அரவிந்தர் வாழ்ந்த வீடு

ம் வாழ்வில் நடந்தேறும் சில சங்கதிகளை எப்படி நடந்தன என்று விளக்க முடிவதில்லை, ‘எப்படி நடந்தது!’ என்று வியக்க மட்டுமே முடிகிறது.

புதுச்சேரியின் ஒவ்வொரு வீதியும் முக்கிய கட்டிடங்களும் பல கதைகளை பொதித்து வைத்துக் கொண்டு காலத்தின் சாட்சியாக நிற்கின்றன. ஒரு வித்தியாசமான கலவையைத் தன்னுள் கொண்ட நகரம் புதுச்சேரி. பாரம்பரியப் பழைய கடந்த காலத்தின் வரலாற்றுச் சங்கதிகளை கட்டிட சுவர்களில் தேக்கி வைத்துக் கொண்டு, வெளிப்பூச்சு வண்ணத்தில் நிகழ்காலத்தை கொண்டிருக்கிறது.

…. ….

பிரித்தானியர்கள் இந்தியாவின் பகுதிகளையும் பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரியையும் ஆண்டு கொண்டிருந்த அந்த நேரத்தில், புதுச்சேரிக்கு வந்த ஒரு ஞானி செட்டியார் ஒருவரைப் பார்த்து, ‘ஒரு பெரும் ஞானி இங்கே வரவிருக்கிறார். சில காலம் மறைந்து வாழும்படியான ஓர் இருப்பிடம் வேண்டுமவருக்கு. அப்படியொரு வீட்டைக் கட்டு!’ என்றாராம். சொல்வதை மட்டுமே கேட்டு சுரங்கப் பாதையும், பதுங்கு குழி பாதாள அறையும் கொண்ட வீட்டைக் கட்டினாராம் அந்த செட்டியார்.

இது நடந்தேறிய அதே வேளையில்,
கொல்கத்தாவின் பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்தருக்கு, யோகப் பயிற்சிகளினால் உள்முகத் திருப்பம் நடந்ததாம். விடுதலை வேட்கையில் சிறைக்குப் போன அவரை சிறையில் ஆன்மீக உணர்வு ஆட்கொண்டது.
சிறையிலிருந்து வெளியேறி திரும்பவும் கைதாவதிலிருந்து தப்பிக்க தெற்கின் பிரஞ்சுப் பகுதியான புதுச்சேரிக்கு வருகிறார். புதுச்சேரிக்கு வந்து வைசியாள் வீதியின் 39ஆம் எண் கொண்ட வீட்டின் முன்னே நின்றாராம். தசரத செட்டியாரின் தாத்தா சுரங்கப்பாதையும் பதுங்கு குழி பாதாள அறையும் வைத்துக் கட்டிய அதே வீடுதான் அது.

….

புதுவை கடற்கரையில் வந்திறங்கிய அரவிந்தர் இந்த வீட்டிற்கு வந்து இங்கேயே கொஞ்சம் காலங்கள் மறைந்து வாழ்ந்திருக்கிறார் (இப்போதைய எண் 63 ).

அரவிந்தர் தங்கியிருந்த அந்த மாடி அறையை ஓர் ஆலயம் போல் தினமும் துடைத்து மலர்களிட்டு பூசிக்கிறது அரவிந்தர் ஆசிரமம். அதற்கென ஒரு தனி ஊழியர் ஆசிரிமத்திலிருந்து வந்து போகிறார் தினமும்.

அரவிந்தர் இருந்த இரண்டாம் மாடியின் அறையில் ஒரு திறப்பைத் திறந்தால், ஒரு சிறிய சுரங்க வழியொன்று கீழ்த்தளம் வரை போகிறது. அங்கிருந்து அரவிந்தர் குரல் கொடுப்பாராம், கீழே தூக்கில் உணவை வைத்துவிட்டால், கயிற்றின் உதவியால் இழுத்து எடுத்துக்கொள்வாராம் அரவிந்தர்.
…. ….

பாரதி வாழ்ந்த வீட்டிற்குப் போகலாமென்று கேட்ட என்னை, ‘இன்னொரு இடம் இருக்கிறது!’ என்று சொல்லி சொல்லாமல் கூட்டிப் போய் நிறுத்தினார்கள் மலர்ச்சி மாணவர்கள் ரமேஷ் சோனியும், பாலகிருஷ்ணனும், சபரியும். எங்கே போகிறோமென்று தெரியாமலே போன எனக்கு, தசரதச் செட்டியாரின் சந்ததியும் தற்போதைய உரிமையாளருமான ராமகிருஷ்ணன் விளக்கிய போது உடலதிர்ந்தது.

சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அத்தியாத்தை முடித்து விட்டு மகான் அரவிந்தர் என்று நிகழ்ந்த பெரு மாற்றத்தின் தொடக்கம் நடந்த இடம் இந்த வீடு, பாரதியோடு மனம் கலந்திருந்த இடம் இந்த அறை, தியானத்தில் அமைதியில் கரைந்த இடம் இந்த அறை, ஆசிரமும் அன்னையும் இன்ன பிற சங்கதிகளும் வருவதற்கு முன்பு உடலாய் உருவமாய் ரத்தமும் சதையுமாய் இங்குதான் இருந்திருக்கிறார்… இந்த எண்ணங்கள் உருவாக்கிய ஆழம் அதிஉன்னதமானது.

அரவிந்தர் ஆழ்ந்திருந்த அந்த அறையில் இருந்தத் தருணங்கள், அவர் பயன்படுத்திய அதே சுரங்கப்பாதையைத் துறந்து தலையை விட்டு கீழ்த்தளத்தைப் பார்த்த நிமிடங்கள் என அந்த வீட்டில் நான் இருந்த அந்தச் சில கணங்கள் என் வாழ்வின் செல்வம்.

ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ‘தாயம்’ வகுப்பெடுத்து விட்டு நள்ளிரவு கடந்ததைக் கூட உணராமல் கடற்கரையில் நின்று கொண்டு அம்சம் ட்ராவல்ஸ் அதிபர் கோவிந்தும் நானும் அரவிந்தர் பற்றிய பேச்சில் கரைந்து கிடந்தோம்.

‘இந்தக் கடற்கரையில் இங்கெங்கோதான் அவர் இறங்கி் இப்படி அந்த திசையில் சென்றிருக்க வேண்டும்!’ என்று நான் சொன்னதற்கு, ‘அவர் வாழ்ந்த வீடு இங்குதான் ஒரு தெருவில் இருக்கிறது. சுரங்கம் வழியே தூக்கில் உணவை அனுப்புவார்களாம் அவருக்கு!’ என்று பதில் சொன்னார் கோவிந்த்.

ஏழு ஆண்டுகள் கழித்து திடீரென்று அந்த வீட்டின் அந்த அறையின் கதவு திறந்திருக்கிறது எனக்கு.

முதல் பாராவைப் படிக்கவும்.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
சென்னை
08.12.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *