திரை விமர்சனம் – ‘கடைக்குட்டி சிங்கம்’ : பரமன் பச்சைமுத்து

images-12.jpeg

காலம்காலமாய் பார்த்துப் பழகிய அதே குடும்பத்தோடு பாசத்தில் நெகிழும் ஊர்க்கார நாயகன், அவன் வழியில் குறுக்கிடும் காதலும் வில்லனும் என்ற வகை கதைதான். ஆனால் அதை ரசிக்கும் படி கொடுத்த விதத்தில் வெற்றி பெற்று விட்டார்கள்.

வயலும் வரப்பும் காடும் கழனியும் கூடவே பஞ்சவன் மாதேவி, வானவன் மாதேவி, கண்ணுக்கினியாள், தாமரை மணாள செண்டாளன் போன்ற பெயர்களாலும் சோழ தேசத்தை கண்ணில் நிறுத்துகிறார்கள் (பொள்ளாச்சி, பழனி, புதுக்கோட்டை பகுதிகளில் படமெடுத்திருந்தாலும் கூட)

சத்யராஜ், பானுப்பிரியா, மௌனிகா, யுவராணி, பொன்வண்ணன், ஸ்ரீமன், இளவரசு, மாரிமுத்து, சரவணன், விஜி சந்தரசேகர், சூரி என ஒரு பெரும் பட்டாளத்தை வைத்து கதம்பம் பின்னியிருக்கிறார்கள். நாயகி சாயிஷா அழகுதான், ஆனாலும் முறைப் பெண் ப்ரியா பவானி சங்கரே நடிப்பில் அதிகம் ஈர்க்கிறார்.

இயற்கை விவசாயம், ‘விவசாயி’ என்ற பெயர் அச்சிடல், பேருந்தில் காய்கறி மூட்டை ஏற்றுதல் (அட, தமிழக அரசே இதைத்தான் செய்கிறது லாரி வேலை நிறுத்தத்தில் இப்போது!), நம்மாழ்வார் சிந்தனைகள், பெரிய ஆட்களென்றால் சென்னையில்தான் இருக்க வேண்டும் என்றில்லை போன்ற கருத்துக்களை அடர்த்தியாக தெளித்து வைத்திருக்கிறார்கள். (சண்டையில் கூட தென்னங்குறும்பிகள் குலையால்தான் அடிப்பார் என்பது வரை)

ஆணவக்கொலைக் குற்றத்திற்கு இவ்வளவு விரைவில் தீர்ப்பு வருவதும், இப்படியொரு தீர்ப்பு வருவதும் சினிமாவில் மட்டுமே நடக்கும்.

இறுதிக் காட்சிக்கு முந்தைய கொஞ்ச நேரம் வரும் காட்சிகள் தொலைக்காட்சி தொடர்களைப் போல இருக்கின்றன என்ற விமர்சனங்கள் வந்தாலும் அவை ஓர் ஆழத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.

கார்த்தி மிக அழகாக பொருந்தியிருக்கிறார். வேகம், கோபம், பாசப் பொங்கல், காதல் என அழகாக படம் முழுக்க நிறைந்திருக்கிறார்.

வசனங்கள் ஈர்க்கின்றன, கூடவே சூரியும்.

நகைச்சுவை, பாசம், குடும்பம், வீரம், காதல், தியாகம் என எல்லாம் கலந்திருக்கும் பழைய பாணிக் கதையில் புதுத்திரைக்கதை அமைத்து திரும்ப விடாமல் செய்து அசத்தியிருக்கிறார் பாண்டிராஜ்.

வீ – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘கடைக்குட்டி சிங்கம்’ : சோடை போகாமல் கர்ஜிக்கிறது. பார்க்கலாம்.

– திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *