‘பேட்ட’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பேட்ட 1

பேட்ட 2

‘அண்ணாமலை’ படத்தின் மாஸ் டைட்டில் கார்டையே எந்த மாற்றமும் இல்லாமல் அனிருத் தந்திருப்பதிலும், ‘இன்ஸ்பிரேஷன், டெடிகேஷன் டு ஒன் அண்ட் ஒன்லி ரஜினி’ என்று போட்டுவிட்டு கார்த்திக் சுப்பு ராஜ்  தொடங்குவதிலுமே புரிந்துவிடுகிறது… இது ரஜினி ரசிகன் ரஜினி ரசிகர்களுக்காக செய்திருக்கும் ரஜினி படம்!  ‘ரஜினி படத்துல நடிக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டவங்கல்லாம் ஏறுங்க!’ என்று  வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டும், ரஜினியை எப்படி ஒரு ரசிகன் பார்க்கவிரும்புவான் என்று ஏக்கத்தை படம் நெடுக அனிருத்தையும் திருவையும் வைத்துக்கொண்டும் ஸ்டைலாக தீர்த்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

மலைப்பிரதேசத்தில் இளம் பட்டாளங்கள் கொட்டமடிக்கும் ஒரு கல்லூரியின் விடுதிக்கு வருகிறார் ஒரு வயதான காப்பாளர். அவரது வருகையும் அதைத் தொடர்ந்து நடைபெறும் தரமான சம்பவங்களுமே – ‘பேட்ட’.

நிறைய ‘மாஸ்’ கொஞ்சம் ‘க்ளாஸ்’ என்றிருக்கும் இப்படியொரு பாத்திரத்தை வேறு யார் இவ்வளவு சிறப்பாக செய்யமுடியும் என்று செய்திருக்கிறார் ரஜினி. ‘மரண மாஸ்’ என்றால் என்ன என்பதற்கு தெளிவான எடுத்துகாட்டு. கிட்டத்தட்ட 70  என்றாகி விட்ட வயதில் இப்படி ஓர் உற்சாகமாய் துள்ளலுடன் இப்படிச் செய்திருப்பதற்கே ரஜினிக்கு ஒரு மலர்ச்சி வணக்கம், பூங்கொத்து!

‘யோசிச்சிட்டே இருக்கக்கூடாது, பட்டுன்னு யோசிச்சு பொட்டுன்னு போட்டுடனும்!’ என்றவாறு கேட்டை மூடச் சொல்லிவிட்டு பச்சை வண்ண பென்ஸ் காரின் டிக்கியை நோக்கி நடந்து செல்லும் அந்த இடம், அதைத் தொடர்ந்து நடந்தேறும் சம்பவம், ‘டேய் அடிச்சு அன்டர்வேரோட ஓட உட்டுடுவேன்’ என்னும் அந்த இடம், கூட்டம் வந்து இறங்கட்டும் என்று ‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ பாடல் கேட்டவாறு அமர்ந்திருக்கும் இடம், ‘அட.. அதுக்குள்ளே இங்க வந்துட்டீங்களா!’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைத்து டீ ஆர்டர் செய்துவிட்டு அடுத்து நடக்கும் செவுட்டடி என படம் முழுக்க நின்று செய்திருக்கும் மாஸ்கள் அலப்பறை.

petta_154598882960

 

‘ஒரு மொட்ட ஒரு மீசை’ (ராஜாதி ராஜா படத்து வசனம்) ‘இன்னும் நீங்க மாறலியாடா’, ‘அடுத்த நிமிடமே ‘டீ கேன்சல்’ ‘ஐயையோ.. என் கண்ணாடி!’ ‘உன் மாமியார்கிட்ட போடா!’ ‘அனுபவத்தில சொல்றேன், புகைப் பிடிக்கறது நல்லதில்ல!’ ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…’ பாடல் ரக அடாவடிகள் அட்டகாசம்.

கொஞ்சம் நேரம் வரும் திரிஷா அழகாக இருக்கிறார், சிம்ரன் அதைவிட இன்னும் கொஞ்சம் ஈர்க்கிறார்.

பேட்ட வேலன் கதையை ஒரு வண்ணத்திலும், மாஸ் காளியின் சம்பவங்களை ஒரு பொன்னிறத்திலும் கண்களுக்கு உறுத்தாமல் காட்டி அட்டகாசப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

‘இதற்குத்தானே இவ்வளவு நாள் தவமிருந்தேன்!’ என்று வெறியோடு இயங்கியிருக்கிறார் அனிருத். ‘உல்லாலா’ மரண மாஸ்’ என்று பாடல்களிலும், பின்னணியிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

நிறைய நடிகர்கள் இருந்தாலும் விஜய் சேதுபதியும், நவாசுதீன் சித்திக்கும் அழகாகச் செய்து தனியாகத் தெரிகிறார்கள்.

எதிர்பார்த்த மாதிரியே சில காட்சிகள் நடப்பதும், எதிர்பாராத விதத்தில் சில காட்சிகள் இருப்பதும் கார்த்திக் சுப்புராஜின் ட்ரேட் மார்க் என்று சொல்வார்கள். இதிலும் அதையே செய்து அசத்துகிறார் கடைசி வரையிலும்.

முதல் பாதி – சிவகாசிப் பட்டாசு, இரண்டாம் பாதி – ‘லேசா நமுத்துப் போயிருச்சோ, வெடிக்க நேரம் ஆகுதே!’ என்று எண்ணுகையில் படபடவென்று வெடிக்கிறது.

வி டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘பேட்ட’ – தரமான சம்பவங்களைக் கொண்ட கார்த்திக் சுப்புராஜின் ‘கெட்டாப் பையன் சார் இந்தக் காளி!’ ; சிறந்த பொழுதுபோக்கு;  நிச்சயம் பாருங்கள்.

 

திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *