‘பரியேறும் பெருமாள்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

pariyerum-perumal-tamil-mal-20180913111705-14476447102633552130547.jpg

என்ன படிக்க வேண்டும் ஏன் படிக்க வேண்டும் என்று தெரியாத, ஒரு விழாவிற்குப் போவதற்குக் கூட அடுத்தவரிடம் போய்தான் நல்ல சட்டை கடனாக வாங்கி உடுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள, ஒதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒரு சமூகத்திலிருந்து ஒரு பிள்ளை படித்துத் தலையெடுக்க நிமிர்ந்தால்… அவனை எழவே விடாமல் குலைத்துக் கலைத்துப் போட விரும்பும் சாதீய கட்டமைப்பில் ஊறிப்போய் வெறி கொண்டு நிற்கும் சமூகம் ஒரு பக்கம். இவற்றை எதிர்கொள்வதற்குள் ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை களமாகப் பின்னி படமாக்கப்பட்டது – ‘பரியேறும் பெருமாள்’

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது, ‘காதல் மணம் புரிந்த பெண்ணின் இளம் கணவனை சாதீய சக்திகள் அடித்துக் கொன்றன’ என்று தெலுங்கானாவிலிருந்து செய்திகள் வருகின்றன. ‘பரியேறும் பெருமாள்’ சொல்வதும் அதையே.

‘நல்ல பையனாச்சே!’ என்று பேருந்துல் பக்கத்தில் அமர்ந்து பேசும் மனிதர், அவன் இருப்பிடத்தை அறிந்ததும், ‘புளியங்குளமா?’ என்று எழுந்து நகர்ந்து போகும் அந்தக் காட்சி ஊர்ப்புறங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாம்(ன்) கண்டு வரும் நிகழ்வுகளுக்குச் சான்று.

‘முன்னூத்தி தொன்னூறு மார்க்கா? ஆனா இங்கிலீஷ் வராதா!’ என்ற அந்த காட்சி என்னுடன் ஏழாம் வகுப்புப் படித்த தமிழில் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மேலக்குறியாமங்கலம் பாலகிருஷ்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. ஆங்கிலம் வராமல் அவதியுற்று ஆசிரியரால் அவமானப்படுத்தப்படும் பரியனை பார்க்கையில் சாத்தப்பாடி உதயகுமார் மற்றும் வண்டுராயன்பட்டு மாணவர்கள் மனதிலாடினார்கள்.

அங்கே பிறந்து விட்டான் என்பதற்காக அவன் இழிந்தவன் என்பதைத் தாண்டி அவன் வளர்க்கும் நாயும் இழிந்தது என்று நாய்க்கு செய்யும் அந்த செயல் பார்க்கும் நம் முகத்தில் அறைந்து தொந்தரவு செய்கிறது.

பெருநகரத்தில் தீண்டாமைக் கொடுமைகளில்லை என்பதைத் தாண்டி, டாஸ்மாக் கடையில் தீண்டாமையே இல்லை சமத்துவமே தாண்டவமாடுகிறது என்று அறைந்து சொல்கிறது பரியனுக்கு பூனூல் அணிந்த ஒரு பிராமணர் ஊற்றிக் கொடுக்கையில். படம் முழுக்க கவனித்துப் பார்த்தால் பிராமணர்கள் தீண்டாமையை விட்டு நகர்ந்து அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். சாதீயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கொலைகளை புரிவது மற்ற சில சமூகங்களே என்று சொல்வது போலவும் இருக்கிறது.

பரியனாக கதிர், ஜோவாக கயல் ஆனந்தி, வேற்று சாதி நண்பனாக யோகி பாபு என எல்லோரும் அழகாகச் செய்திருக்கிறார்கள். அதிலும் ஜோவின் அண்ணனாக வந்து கலவரம் செய்பவர் கச்சிதப் பொருத்தம்.

எல்லோரும் சாதீயத்தைத் தீண்டாமையை வளர்க்கவில்லை, அவர்கள் பாட்டுக்கு வாழ்கிறார்கள் என்றாலும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவர்களை நெட்டித் தள்ளி உள்ளே இறக்கி விடுகிறார்கள் என்பதை ஜோவின் தந்தை பாத்திரம் பிரதிபலிக்கிறது.

‘என்ன தாண்டா வேணும் உங்களுக்கு? நாங்க பாட்டுக்கு ஒதுங்கித்தானே போறோம், எங்கள வுடுங்களேண்டா!’ என்ற அந்தக் கடைசி குமுறலும் ( ‘கபாலி’யில் வரும் ‘ஆமான்டா… நான் போடுவேண்டா!’ போல அழுத்தமாக இல்லாமல் கதறலாக), ‘நாளைக்கு என்ன வேணா நடக்கும் தம்பி!’ என்று வரும் பெண்ணின் தந்தையிடம் ‘நீங்க மாறர வரைக்கும் இங்க எதுவுமே மாறாது சார்!’ என்று பரியன் சொல்லும் இடமும் பல பேரின் குரலாக ஒலிக்கிறது.

சாதீயச் செயல்கள் நடக்கும் அதே உலகில் சாதீயத்தைத் தாண்டி மனிதனை மதிக்கும் நேசிக்கும் மனிதர்களும் நிறைய இருக்கிறார்கள் என்பதை பரியனின் நண்பனாக வரும் யோகிபாபு, பரியனின் தோழியான ஜோ, ஜோவின் தந்தை போன்ற பாத்திரங்கள் அழுத்தமாகப் பேசுகின்றன.

தமிழ் – இனம் என்று மற்றவர்கள் சொல்லும் நேரத்திலும் கூட மொழி தாண்டி சாதி என்பதையே பேசும்
ப.ரஞ்சித்தின் தயாரிப்பு நீலம் ப்ரொடக்சன் ஆகியவற்றைக் கொண்டு நிச்சயம் இது என்ன மாதிரி படமாக இருக்கும் என்று ஊகித்துச் செல்ல முடிகிறது என்றாலும் சிறந்த பதிவு.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘பரியேறும் பெருமாள்’ – ‘ஒரு சமூகத்தின் வலியை மனதில் ஏற்றும் பெருமாள்’, சிறந்த பதிவு. பாருங்கள்.

– திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *