நாடுகளிலுள்ளோரின் நாக்குகளின் வழியே நடக்கட்டும் தமிழ்…

ஒரு மொழி, எத்தனை வளமுள்ள மொழியானாலும் அது வழக்கிலிருந்து ஒழிந்து போனால் சாவை நோக்கிச் சரிந்து விடும். செம்மொழியானாலும் எம்மொழியானாலும் பேசா மொழியானால் அவை வாழா மொழியாகி வீழும்.

இலக்கியங்களும், காப்பியங்களும், நூல்களும், கல்வெட்டுக்களும் மொழியின் செழுமையை மொழியின் பழமையை காலம் தாண்டிக் காட்ட உதவும். மொழியினுள்ளே மாந்தரை ஈர்க்க உதவும், நனைந்து திளைத்து மகிழச் செய்ய உதவும். இலக்கியங்கள் பண்பாட்டை வளர்க்கும் எத்தனையோ நல்லதைச் செய்யுமென்றாலும்,
ஒரு மொழி உயிர் வாழ்வது உயிரோடு இயங்கும் மனிதர்களின் நாக்குகளின் வழியே பயணிக்கும் போதுதான். புதிய மனிதர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் அது கடத்தப்படும் போது அம்மொழியின் ஆயுள் கொஞ்சம் நீள்கிறது.

ஒவ்வொரு முறை ஓர் இனம் அழியும் போதும், அவ்வினத்தின் மொழி் பயணப்பட உயிர் மனித நாக்குகள் இன்றி் உயிர் இழக்கிறது. எப்போது ஒரு மொழி அதன் சொந்த இன மக்களின் நாக்குகளின் வழியே புழங்கப்பட வில்லையோ, அப்போதே அந்த மொழிக்கு புற்றுநோய்க் கட்டிகள் முளை விடத்தொடங்குகின்றன. எப்போது ஒரு மொழி தன் சொந்த இன மனித நாக்குகளைத் தாண்டி வேற்று மனிதர்களின் நாவிற்குக் கடத்தப் படுகிறதோ, அப்போது அம்மொழியின் காய்கள் வெடித்து விதைகள் காற்றில் பரவி காடு முழுவதிலும் தூவப்படுகிறது. ஆங்கிலம் எழுந்து நிற்பதற்குக் காரணம் அதன் வளமையல்ல, அது அதிக நாக்குகளின் வழியே பயணிப்பதால். அதன் விதைகள் தனது இனத்தைத் தாண்டி எல்லா இனத்தின் நாக்குகளிலும் தூவப்படுவதால்.

மதத்தைப் பரப்பிட வந்தவர்கள் முதலில் கண்டறிந்தது, மதம் ஓத முதன்மை வழி மனித நாக்கின் வழியே பயணிக்கும் மொழி வழியே என்பதைத்தான். நாக்கின் மொழி வழிக்கு மாறி அதில் மதத்தைக் கடத்தி மாற்றினார்கள்.

இங்கு இருந்த மக்களின் நாவின் மொழிக்குள்ளே புகுந்து வந்ததனாலேயே, அங்கு இருந்த வால்மீகியின் ராமனும் இலக்குவனும் இன்னும் நிற்கிறார்கள் இங்கே. எங்கோ இருந்த ஏசுபிரான் எல்லா மொழிகளிலும் புகுந்து நாவின் வழியே பயணித்ததாலேயே கிட்டத் தட்ட எல்லா நிலங்களிலும் இருக்கிறார் இன்று.

இந்திப் பிரச்சார சபாவின் வழியே இந்தி மொழி பிற மனிதர்களின் நாக்குகளில் நடந்தது. வேற்று மனிதர்களின் இடத்திலும் பரவிப் போய் சேர்ந்தது.

ஒரு மொழியின் இனமே அம்மொழியை தங்களின் நாக்குகளில் படர விடாமல் துறப்பது அம்மொழிக்கு நேரும் கொடுமை. இன மக்கள் தங்கள் நாக்குகளின் வழியே தங்கள் மொழியை உயிர்ப்போடு வைத்திருப்பது அம்மொழிக்குச் செய்யப்படும் நன்மை. வேற்று மக்களின் நாவில் ஒரு மொழி பரவும் போது அம்மொழி பெறும் பெரும்கேண்மை.

அகநானூறும், புறநானூறும், வள்ளுவமும், தேவாரமும், திருவாசகமும், சிலப்பதிகாரமும் இன்னும் வளமான பல நூல்களைக் கொண்டிருந்தாலும், தன் இனத்தின் நாக்குகளின் வழியே பயணிக்கும் போதே தமிழ் தடுமாறாமல் உயிர்த்து நிற்க முடியும். தன் இனத்தையும் தாண்டி பிற மனிதர்களின் நாவில் பயணிக்கும் போது தமிழ் வலிவு பெறும், அதன் ஆயுள் நீட்சி பெறும்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஜூலையில் தொடங்க இருக்கும் ‘தமிழ் வளர் மையம்’ மற்ற நாக்குகளின் வழியே தமிழைப் பயணப்பட வைக்கட்டும். உலகம் முழுக்க நூறு கிளைகளின் மூலம், முதல் நிலையில் படங்கள் மூலம், இரண்டாம் நிலையில் எழுத்துக்கள் சொற்கள் என்று ஒன்பது நிலைகளில் தமிழைக் கற்பிக்க இருக்கிறார்களாம் உலக மக்களுக்கு. அட்டகாசமான முயற்சி!

எவர் வரினும் போயினும் அரசியல் கடந்து அரசுகள் ஆதரவு தரட்டும் தமிழ் தரணியெங்கும் பரவிட. இதைச் செய்தவர்கள் வாழ்க! நானிலம் போற்ற தமிழ் நாடுகளிலுள்ளோரின் நாக்குகளில் நடக்கட்டும்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
28.06.2018
சென்னை

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *