ஒரேயொரு வாக்கைப் பதிவு செய்ய ஒரு நாள் ஒதுக்கி ஊருக்குப் போய் வருவது

20190418_0843233679278638902612156.jpg

வாக்குப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக மணக்குடி வந்தேன்.

வாக்கு பதிவு மையம் பொதுவான மற்ற இடங்களைப் போல மணக்குடியிலும் பள்ளிக்கூடம்தான். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வாக்குச் சாவடியின் வாயிலில் பெரும் வளைவும், வாழைமரங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணிகள் மிக அமைதியாக நடந்தேறும் வாக்குச்சாவடியாம் இது. விருது பெற்ற வாக்குச்சாவடி என்று தேர்தல் ஆணையத்தின் பதாகை இருந்தது. கூடவே, ‘அனைத்து மகளிர் வாக்குச் சாவடி’ என்றோர் பலகையும் கூட.

உள்ளே நுழைந்தால் சிவப்புக் கம்பளம் வேயப்பட்ட பாதை. ‘எதாவது கல்யாணத்துக்கு வந்துட்டமோ!’ என்ற கலவரம் ஒரு கணம். ‘வாப்பா!’ என்று வெளியில் நின்று வரவேற்பது சிவகலை சித்தி. வெளிப்புற மேற்பார்வை பொறுப்பாம் அவர்களுக்கு.

வரிசையில் போய் நின்றால், முன்னே நிற்கும் வெள்ளை சட்டை மனிதர் ‘அப்பா… என்னா வெய்யிலு, இப்படி வேர்க்குதே!’ என்ற படியே திரும்புகிறார் பார்த்தால் மணி மாமா.
‘வா சிவா… ஓட்டா? எப்ப வந்தே!’ என்கிறார். அவருக்கு முன்னே பாபு ஐயர், ‘போன மாதம் ‘வளர்ச்சி’ பிரமாதம்! பேரனுக்கு 29ஆம் தேதி உபநயனம் வச்சிருக்கோம், அவசியம் வரணும்’ என்கிறார். எனக்குப் பின்னால் பரி. ஆண்கள் வரிசை அதிகம் இருக்க, எண்ணிக்கை குறைவாக இருந்த பெண்கள் வரிசையில் நின்ற அம்மா வாக்குப் பதிவு முடித்து வெளியே வந்தே விட்டார்.

வாக்குப் பதிவு செய்து விட்டு வெளியே போக வழியும் தெரியாமல் கண்கள் மங்கலாக கையில் தடியோடு ஒரு பாட்டி. ‘சரி வாங்க. எந்த வீடு!’ என்று கைபிடித்துக் கூட்டிப்போனால், ‘நல்லா இருக்கனும் ராசா!’ என்று வெற்றிலைப் பல்லைத்தாண்டி சிரித்து சொன்னது பாட்டி. என் முகத்திலும் டீ சர்ட்டிலும் வெற்றிலை எச்சில் துளிகள்.

அவரைக் கைபிடத்துக் கூட்டிச் செல்லும் போதே, ‘சிவாதான இது!?’ ‘வாத்தியார் பையன்!’ என்று குரல்கள். எல்லாருக்கும் திரும்பி ஒரு புன்னகை மரியாதை செய்துவிட்டு மறுபடியும் வரிசைக்கு வந்தால், ஆறு பேருக்கு அப்புறம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் என்கிற வகையில் இரண்டு தாத்தாக்கள். அவர்களை இழுத்து வந்து வரிசையில் முன்னால் நிறுத்தி ‘போங்க. முதல்ல போய் நீங்க போட்டுட்டு போங்க!’ என்று அனுப்பினால், அடுத்து என்னிடமே வந்து நிற்கிறார் இன்னொரு பெரியவர்.

மகளிர் வரிசையில் பலர் நிற்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் நேராக முன்னால் வந்து நிற்கிறார் காலஞ்சென்ற கலியனின் மனைவி, செல்வத்தின் அம்மா. யாரும் தடுக்கவில்லை. அவரும் யாரையும் கண்டு கொள்ளவில்லை.

‘எங்கியாவது வரிசையில வருதா பாரேன். நேரா வந்து முன்னாடி நிக்குது பாரேன். எவ்ளோ பேரு நிக்கறாங்க!யாராவது நறுக்குன்னு கேளுங்க!’ ஆண்கள் வரிசையிலிருந்து குரல். யாரென்று திரும்பி பார்த்தால் ராமமூர்த்தி. கலியனின் தம்பி. அந்தப் பெண்மணியின் கொழுந்தனார். நான் சிறுவனாக பள்ளிக்குப் போன காலங்களில் இளைஞனாக இருந்தார் இந்த ராமமூர்த்தி. தினமும் வயிறு முட்டக்குடித்து விட்டு இரவு கடைசிப் பேருந்தில் வருவார். பேருந்தை விட்டு இறங்கியதும் கெட்ட வார்த்தையில் சத்தமாக எவரையாவது திட்டிக் கொண்டே போவார். அதே ராம்மூர்த்தி முடியெல்லாம் நரைத்து இன்று. அவரது அண்ணன் கலியன் அவர்களின் பையன் செல்வம் என் ஐந்தாம் வகுப்புத் தோழன்.

‘செல்வத்துக்கு ஓட்டு எங்க?’
‘நெய்வேலில. இங்கியும் இருக்கு’
‘இப்ப வருவான்.’ என்றவர் மிக மெல்லிய குரலில் ‘திருமாவளவன் கட்சில இருக்கான். அவரு இங்கதான நிக்கறாரு. ஓட்டுப் போட வருவான்!’ என்றார். ‘செல்வம், விசிகல இருக்கானா!’ என்ற என் வியப்பிற்கு தலையாட்டுகிறார்.

‘உங்க பசங்க என்னா செய்யறாங்க?’
‘எந்த பசங்கள சொல்றது?’
‘அட… இது என்ன கேள்வி? உங்க பசங்கதான்!’
‘எனக்கு ஆறு பசங்க!’
‘வாஆஆஆட்!’ என்றது மனது,’ஆங்…!’ என்றது வாய்.
‘மூணு பொண்ணுங்க. மூணு பசங்க!’
‘தெனம் குடிச்சிட்டுப் போனவரு இதைத் தான் செஞ்சாரு போல!’ என்று எண்ணுகையில் என் முறை வர, வாக்குச் சாவடிக்குள் நுழைகிறேன்.

வாக்குச் சாவடியின் உள்ளே நுழைகிறீர்கள். நுழைந்ததும், உள்ளே சுவர் முழுக்க பல இடங்களில் மேலே உங்கள் பெயர் ஒட்டப்பட்டு இருந்தால், எப்படி இருக்கும்?! சுவர் முழுக்க மலர்ச்சி போஸ்டர்கள். சென்ற ஆண்டு மலர்ச்சி காலண்டரின் பக்கங்களை கத்தரித்து அறை முழுக்க ஒட்டியிருக்கிறார் இந்தப் பள்ளியின் ஆசிரியர். வகுப்பறை இப்போது வாக்குச் சாவடியாக இருக்கிறது.

உள்ளே நுழைந்தால்… அட… எல்லா அலுவலகர்களுமே பெண்கள்.

என் ஒப்புகைச் சீட்டை வாங்கி ‘நூத்தியறுபத்தியெட்டு!’ என்று படிக்கிறார். பின்னால் இருப்பவர்கள் எதையோ சரி பார்த்துவிட்டு ‘பரமன்’ என்கின்றனர். அடுத்த அலுவலரிடம் போகிறேன். என் வாக்காளார் அட்டையை வாங்கி ஒரு பதிவேட்டில் EPIC 6#@%& என்று ஏதோவோர் எண்ணை எழுதி என்னிடம் கையெழுத்து வாங்குகிறார்.

மூன்று தேர்தல் அலுவர்களுக்கும் வியர்த்து ஊத்துகிறது. பாவம் அவர்கள் இருக்கும் இடத்தில் மின் விசிறியின் காற்று வரவில்லை. ‘அடப்பாவமே… நமக்கு கொஞ்சநேரமே இப்படி இருக்கே. முழு நாளும் இப்படி இருக்கனுமே இவங்க! மத்தியான வெயில் கொளுத்துமே! கடவுளே!’

‘சார் வாங்க!’ என்ற அடுத்தவரிடம் போனேன். விரலை மேசையில் நீட்டி வைக்கச் சொல்லி, துடைத்து விட்டு, மையிட்டார் அவர். பெண்கள் எதையும் அழகாகத்தான் செய்வார்கள் போல.

வாக்களிக்கும் எந்திரத்தை நோக்கி அனுப்பப்பட்டேன் நான். சென்ற முறை பிஸ்கட் கலர் கார்ட்டன் அட்டையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம், இம்முறை மிக அழகாய் வடிவமைக்கப் பட்டு ‘இந்திய தேர்தல் ஆனையம்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கரும்பழுப்பு அட்டையால் மறைக்கப்பட்டிருந்தது. என் வாக்கைப் பதிவு செய்ததும், நான் அளித்த வாக்கு யாருக்குப் போகிறது என்பதை பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த மற்றொரு இயந்திரம் திரையில் காட்டியது.

வாக்களித்து விட்டு வெளியே வந்தால் பல மீட்டர்களுக்கு வெளியே கும்பல் கும்பலாய் ஆட்கள். ஒரு கும்பலில் சக்கரை இருந்தான், கரை வேட்டிகள் நடுவே.

‘சிவா… நமக்குத்தானே ஓட்டு போட்ட!?’
‘ஹஹ்ஹஹ்ஹ’

இன்னும் கொஞ்சம் போனால், அடுத்த கும்பலில் ராஜகுமாரன். ‘சிவா, பானைக்குத்தான ஓட்டு போட்ட!’
‘ஹஹ்ஹஹ்ஹ’

‘அண்ணே!’ என்று சிரித்துக் கடந்து போவது அல்லியின் தம்பி பரமானந்தம்.

வாக்களித்து விட்டு காரிலேறி சென்னையை நோக்கிப் புறப்பட்டு விட்டேன்.

‘ஊருக்கெல்லாம் போக வேண்டாம். இருக்கும் இடத்திற்கு அருகிலேயே பதிவு செய்யலாம் உங்கள் வாக்குகளை இனி. தேர்தல் ஆணையம் ஏற்பாடு!’
நேற்று காலை செய்தித்தாளில் பார்த்தேன்.
ஆனாலும், ஒரு மணி நேர வேலையான ஒரேயொரு வாக்கைப் பதிவு செய்ய ஒரு நாள் ஒதுக்கி ஊருக்குப் போய் வருவது, அந்த அனுபவங்களுக்காகப் பிடிக்கிறதே!

வாழ்க்கை அனுபவங்களாலேயே நிரப்பப் படுகிறது. சில நிமிட அனுபவங்களுக்காக சில மணி நேரப் பயணங்களைத் தரலாம்தானே.

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச் சால
18.04.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *