எத்தனை மருத்துவர்கள் வந்தனர் எந்தன் வாழ்வினில்…
எண்ணிக்கை தெரியவில்லையே!
காலில் நகம் பெயர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்ற போது,
காய்ச்சல் நிற்காமல் காய்ந்து சருகாகும் உடலோடு சென்று நின்றபோது,
காலில் ஆணி குத்தி துருவோடும் துடிக்க வைக்கும் வலியோடும் போன போது,
கடைவாய்ப்பல்லுக்கு மேலே புதுப்பல் முளைத்து காது வரை வலித்த போது,
கண்கள் வீங்கி சிவந்து கன்ஞ்சக்டிவைட்டிஸ் வந்து கங்கை மாதிரி வடிந்த போது,
கால் இடறி படியில் தவறி உருண்டு எலும்பு முறிந்து வலித்த போது,
உடலுக்குள் புகுந்த ஒரு கிருமியால் செரிமானம் கெட்டு
வயிறு போக்கு காட்டிய போது,
தசை வலிமைக்கு பயிற்சி செய்து
தசை வலி வந்து துன்புற்ற போது….
சருமத்தில் அழற்சி வந்து
சலிப்பு வந்த போது,
எல்லா நேரங்களிலும்
எனைக் காத்துத் தேற்றினர்
என் மீது படுதலின் வழியே
தங்களின் பரிவின் வழியே
எனை தூக்கி நிறுத்தினர்
நம்பிக்கையூட்டி நலம் மீட்டனர்
மருந்துகள் தந்து எனை
மறு ஆக்கம் செய்தனர்
உடல் நலம் காத்து என்
உயிர் வளர்த்தனர்
சில காசு பெற்றுக் கொண்டு
பல காலம் வாழ வகை செய்தனர்
எத்தனை மருத்துவர் வந்தனர்
எந்தன் வாழ்வினில்,
எண்ணிக்கை தெரியவில்லையே!
வாழ்வை நீட்டிக்கும் மருத்துவர்கள் கூட்டம்
வாழ்வாங்கு வாழட்டும்!
வாழ்க! வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
01.07.2025
#DoctorsDay #doctors #ParamanLifeCoach #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #StayWithPositive #LifeCoach #lifesaving #medicine