‘சிவகாமியின் சபதம்’ : நாடகம்

ஏழாம் நூற்றாண்டுக்கே போய் இருந்துவிட்டு வந்த திகைப்பு வந்தது எனக்கு நேற்று மாலை.

‘ராஜராஜசோழன்’ எடுத்து முடித்த வெற்றிக்களிப்பில் சிவாஜியை வைத்து உமாபதி எடுக்க விரும்பியதும், தானே தனது சொந்தத் தயாரிப்பில் எடுக்கிறேன் என்று எம்ஜியார் விரும்பி அறிவித்து எடுக்கமுடியாமல் போனதுமான, அமரர் கல்கியின் மூன்று முத்தாய்ப்பான படைப்புகளில் ஒன்றான ‘சிவகாமியின் சபதம்’ புதினத்தை மூன்று மணிநேர இசை நாடகமாக அரங்கேற்றி அசத்தினார்கள் மதுரை முரளி குழுவினர் சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில்.

பெரும் புதினம் நாடக வடிவம் அல்லது திரை வடிவம் பெறும்போது கூடவே ஒரு பெரும்சவால் ஒன்றும் எழும். காலகாலமாக வாசித்து வாசித்து வாசகனின் கற்பனையில் இருக்கும் பாத்திரங்களோடும் முக்கிய நிகழ்வுகளோடும் கண் முன்னே காட்டப்படும் நாடக / திரை வடிவம் ஒத்துப் போக வேண்டும். வரலாற்றின் ஆகச்சிறந்த காதல் சந்திப்பு என்று வர்ணிக்கப்படும் ‘வந்தியத்தேவன் – குந்தவை சந்திப்பு’ நாடகவடிவில் ரசிகனுக்கு ஏமாற்றம் தந்தது இப்படித்தான்.  இதே கேள்வியுடன் காமராஜ் அரங்கத்தில் நுழைந்த எனக்கு ‘இது நாடகமல்ல, நடன இசை நாடகம்’ என்று சொல்லப்பட்டது.

ஒப்பனை, நாட்டியம், பின்னணி, பின்னணி இசை, ஒளித்திரை, முக பாவம், உடைகள், இசை, பாடல்கள், ஒளிவீச்சு என எல்லாமும் கலந்து கட்டி அசத்துகிறார்கள்.

காஞ்சி மாகரத்து வீதிகளில் மதம் பிடித்துத் திரிந்த யானையை வேலெறிந்து கொன்ற பரஞ்சோதியை, மாமல்ல புறத்து குளக்கரையில் சிவகாமியோடு மனம் மகிழ்ந்த மாமல்லனை, திருநாவுக்கரசர் பெருமானை, விஷப்பாம்பின் விஷத்தையும் மிஞ்சும் புத்தபிட்சு நாகநந்தியை, கலா ரசிகர் மகேந்திர சக்கரவர்த்தியை, வாதாபிக்குப் போன நரசிம்ம பல்லவனை, ஏகாம்பரேஸ்வரர் கோவிலை என காலயந்திரத்தில் பயணித்து அனைத்தையும் கண்ட மூன்று மணிநேர அனுபவம் அசத்தலானது.

நாக நந்தியடிகள் சூழ்ச்சி செய்து ஏரியை உடைத்து விடுவது, அதில் சிக்கியிருக்கும் சிவகாமியையும் மற்றவர்களையும் மாமல்லர் காப்பது, நாக நந்தியடிகள் புலிகேசியின் வேடம் தரித்து வருவது, காளாமுகர்களிடமிருந்து பரஞ்சோதியை மாமல்லர் காப்பது போன்ற கல்கியின் புதினத்தில் வரும் சில விஷயங்களை கத்தரித்துவிட்டு மூன்று மணி நேரத்தில் தரவேண்டியதை ‘நச்’சென்று அழுத்தமாகத் தந்திருக்கிறார்கள். 

ஸ்ரீனிவாஸ் என்பவர் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார். காஞ்சி மாகரில் தெருக்களில் தொடங்கி, வாதாபியின் வீதிகள், கோட்டைகள் என பயணித்து இறுதியில் ஏகாம்பரநாதர் கோவிலில் ‘நமச்சிவாய வாழ்க’ என சிவகாமி ஆடும் அந்தக் காட்சி வரை மக்கள் கைதட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இசையும், நாட்டியமும், பின்னணியும் அப்படிப் பின்னிப் பிணைந்து உயிர் பெற்று எழுகின்றன நம் முன்னே.

புதினத்தில் மகேந்திர வர்மர் பெரும் நாயகனானத் தெரிவார், நாடக வடிவில் நரசிம்மப் பல்லவன் விஞ்சி நிற்கிறார். புதினம் – நாடகம் இரண்டிலும் நாக நந்தியின் பாத்திரம் மிரட்டவே செய்கிறது.

காஞ்சி அரண்மனையில் மகேந்திரர் – புலிகேசி சந்திப்பிற்குப் பிறகு அரண்மனைக்கு வெளியே போய் கோபம் கொண்டு சூறையாடியதாக நடன மங்கைகளை சிறை பிடித்ததாக சிற்பிகளை கையை வெட்டி ஊனப்படுத்தியதாக கல்கி எழுதியிருப்பார். இதில் மகேந்திரரின் மீதுள்ள மரியாதை குறையாமல் பார்த்துக் கொள்ளப்படும். நாடகவடிவில் இவ்விஷயங்கள் அரண்மனை சந்திப்பிலேயே நடந்ததாக காட்டப்படுகிறது. மகேந்திரர் பாத்திரம் விழுந்து விடுகிறது இவ்விடத்தில்.

உலகம் முழுக்க பல நாட்டு மேடைகளில் அரங்கேற்றி இருபதியைந்தாவது முறையாக வெள்ளிவிழா கொண்டாட்டமாக சென்னையில் அரங்கேற்றினார்கள். ‘இவ்வளவு நாள் பார்க்காமல் விட்டுவிட்டோமே!’ என்று தோன்றியது.

உழைத்திருக்கிறார்கள்! உயிரைகொடுத்து உழைத்திருக்கிறார்கள். இந்த கலைக்குழுவினர் பெரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நாடகம் எல்லா ஊர்களுக்கும் எடுத்துச் செல்லப் படவேண்டும்.

‘சிவகாமியின் சபதம்’ படித்தவர்கள், படிக்காதவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், ஆர்வம் இல்லாதவர்கள், கலை ஆர்வலர்கள் யாராக இருந்தாலும் – நிச்சயம் பாருங்கள். அட்டகாசமான அனுபவம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *