‘வாழ்க்கைப் பாசறையில்’ – பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல்

Vazhgai_finel2.jpg

முன்னுரை

‘தேர்ட்டி சிக்ஸ்த் சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எழுபதுகளின் இறுதியில் வந்து உலகைக் கவர்ந்த ஓர் அட்டகாசமான திரைப்படம் அது.

ஓர் ஊரில் அதிகாரத்தில் உள்ளவர்களால் சொந்த மக்கள் அடித்துக் கொல்லப்படும்போது, காயங்களுடனும் தாங்கொணா வலியுடனும் உயிரைக் காத்துக்கொள்ள ஊரை விட்டு ஓடுவான் சிறுவனொருவன். பலம் மிக்க எதிரிகளிடமிருந்து தப்பிக்க காடு மலை பள்ளத்தாக்கு என்று ஓடி தூர தேசமொன்றில் குங்ஃபூ சொல்லித்தரும் புத்தப்பள்ளியில் சரணடைவான் அவன். ரத்தக்காயங்களுடன் பலவீனமாகக் கிடக்கும் அவனை ஒரு மாதம் சிகிச்சையளித்து தேற வைப்பார்கள் அங்கிருக்கும் புத்த குருமார்கள். சிகிச்சை முடிந்ததும் வெளியேறச் சொல்வார்கள் அவனை. குங்ஃபூவின் பல நிலைகள் அங்கே பயிற்றுவிக்கப்படுவதைக் கண்டு ‘இங்கேயே இருக்கிறேனே நானும்!’ என்று கெஞ்சுவான். ‘வெளியாட்கள் இங்கிருக்க முடியாது, ஓடிப்போ!’ என்று முதலில் சொல்லும் தலைமை குரு, ‘சரி, முயற்சி செய்து பார்க்கலாம். சோதனைகள் தருவோம், சோதனைகளில் நீ வென்றுவிட்டால் அந்த சேம்பரில் கற்கலாம்’ என்று சம்மதிப்பார்.

அதற்கப்புறம் ஒவ்வொரு சேம்பரிலும் அவன் எதிர்கொள்ளும் குங்ஃபூ சோதனைகள் பெரும் சவால்கள் நிறைந்தவை. தூரத்திலிருக்கும் மேளத்தை நீண்ட குச்சி கொண்டு ஒரே தாள கதியில் தொடர்ந்து அடிக்க வேண்டும், கை கொஞ்சம் அசந்தால் அருகிலிருக்கும் ஊதுவத்தியின் நெருப்பு கையைச் சுட்டு ரணமாக்கி விடும். விடிகாலை தொடங்கி இரவு வரை ஒரே தாள கதியில் அசராமல் மேளத்தைக் கொட்ட வேண்டும் என்பது போன்ற கடுஞ்சோதனைகளைக் கடந்து ஒவ்வொரு சேம்பராக முடித்து குங்ஃபூ கலையின் உச்சகட்ட சேம்பரான முப்பத்தியைந்தாவது சேம்பருக்கு வருவான். குங்ஃபூவின் எல்லா நிலைகளையும் கைவரப் பெற்றதும் சொந்த ஊருக்குப் பயணிப்பான்.

அதே பலம் மிகு பழைய எதிரிகள் வருவார்கள். வாளும் வேலும் உயிரையே பறித்துவிடக்கூடிய குங்ஃபூ நுட்பங்களும் கைக்கொண்டு அவனை எதிரிகள் சூழ்ந்துகொள்ளும் போது, ஒரு அதிசயம் நிகழும் அவனுக்குள்ளே. அந்த ஆபத்தான சண்டை நிலைகளில் அவனுக்கு புத்தபள்ளியில் சோதனைகளைக் கடக்க அவன் செய்த பயிற்சிகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரும். அதே முறைகளைக் கையாண்டு எதிரிகளை தவிடுபொடியாக்கி முன்னேறுவான். தன்னையும் காத்துக்கொண்டு அந்த ஊரையும் கெட்டவர்களின் பிடியிலிருந்து காத்து சுதந்திரம் பெறச்செய்வான்.

இந்த வயதில் அந்தத் திரைப்படத்தை நினைவுகூர்கையில் அது வேறு மாதிரி புரிகிறது இன்றெனக்கு. புத்த பள்ளியின் உள்ளே இருந்தபோது ஒவ்வொரு சேம்பரிலும் கடும் சோதனைகளை எதிர்கொண்ட போது, வலி மிகு அந்தத் தருணங்களில் இது நாளைக்கு நமக்கு எங்கேயோ உதவப் போகிறது என்று தெரிந்திருக்காது அவனுக்கு. அப்போதைய கவனம் அந்த சோதனையைத் தாங்கிக் கடந்து அடுத்த சேம்பருக்கு நகர்வது. ஆனால், உண்மையில் அவனது பின்னாளைய வாழ்விற்காக கடும் பயிற்சிகள் தந்து உருவாக்கம் செய்தன அந்த சேம்பர்கள். அவன் நாளை செல்லப் போகும் இடத்திற்கு அவனை தயார் செய்தன அந்த சேம்பர்கள்.

உண்மையில் நம் வாழ்க்கையும், ‘தேர்ட்டி சிக்ஸ்த் சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன்’ திரைப்படத்தின் புத்த பள்ளிகளின் சேம்பர்களைப் போன்றதுதானே! பல மனிதர்களை நிகழ்வுகளை கொண்டு வந்து சேர்த்து ஒரு பாசறையை ஏற்படுத்தி அதில் நம்மை புகுந்து கடந்து போகச் செய்கிறது வாழ்க்கை. ஒவ்வொரு முறை பாசறையைக் கடந்து போகும் போதும் அப்போதைய நம் கவனம் அந்த நிகழ்வுகளைக் கடந்து வெளியேறி அடுத்த நிலைக்கு நகர்ந்து விட வேண்டும் என்பதிலேயே இருக்கிறது. ஆனால், வாழ்வின் பாசறையில் அளிக்கப்படும் அந்த சங்கதிகள் படிப்பினைகள் பயிற்சிகள் நாளைய வாழ்விற்கான உருவாக்கம் என்பது தெரியாமல் போய் விடுகிறது.

சிதம்பரம் யதார்த்தம் பொன்னுசாமியின் நாடகக்குழுவில் இருந்த அந்த நாட்கள் அந்தச் சிறுவனுக்கு சவாலான நாட்களாக இருந்திருக்கலாம். அந்நேரங்களில் ‘பெண் வேடமிடுவதிலிருந்து உயர்ந்து ராஜபார்ட் நிலைக்கு உயரவேண்டும்’ என்பது அவனது கவனமாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த நாடக நாட்கள் வாழ்க்கைப் பாசறையில் அவனை நாளைய வாழ்வில் ‘நடிகர் திலகம்’ என்னும் மகா நடிகனாக உருவாக்கம் செய்த நாட்கள்.

கோரக்பூர் ரயில்வே நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்த அந்தக் காலங்கள், ஒவ்வொரு ரயில் மேடைகளுக்கிடையேயும் மூச்சிரைக்க ஓடிய அந்த வேளைகள், அந்த இளைஞனுக்கு கடும் சோதனைகளாக இருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கைப் பாசறையில் அவனது நாளைக்கான உருவாக்கம் அது. அதனால்தான் தோல்விகளில் துவளாமல், வெற்றிகளில் துள்ளாமல், ஐபிஎல் 2018 கோப்பையை வென்று உலகமே கொண்டாடும் அந்தத் தருணங்களில்கூட கோப்பையை அணியிடம் தந்துவிட்டு அந்தப்பக்கம் போய் குழந்தையைக் கொஞ்ச முடிகிறது அந்த சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனால்.

உங்களது கடந்த கால சோதனைகள், என் வாழ்வில் நான் எதிர் கொண்ட நிகழ்வுகள் அனுபவங்கள் என எல்லாமே வாழ்க்கைப் பாசறையில் நாளைக்கான உருவாக்க பயிற்சிகள், படிப்பினைகள்.

வாழ்க்கை பல்வேறு நிகழ்வுகளை மனிதர்களைக் கூட்டி ஒரு பாசறையை ஏற்படுத்தி நம்மை அதில் தள்ளி விட்டு விடுகிறது. கிடைக்கப்பெறும் படிப்பினைகளால் அனுபவங்களால் நமது நாளைய வாழ்விற்கான உருவாக்கம் நிகழப்பெறுகிறது. வாழ்க்கையின் இந்தப் பாசறை எப்போது தொடங்குகிறது, எப்போது முடிகிறது என்பது புரிவதில்லை அல்லது எப்போதும் விரிவடைந்து கொண்டே போகும் ஒரு பாசறையில் அந்தத் திரைப்படத்து நாயகனைப் போல ஒவ்வொரு சேம்பராக நகர்ந்து கொண்டே போகிறோம் நாம் என்றும் தோன்றுகிறது.

வாழ்க்கைப் பாசறையில், நான் கண்ட மனிதர்கள், நிகழ்வுகள், அனுபவங்களில் கொண்ட படிப்பினைகள் சில ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் தலையங்கங்களாக எழுத்துரு பெற்றன. அவற்றில் சில தொகுக்கப்பட்டு ஒரு நூலாக, இதோ – ‘வாழ்க்கைப் பாசறையில்’

நீங்கள் தற்போது காணும் அனுபவிக்கும் எல்லா நிகழ்வுகளும், இந்த நூல் உட்பட, வாழ்க்கைப் பாசறையில் நாளைய உருவாக்கத்திற்காக.

வாழ்க்கையின் பெரும் பாசறையில் ஓரிடத்தில் இருக்கும் நீங்களும், ஓரிடத்தில் இருக்கும் நானும், சில கணங்கள் இணைப்பில் வந்தமைக்கு பெரும் மகிழ்ச்சி!

வாழ்க! வளர்க!

வாழ்க்கைப் பாசறையில்,

பரமன் பச்சைமுத்து
29.05.2018

Facebook.com/ParamanPage

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *