ஜிம் கேரி நடித்த ‘மாஸ்க்’ படத்தில், சிறப்பு வாய்ந்த அதீத சக்தி வாய்ந்த அந்த மாஸ்க்கை எவர் அணிந்து கொள்கிறாரோ அவருக்கு சகலவிதமான சக்திகளும் வரும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் வரும் மாஸ்க் போல, மனித வாழ்விலும் சில தனித்துவ இருக்கைகள் உண்டு.
சில இருக்கைகளில் அமரும் போது, அதில் அமர்கிறவர்களுக்கு ஒரு சக்தி வந்து விடுகிறது, சிலருக்கு ஒரு வித அதிகாரம் வந்துவிடுகிறது. சில இருக்கைகளின் அமைப்பு அப்படி.
ஆர்ச்சி பால்ட் எட்வார்ட் நை, கிருஷ்ண குமார சிங் பவசிங், ஸ்ரீபிரகாசா தொடங்கி சுர்ஜிங் சிங் பர்னாலா, கோனியேட்டி ரோசைய்யா, சி வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோகித், இன்றைய ஆர் என் ரவி வரை அந்த ‘இருக்கை’யில் அமர்கிறவர்கள், அமர்த்தப்படுகிறவர்கள் ‘கவர்னர்’ ‘ஆளுஞர்’ ஆகின்றனர். ஆளுஞர் என்பது இருக்கை, அந்த இருக்கையில் அமர்கிறவர் ஆளுஞர். அந்த இருக்கையில் அமர்கிறவர் அதனிடமிருந்து சக்தியும் அதிகாரமும் பெற்றுவிடுகிறார்.
வாழ்க்கையைப் பொறுத்த வரை சில இருக்கைகள் தனித்துவமானவை, சக்தி உள்ளவை, சக்தியை அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு, பிணைத்துக் கொள்கிறவர்களுக்கு பாய்ச்சக் கூடியவை.
குரு என்பது ஒரு தனித்துவமிக்க சிறப்பு மிக்க இருக்கை.
குரு என்பது தனிமனித வழிபாடல்ல, அந்த இருக்கையில் இருந்தவர்களுக்கு இருப்போருக்கு என மொத்த குரு மரபிற்கும் செய்யப்படும் மரியாதை.
மதுரை பாண்டியனுக்கு யவணக் குதிரைகள் வாங்க கோடியக்கரைக்குப் போன அமைச்சரை தடுத்தாட்கொண்டு மாணிக்கவாசகராக மாற்றம் தர விரும்பிய இறைவன் குருமணி் ஆகி வந்து அருள் செய்தது திருப்பெருந்துறை குருந்த மரத்தடியின் அந்த இருக்கையிலிருந்தே. இறைவனே குருமணியாக வந்த போதும் இருக்கையில் அமர்ந்தே அருள் செய்தான்.
அதே இறைவன் சீடனாகி பாடம் கேட்க விழைந்த போது, தன் பிள்ளை சுப்பையனே குருவாக வந்த போதும், வாய் பொத்தி செவி தந்து குரு இருக்கை தந்து பணிந்தமர்ந்தான்.
சனகாதி முனிவர்களுக்கு போதித்து ஞானம் அளிக்க விரும்பி குருமணியாக வந்த இறைவன் ஆல் அமர் செல்வனாக (தட்சிணாமூர்த்தி) கல்லால மரத்தினடியில் ஓர் இருக்கையில் அமர்ந்தே போதித்தான்.
நம் பண்டைய மரபில் உயர்வாகவும் மதிக்கப்படுவதாகவும் இருக்கும் நிலையை பீடம் என்று விளிப்பது வழக்கமாக இருந்துள்ளது. பீடம் என்பது சற்று உயர்ந்த மேடை என்று வெறுமனே பொருள் கொள்வதை மறுக்கிறேன் நான். ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்ந்த மாவீரர் நாள் அன்று தம்பி பிரபாகரன் மட்டுமே ஏறிய ஏறக்கூடிய அந்த மேடை வெறும் கல்லால் கட்டிய மேடையல்ல, அது ஒரு பீடம்.
குரு என்பது ஒரு பீடம், ஓர் இருக்கை, ஒரு மரபு.
குரு பீடத்தை நோக்கி, அவ்விருக்கையை நோக்கி, அந்த மரபை நோக்கி பணிந்து மரியாதை செய்யும் போது, அந்த மரபை நோக்கி நம்மை பிணைத்துக் கொள்ளும் போது, பீடத்தின் நல் அதிர்வுகளையும் மொத்த குரு மரபின் நல் ஆசிகளையும் பெறுகிறோம்.
குரு மரபின் நல் அதிர்வுகளை உள்வாங்கி அக இருள் நீக்கி ஏற்றமும் இன்பம் பெறுகிறோம்.
திருமூலர், வள்ளலார், புத்தர், ஆல் அமர் செல்வர், ராமானுஜர், ராமகிருஷ்ணர் என மானுடம் உய்விக்க மண்ணில் வந்த குரு மரபினருக்கு… அவர்களது பீடம் நோக்கி, இருக்கை நோக்கி. பணிகிறோம்!
இறைவனுக்கு சரணம்!
குருமரபினற்கு வணக்கம்!
குரு வாழ்க! குரு வாழ்க!
இன்று குரு பூர்ணிமா தினம்.
– பரமன் பச்சைமுத்து
10.07.2025
சென்னை
#GuruPurnima #GuruPoornima #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #malarchi #மலர்ச்சி #குரு #gurupurima #Guru #Guruji #spiritualawakening #spirituality