ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும்

 

 

ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும் அல்லது சிரித்துக்கொண்டே உறங்கக்கூடும் மகிழ்ச்சியில். ருக்மணியக்கா மட்டுமல்ல, பரமசிவன் அண்ணா, அதிசயமும் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த கலவையான பாவனைகளை முகத்தில் கொண்டிருந்த மற்றப் பெண்களும், ஆண்களும் என தீபக் சில்க் வீவர்சின் எல்லா ஊழியர்களும்.
 
மலர்ச்சி M2 மாணவர் கோபி – பிரவீனாவின் புதிய விற்பனை மையத்தை திறந்து வைக்க காஞ்சிபுரம் போயிருந்தேன். இடம் வந்ததும் இறங்கியபோது அவர்கள் இசைத்த மேள தாள நாதஸ்வரம் கண்டு கொஞ்சம் அல்ல நிறையவே மருண்டு போனேன் என்றாலும் நிறைய மலர்ச்சி மானவர்களைக் கண்டதும் அவர்களைப் போலவே நானும் பெரும் மகிழ்ச்சி கொள்ளவே செய்தேன்,. கோபி – பிரவீனாவின் பெற்றோர்களுக்கு மரியாதை செய்து இறைவனைத் தொழுது திறப்பு விழா முடிந்து கிளம்புகையில் ‘இவ்வளவு மலர்ச்சி மாணவர்கள் ‘பரமன் வருகிறார்! என்று வந்தார்களே! அவர்களிடம் ஒன்றும் உறவாடாமல் போகிறோமே!’ என்று எண்ணம் மேலெழவே காரில் ஏறப்போன நான், திரும்பி செந்திலிடம் ‘அவர்கள் அனைவரையும் ஏதாவது ஒரு இடத்திற்கு வரச் சொல்லுங்கள்! கொஞ்சம் அமர்ந்து பேசுவோம் அனைவரிடமும்!’ என்று சொல்ல, தீபக் சில்க்ஸில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தாரவர், சில நிமிடங்களில் உற்சாகம் பொங்க கூடினர் காஞ்சி மலர்ச்சி மாணவர்கள் (சென்னையிலிருந்து வந்திருந்த வேலன், குத்தாலிங்கம் உட்பட).
 
எதிர்பார்த்து போவதோடு எதிர்பாரததும் சேர்ந்து நடப்பதுதானே வாழ்க்கை. வந்திருந்த மலர்ச்சி மாணவர்களோடு, தீபக் சில்க்ஸின் ஊழியர்களும் வந்து உட்கார்ந்து கொள்ள, கடையின் பட்டு விற்கும் அந்தப் பகுதி கணப் பொழுதில் நிறம் மாறி வாழ்வியல் போதிக்கும் வகுப்பறையாகிப் போனது. ஊழியம் பற்றி, உள்ளுணர்வு பற்றி, உட்கொள்ளும் உணவு வரும் வழியைப் பார்க்கும் விதம் பற்றி, உடுத்தும் உடையைத் தரும் வழி பற்றி, உலகம் கண் காது வைத்து கதை பேசும் வேளைகளில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி என சற்றே பெரிய ஒரு ‘ மலர்ச்சி உரை’ நிகழ்ந்தது. எங்கேயும் எப்போதும் கற்றுத் தெளியத் தயாராயிருக்கும் மலர்ச்சி மாணவர்கள் மகிழ்ந்து போயினர். அதைவிட மலர்ச்சியை பார்த்தோ கேட்டோ அனுபவித்தேயிராத அந்தக் கடையின் ஊழியர்கள் நெகிழ்ந்து போயினர். அவர்களுக்கு அது கேட்டேயிராத பார்த்தேயிராத பெரும் அனுபவம்.
 
வாழ்க்கையை வேறுவிதமாகப் பார்க்கக் கற்றதில் அகம் மகிழ்ந்து போயினர். ‘சார்… நெஜ்ஜமா சார். நீங்க சொன்னீங்களே அது எனக்குதான் சார். எனக்கு அதுதான் நடக்குது சார்! நான் இனிமே இப்படி இருப்பேன் சார்!’ என்று வெக்கம் கலைத்து மகிழ்ச்சியில் நிறைந்து சொன்ன பெண்மணியின் பெயர் ருக்மணியாம். இந்த ருக்மணியக்காக்களுக்கும், பரசிவன் அண்ணாக்களுக்கும் இவர்களைப் போன்ற கடை ஊழியர்களுக்கும் மலர்ச்சி சென்றடைய வேண்டும். என்ன கஷ்டம் இருந்தாலும் இரவில் நன்றாய் உறங்க, சிரித்துக் கொண்டே வாழ இவர்களுக்கு உதவ வேண்டும்.
 
இது போன்று கடை நிலையில் இருக்கும் கடை ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இறையருள் புரியட்டும். மற்ற ருக்மணியக்காக்களும் உறக்கத்தில் கனவில் சிரிக்கட்டும், பிறகு நிஜத்திலும்.
 
வாழ்க! வளர்க!
 
பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
05.07.2017
 
Facebook.com/ParamanPage

1 Comment

  1. Gandhimathi. M

    Excellent job for Tamil community

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *