் ‘ட்ரிப்லிக்கேன்’ என்ற அதன் ஆங்கிலப் பெயரையும் கலந்து ‘ட்ரிப்லிக்கேணி’ என்று கூறுவது அந்நாளைய சென்னையின் அடித்தட்டு மக்களின் வழக்கு வழி) மீனாட்சி மெஸ் மீனாட்சி மெஸ்ஸுன்னு ஒண்ணு இருந்தது. கடல் ஓரம். இவ்வளோ கட்டடம் எல்லாம் வரல அப்போ. அந்த ஓட்டல்ல போய் சேத்து வுட்டாங்க. டேபிள் துடைக்கனும் சார். அப்பறம் பாத்திரம் கழுவனும். அதான் வேலை. அப்படித்தான் சென்னைக்கு வந்தேன் நான். அங்கேருந்து ஒரு டீக்கடை. டீ குடுக்கறது, கிளாஸ் எடுத்திட்டு போறது, கழுவறது எல்லா வேலையும் செய்யணும். அங்கேருந்து ஒரு சேட்டு ஊட்ல வேலைக்கு சேர்ந்தேன். இப்ப மாதிரி நின்னுகிட்டே தொடைக்கற குச்சி எல்லாம் கெடையாது அப்போ. டைல்ஸ் வீடு, துணியை மடிச்சு முட்டி போட்டுகிட்டே வீடு முழுக்கத் தொடைக்கணும். நாலு மணி நேரம் ஆயிடும். அந்த வேலைய செஞ்சேன். இப்படியே இருக்கும்போது வீட்லு இருக்கற துணிய எல்லாம் அள்ளிப் போட்டு பொட்டிப் போட்டு குடுறான்னு தருவாங்க. ஒண்ணும் தெரியாது. துணிய தேய்ச்சி தேய்ச்சி கத்துக்கிட்டேன். நல்லா வந்துது. அப்ப இந்த அண்ணா நகர் பகுதியில எங்க ஊர்க்காரர் ஒருத்தர் இந்த வேலையை செஞ்சிட்டு இருந்தாரு. அவர் பின்னாலயே போவேன் தெனமும். கூடவே இருந்து என்ன செய்யறார், எப்படி செய்யணும்ன்னு பாத்துப்பேன். அப்புறம் அவரே சொல்லித்தந்தாரு. வீட்டுக்காரங்க கிட்ட சொல்லிவுட்டாரு. அஞ்சாயிரம் போட்டு வண்டி, தேய்க்கிற பொட்டி(அயர்ன் பாக்ஸ்) எல்லாம் வாங்கி அமைச்சிக்குடுத்தாரு. அப்படீயே செஞ்சிட்டு இருக்கேன். இருவத்தியஞ்சி வருஷம் ஓடிடுச்சி’

‘அந்தக் காலத்தில அஞ்சாயிரம் ரூவாய்ங்கறது பெரிய பணம் ஆச்சே! அவ்ளோ பணத்துக்கு என்ன செஞ்சீங்க?’

‘பணத்தை எடுக்கணும்னா பணத்த போட்டாத்தானே முடியும். பெரிய தொகைதான். தண்டல் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கட்னேன்.’

‘ஏன் இந்த வேலை? என்ன புடிச்சிது இதுல?’

‘வேற வேலை தெரியாது. இந்த வேலைதான் நமக்கு தெரியும். நல்லா செய்யலாம்!’

‘இதுல இருக்கிற கஷ்டம் என்ன?’

‘ஒண்ணும் இல்லையே. நல்லா செய்யலாமே!’

‘எப்ப தூங்குவீங்க? எப்ப எழுவீங்க?’

‘ராத்திரி வீட்டுக்குப் போனா இந்த ஒரு கை கொடையும் சார். இந்த வெயிட்டான பொட்டிய இழுத்து இழுத்து துணிய நாள் முழுசும் தேய்க்கறதில ராத்திரியில கைய வலிக்கும். காலு ரெண்டும் கொடையும். வலியில தூக்கம் வாராது. ராத்திரி பன்னெண்டு ஒண்ணு ஆயிரும். காலயில அஞ்சிக்கு எழுந்திடுவன் சார்.’

‘எப்ப வருவீங்க வேலைக்கு, எப்ப முடிப்பீங்க?’

‘ஒம்பதுக்கு வருவேன். முடிச்சிட்டு போக ராத்திரியாயிரும் சார்’

‘வேலையில ஏதாவது பிரச்சினை ஆயிருக்கா?’

‘பெருசா இல்ல. துணியை தேய்க்கும்போது கரி கிரி ஒட்டிக்கும் சில சமயம். திட்டுவாங்க. சில துணிங்கள பாத்துத் தேய்க்கணும். இப்ப நீங்க பேசிட்டு இருக்கீங்க. உங்க கிட்ட பேசிட்டே வேலை பாக்கறேன். இந்த மாறி சமயத்தில ‘லப்பர்’ துணிங்க அப்படியே ஒட்டிகிட்டு வந்திடும் ஓட்டையாயிடும் (‘நைலான்’ வகைத் துணிகளை சொல்கிறார்). பிரச்சினை ஆயிரும்’

‘இருவத்தியைந்து வருஷம் முன்னாடி வந்தீங்க. அப்ப ஒரு சட்டைக்கு எவ்வளோ, இன்னைக்கு ஒரு சட்டைக்கு எவ்ளோ?’

‘அப்போ ஒரு சட்டைக்கு பதினைஞ்சு காசு வாங்கினேன். இன்னைக்கு எல்லாரும் ஏழு ரூவா வாங்கறாங்க. இவங்கள்லாம் ரெகுலரா நம்மகிட்டயே பண்றதால ஆறு ரூவா வாங்கறேன் நான்.’

(யாரோ எழுதப் படிக்க அதிகம் தெரியாதவர் இழுத்து இழுத்து ‘செல்வராஜ்’ என்று தமிழில் அவரது வண்டியில் பெயிண்ட்டால் எழுதியிருப்பதை கவனித்து விசாரிக்கிறோம்)

‘இது யாரு எழுதினது?’

‘நான்தான் சார். எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. மூனாவதோட ஓடிவந்துட்டேன். அதுவும் அதுல ஒரு வருஷம் சரியாப் போகவே இல்ல. எழுத்தும் தெரியாது. கணக்கும் தெரியாது. இந்த தொழில்தான் எல்லாம் கத்துக்க வச்சது. ஒரு துணிக்கு இவ்வளோ, இத்தினி துணிக்கு இவ்வளோன்னு போக போக கணக்கும் கத்துக்கிட்டேன். எம்பேர எழுதக் கத்துக்கிட்டேன். நம்ம வண்டி அதுல நாம எழுதனதே இருக்கட்டும்ன்னுதான் நானே எழுதிட்டேன். பேரு கரெக்டா இருக்கா சார்!’

‘சரியா இருக்கு. ‘செ…ல்.. வ..ரா…ஜ்’ நல்ல இருக்கே!’

‘நீங்களே இந்த வண்டியில ஆசை ஆசையா எழுதியிருக்கறதைப் பாகும்போது, இந்த வண்டி மேல உங்களுக்கு ஒரு உணர்வு இருக்குன்னு தோணுது!’

‘ஆமாம் சார்! இந்த வண்டிதானே எல்லாம் எனக்கு. ஒரு குடும்பமே நிக்க காரணம் இந்த வண்டிதானே. ஆறாயிரம் ரூபா வீட்டு வாடகை. ரெண்டு பொண்ணுங்க ஒரு பையன். பெரிய பொண்ணு கிருஷ்ணசாமி காலேஜ்ல பிஎஸ்சி கம்ப்பூட்டரு குருப்பு படிக்கற. ரெண்டாவது பொண்ணு ப்ளஸ்டூ படிக்கறா. பையன் ஏழாவது. புள்ளைங்கள படிக்க வைக்க முடியுது, நகரத்துல வாழமுடியுது. இந்த வண்டிதானே எல்லாம்!’

‘ஆசை என்ன?’

‘டீக்கடை வாசல்ல வெளில கட்டையிலயே (ஃப்ளாட்ஃபார்ம்) தூங்க வேண்டி இருக்கும். ராத்திரியில போலீஸ் வந்து புடிச்சிட்டு போயிடும். ராத்திரி முழுக்க ஸ்டேஷன்ல ஒக்கார வச்சிருவாங்க. தூங்கமுடியாது கொசு கடிக்கும். காலைல வுட்ருவாங்க. வந்து தூங்கல்லாம் முடியாது முழு நாளும் வேலைதான் பாக்கணும். எவ்ளோ கஷ்டப் பட்டுட்டோம். நம்ம புள்ளைங்க அப்படி கஷ்டப்படக் கூடாது. அதுங்க படிச்சிட்டு ஏசி ரூம்ல வேலைக்குப் போவனும் அவ்ளோதான் சார் ஆசை. பசங்கள தயார் பண்ணி வுட்டுட்டு ஊருக்கு போயிடனும் கடைசிக் காலத்துக்கு’

‘சென்னை புடிக்கலையா?’

‘புடிக்கும் சார். ஆனா சாதி சனம் மண்ணோட போய் வாழனும். சார், இப்ப வயசு நாப்பத்தி மூணு. இன்னும் அஞ்சு வருஷமோ ஏழு வருஷமோதான் இந்த வேலையை செய்யமுடியும். ரத்தம் இருக்கற வரைக்கும் செய்யலாம். அப்புறம் இப்படி நின்னு கைய இழுத்து இழுத்து செய்ய முடியாது. அதுக்குள்ள புள்ளைங்க வளந்து நின்றுவாங்க. ஊருக்குப் போயிட வேண்டியதுதான்.’

‘போதுமான அளவுக்கு பணம் வருதா இதுல?’

‘செவ்வாய், வெள்ளி வேலைக்கு வரமாட்டேன். பொட்டிக்கு கரி வாங்க 160ரூவா, வீட்டுக்கு200ரூவா குடுத்திடுவேன். மிச்சம் எதுக்காவது தேவைப்படும். வேலைக்கு வந்தா 5௦௦ரூவா பாக்கலாம். பெருசா ஒன்னும் சேக்கல. ஆனா புள்ளைங்கள படிக்க வைக்க முடியுது. வாழ முடியுது. வேலை செஞ்சா பொழைக்கலாம் சார்’

‘உங்க கவலை என்ன?’

‘கவலையா… ஹாஹா நீங்க இப்ப நின்னு பேசறீங்களே அது ஒத்தையடிப் பாதையா இருந்தது நான் இங்க வரும்போது. தோ நிறுத்தியிருக்கீங்களே உங்க காரு. அதுக்குப் பக்கத்தில அந்த வீடு இருக்கே, அது ஒரு ஏரி. இதெல்லாம் காடு. இது ஒரு வீடா இருந்தது. இப்ப மாத்தி கட்டியிருக்காங்க. அந்த வீட்டுக்காரங்களும் போயி நாலு பேரு மாறி மாறி வாங்கி இப்ப அஞ்சாவதா ஒருத்தவங்க அத ஓட்டலா வாடகைக்கு வுட்டுடாங்க. இருக்கிற எல்லாமே மாறிட்டே இருக்கு, இதுல இருக்கறத நெனைச்சி கவலை படறது எதுக்கு? எப்படியும் எல்லாமே மாறப்போவுது!’

‘பெரிய கஷ்டங்கள் வந்தால்?’

‘கையில வேலை இருக்கே! பாத்துக்கலாம் சார்!’

‘நாளை பத்தி கவலை?’

‘‘இன்னைக்கு வேலை செஞ்சா இன்னைக்கு பொழுது ஓடிடும் சார். நாளை பத்தி ரொம்ப யோசிக்கறது இல்ல சார். நிறைய வேலை இருக்கு நமக்கு!’

#வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்

Facebook.com/ParamanPage

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *