‘தீரன் அதிகாரம் -்ஒன்று’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக அறிவித்து ஊரைவிட்டே ஒதுக்கி வைக்க, பொது மக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கக் காடுகளில் ஒளிந்து வேட்டையாடி வாழ்ந்த அம்மக்கள், ஒரு நாள் ஊருக்குள் திரும்ப வந்து மக்களை வேட்டையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஹவேரியாக்கள் என்றழைக்கப்படும் இவர்கள் மகாராஸ்டிரம், உத்தரபிரதேசம், ஆரவல்லி மலைத்தொடர்கள், ஆந்திரம், கர்நாடகம், கும்பகோணம் என இப்போது பரவிக் கிடக்கின்றனர். அவர்களில் சிலர் நெடுஞ்சாலையை ஒட்டிய வீடுகளில் புகுந்து இருப்பவர்களைக் கொடூரமாகத் தாக்கி கொள்ளையடிக்கின்றனர் என்ற 2005ன் உண்மை நிகழ்வுகளைக் களமாக வைத்துக் கொண்டு காவல்துறையினர் படும் இன்னல்களை கோர்த்துக் காட்டும் படம் – தீரன் அதிகாரம் ஒன்று.

காதல் காட்சிகள் தவிர்த்து மற்ற எல்லாவற்றிலும் கார்த்தி தன்னைத் தந்திருக்கிறார். ‘அறம்’ போல உண்மைக்கு நெருக்கமான படங்கள் உருவாகி வரும் வேளையில், நாயகிகளை அழகானவர்களாக ஆனால் மூளை மழுங்கியவர்களாகக் காட்டும் போக்கை தமிழ் சினிமா தவிர்க்க வேண்டும்.

முன்பாதியின் காதல் காட்சிகள் இழுக்கின்றன. சிறிது நேரமே ஃப்ளாஷ்பேக்கில் வரும் ரகுல்பிரீத் காதல் காட்சிகள் இனிக்கின்றன.

ஆக்‌ஷன் காட்சிகளை அழகாகச் செய்திருக்கிறார்கள்.

ஃபைலைக் கூட பார்க்க விடாத மனைவி, ஊர் ஊராய் மாற்றியடிக்கும் அரசு, வேலை செய்யவிடாமல் வெறுப்பேற்றும் சகதிகாரி, கைகூடும் நேரத்தில் மூடிவிடச் சொல்லும் மேலதிகாரி, ஒத்துழைக்க மறுக்கும் அண்டை மாநில காவல்துறை, ஒரு வழியாகத் தேடிப் போனால் ஊர் மக்கள் எதிர்ப்பால் தோல்வி என ஒரு முறை கூட வெற்றியே பெறாமல் தொடர்ந்து அல்லாடும், கைகாசை செலவழித்து காரியம் புரியும், கடைசியில் தன் நாற்காலியை மாற்றிக் கொள்ளக் கூட முடியாமல் நிற்கும் சராசரி காவல்துறை ஊழியரை கார்த்தியின் வழியே தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குஞர். நிறைய உழைத்திருக்கிறார்.

கார்த்திக்கு இது சொல்லிக் கொள்ளும் படம்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘தீரன் அதிகாரம் ஒன்று: காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் இன்னொன்று;
ரொம்பப் பெரியப் படம் போலொரு உணர்வைத் தருகிறது என்றாலும் பார்க்கலாம்.

திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *