பல்லாயிரக்கணக்கானோரின் பயணங்கள் தொடரும்…

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் அதிகம் பைக்கில் பயணித்தவர்கள் என்று கணக்கெடுத்தால் என் பெயர் முதல் பட்டியலில் வரக்கூடும். டிசம்பர் மாத நள்ளிரவில் பதினாறு டிகிரி வந்த 2001ன் பெங்களூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மலை கடந்து சாலையோரம் உடல் நடுங்க விறைத்து தேநீர் குடித்துத் தொடர்ந்திருக்கிறேன் நண்பன் செந்திலோடு. லாரிகள் வரிசையாக நிற்கும் சாலையோர தேநீர்க் கடையொன்றில் உடல் நடுங்க உறிஞ்சும் எங்களைப் பார்த்து ஒரு லாரி டிரைவர், ‘தம்பீ…நாங்க சொல்லக்கூடாது. நைட்ல பைக்ல வராதீங்க. எதிர் லைட்ல தெரியாது, தட்டிடுவோம்!’ என்று சொன்னதிலிருந்து உடன் பயணிப்பதை நிறுத்திக் கொண்டான் செந்தில். அப்புறம் நானும் ஐந்து கியர் கொண்ட மாருதி – 800க்கு மாறி விட்டேன்.

கிருஷ்ணகிரிக்கும் ஓசூருக்கும் இடையே ஒரு மலைப்பாதை இருக்கும். சில கிலோ மீட்டருக்கு ஏற்றமும், பிறகு ஓசூரை நோக்கி நல்ல இறக்கமும் கொண்ட இருபக்கமும் மலைகள் கொண்ட குறுகலான தார்ச்சாலை. பேருந்தில் பயணிப்பவர்களால் சன்னல் இருக்கையிலிருந்து கொஞ்சம் முயன்றால் தொட்டு விடும் தூரத்தில் மலையின் பாறைகள் இருக்கும். லோடு ஏற்றிக்கொண்டு லாரி எதுவும் சென்றால், முக்கி முக்கி நகரும் அதன் பின்னே பயணிப்பதற்குள் சோர்வு வந்துவிடும். ஏதேனும் லாரிகள் நடு வழியில் நின்று விட்டால், தீர்ந்தது கதை. பெங்களூர் போய் சேர இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் கூடுதலாகத் தேவைப்படும். கிருஷ்ணகிரி – ஓசூர் போக்குவரத்துப் பிரச்சினைக்காகவே சித்தூர் வழித்தடத்தில் பயணிப்போம் பல முறை.

நான் மாருதி -800லிருந்து கர்நாடக பதிவெண் கொண்ட மாருதி எஸ்டீமுக்கு மாறிய சமயம், அதே சாலையில் பணித்த ஒரு நள்ளிரவில், வெளிச்சம் வெள்ளமென பாய விளக்குகள் எரிய பேரிறைச்சல் எழுப்பும் இயந்திரங்களோடு வேலை செய்து கொண்டிருந்தனர் பலர். அந்த மலையைக் குடைந்து கொண்டிருந்தார்கள்.

அடுத்த முறை வந்த போது சாலையோரமிருந்த அந்த மலையை முழுதும் காணோம். குடைந்தும் வெட்டியும் அகற்றி விட்டார்கள். சாலையின் மேலாக பச்சை வண்ணத்தில் பெரிய பலகை இருந்தது. ‘பாரதப் பிரதமர் வாஜ்பாயி – தங்க நாற்கரச் சாலை’ என்று தமிழுலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. அடுத்த சில மாதங்களில் நடந்தது அட்டகாசம். நான்கு வழிச் சாலை வேய்ந்தார்கள்.

சென்னையிலிருந்து தண்டலம் கடக்குமிடம் சாலை கிட்டத்தட்ட குயவன் குழைத்த சேறாய் வழுக்கும் மழைக்காலங்களில். அந்த இடத்தையும் ஆழத்தோண்டி சாலை வேய்ந்தார்கள். தகத்தகவென பயணிக்க தங்க நாற்கரச் சாலை வந்தது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் இணைக்கப்பட்டதாம்.

அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலின் போது, தேர்தல் விதிகளின் பொருட்டு இந்த பெயர்கள் உருவங்கள் பொறித்த பதாகைகள் இருக்கக் கூடாதென்று ‘வாஜ்பாய் தங்க நாற்கரச் சாலை திட்டம்’ என்ற பலகைகளை வெள்ளைத் துணியால் மூடினார்கள் நெடுஞ்சாலை முழுவதிலும். அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தில் பலகைகள் நீக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி – ஓசூர் இடையே அந்த மலையும் இல்லை, குறுகலான பாதையுமில்லை, அந்தப் பலகையுமில்லை இப்போது. பிஎம்டபிள்யூக்களும் பென்ஸ்களும் வழுக்கிச் செல்லும் அந்த சாலையில் செல்லும் போதெல்லாம், குறிப்பாய் அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் வாஜ்பாயின் நினைவு வரவே செய்கிறது.

மலர்ச்சி மாணவி ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். வாஜ்பாய் உயிர் நீத்தார் என்று செய்தி வருகிறது.

வாஜ்பாயி வானுலகை நோக்கிப் பயணித்து விட்டார். அவரது தங்க நாற்கரச் சாலையின் வழியே பல்லாயிரக்கணக்கானோரின் பயணங்கள் தொடரும்.

– பரமன் பச்சைமுத்து
நெய்வேலி
16.08.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *