துடும்பு

பறம்பு நிலத்தில் கொற்றவைக் கூத்தின் போது பாரியின் மக்கள் பல்வேறு கருவிகளோடு துடும்பையும் இசைத்து காட்டையதிரச் செய்வார்கள் என்று சு.வெங்கடேசனின் வரிகளின் வழியே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்.

இன்று க்ராண்ட்ஸ்கொயர் மாலில் மலர்ச்சி மாணவர் உதய்ஷங்கரின் நிறுவனக்கிளை திறக்கப் போன போது அதை தொட்டனுபவிக்க முடிந்தது.

ஊர்ப்புறங்களில் ஊராட்சி அலுவலக அறிவிப்புகளை வெளிப்படுத்தும் முன் அடிக்கப்படும் ‘தமுக்கு’வின் பெரியண்ணன் இந்த ‘துடும்பு’. இடுப்பில் மாட்டிக்கொண்டு பால்மரக்குச்சி அல்லது பலாமரக்குச்சியால் அடித்து இசைக்கப்படும் இக் கருவி அடித்து இசைக்கப்படும் போது அந்தப் பகுதியே அதிர்கிறது. உள்ளே நுழைகையில் பறையோடு சேர்த்து துடும்பையும் அடித்து அதகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள் மூவர். பறையையும் துடும்பையும் அவர்கள் கொட்டி முழக்கிய போது, ஆடத்துடித்தன கால்கள்.

இசை ஓர் உன்னதம். சில கணங்களில் ஒரு மனிதனின் உள்ளே நுழைந்து அவனது மனநிலையை மாற்றிப் போட்டுவிடுகிறது. துடும்பும் பறையும் சில நிமிடங்கள் நம்மை எங்கோ கடத்திப்போய்விடுகின்றன.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
14.11.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *