நிறைவுற்றது – ‘அச்சம் தவிர்…ஆளுமை கொள்!’ தொடர்

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒன்பது மாதங்கள் (முப்பத்தியைந்து வாரங்கள்) பறந்தோடி விட்டன.

வாராவாரம் படித்ததை செயல்படுத்தி, ஓடிவந்து மின்னஞ்சல் மூலமும், ஈரோடு – திருச்சி – திருவண்ணாமலை – வேலூர் பகுதிகளில் நிகழ்ச்சிக்குச் சென்ற சில இடங்களில் அடையாளம் கண்டு அருகில் வந்து செய்த பகிர்வுகளின் மூலமும், வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி.

‘சார்… நான் தஞ்சாவூர் சார். வாராவாரம் தினமலர்ல உங்க அச்சம் தவிர் தொடர் படிப்பேன். திருச்சியில நீங்க பேசறீங்கன்னு விளம்பரம் பார்த்த உடனே கிளம்பி இங்க வந்துட்டேன் சார்’ என்ற வகையில் அடையாளம் கண்டு பகிர்வு செய்து இன்ப அதிர்ச்சி தந்த வாசகரை,
ஈரோட்டில் மலர்ச்சி மாணவரின் திருமண விழாவிற்குச் சென்ற இடத்தில் ‘நான் வாராவாரம் அதுக்காகவே காத்திருப்பேன்!’ என்று சொல்லி அதிர வைத்த ஒரு மூதாட்டியை, ‘உங்கள் கட்டுரையை அப்படியே படித்து என் மாணவர்களுக்கு பாடமாக எடுத்து விளக்குகிறேன்’ என்று மின்னஞ்சல் செய்த வேலூர் பள்ளி ஆசிரியையை, நிறைய கேள்விகள் அனுப்பி என்னைப் பதிலெழுத வைத்த நாகை – கொள்ளிடம் – தஞ்சை வாசகர்கள் சிலரை, இப்படி இன்னும் பல பேரை மறக்கவே முடியாது.
(ஈரோடு பதிவில் நமது தொடர் வருகிறது என்பதே அந்தப் பாட்டி சொல்லித்தான் தெரிய வந்தது நமக்கு)

எத்தனையோ மனித மனங்களுக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தந்து வளர்ச்சி கிட்டிட நம்மால் முடிந்ததை செய்திருக்கிறோம் என்ற நல்லுணர்வு எனக்கு.

கற்றதை எழுதிப் பகிர்ந்திட தளம் தந்து,
இத்தனை லட்சம் வாசகர்களை சென்றடைய உதவிய தினமலரை பெரும் நன்றியோடு நோக்குகிறேன்.

ஞாயிறு தோறும் வரும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடர் இன்று நிறைவு பெறுகிறது.
சிறிய இடைவேளைக்குப் பின்பு வேறோர் தலைப்பில் சந்திப்போம். வாழ்க்கை அதற்கு வழி செய்யட்டும்.

உங்கள் வாழ்வில் வளர்ச்சியும் மலர்ச்சியும் வரட்டும்! பிரார்த்தனைகள்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
09.09.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *