சேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்

சேத்தன் பகத்தின் புதிய நூலான ‘இண்டியா பாஸிட்டிவ்’ வெளியீட்டு விழா தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்ட விருந்தினர்களின் மத்தியில் சென்னை லீலாபேலஸில் இன்று நடந்தேறியது. நேச்சுரல்ஸ் சிகேகுமரவேலின் அழைப்பின் பேரில் கலந்து கொள்ள நேரிட்டது.

இது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே நடக்கும் நிகழ்ச்சி என்பது தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது. சிகேகுமரவேல் மிக அழகாக பேசினார். இன்றைய அரசியல் நிலையை தனது கோபத்தை நிறுத்தி நிதானமாக வெளிப்படுத்தினார்.

காங்கிரஸிலிருந்து மோகன் குமாரமங்கலம், பிஜேபியிலிருந்து ராகவன், ஆளும் அமைச்சரவையிலிருந்து மாஃபா பாண்டியராஜன், கலாமின் ஆலோசகர் பொன் ராஜ் ஆகியோரை மேடையில் ஏற்றி நடிகை சமூக ஆர்வலர் கஸ்தூரியை வைத்து கேள்வி கேட்க வைத்து ‘பாஸிட்டிவ் இந்தியா கான்க்லேவ்’ என்ற நிகழ்ச்சியையும் நடத்தி அசத்தினார் சிகேகே.

‘பாஸிட்டிவ் இந்தியா’ என்ற திசையில் தொடங்கிய போதும், பிஜேபி – காங்கிரஸ் – அதிமுக பிரமுகர்கள் மாற்றி மாற்றிக் குறிப்பிட்டுக் கொண்டு வழுவி திசை மாற்றவே செய்தனர். கஸ்தூரி இன்றைய நாட்டுநடப்புகளை விரல் நுனியில் வைத்துக் கொண்டு குறுக்குக் கேள்விகள் கேட்டு அசத்தினார். பொன் ராஜ் சரியான பட்டியல்களையிட்டு கைதட்டுக்கள் பெற்றார். மாஃபா பாண்டியராஜன் தந்த விவரங்களில் மாற்றுக் கட்சியினரின் திட்டங்கள் சிலதை பாராட்டிய விதத்தில் அசத்தினார்.

கோட் சூட்டில் வந்திருந்த சேத்தன் பகத் அழகாக பேசினார். தனது ஐஐடி அனுபவங்கள், தமிழ்நாட்டு மனைவி, டெல்லி அரசியல், மே 23 தேர்வு முடிவுகள் என அடுத்தடுத்து அடுக்கி அழகாகப் பேசினார்.

அரசியல்வாதிகளை கலந்துரையாடல் செய்ததோடேயே, ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி சேத்தன் பகத்தை வாசகர்களோடு கலந்துரையாடல் செய்யச் சொல்லியிருக்கலாம் என்ற எண்ணத்தோடே வெளியே வந்தேன். எது அவரை எழுத வைத்தது, ‘த்ரீ இடியட்ஸ்’ திரைப்பட வடிவம் பெற்று பெறும் வெற்றி பெற்ற போது எப்படி இருந்தது? ஏன் தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்தீர்கள்? என எத்தனையோ கேட்டுப் பெற்றிருக்கலாமே. இந்திய அளவில் பெரும் வெளிச்சம் பெற்ற ஒரு எழுத்தாளனின் அருகாமையும் வாய்ப்பும் கிடைத்தும் வீணடித்து விட்டோம், சிவகார்த்திகேயன் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஹிப்பாப் தமிழன் இசை, அனிருத் பாடல் என எல்லாம் கிடைத்தும் வாய்ப்பைக் கெடுத்து வீணடித்த ‘மிஸ்டர். லோக்கல்’ பட இயக்குனர் ராஜேஷைப் போல.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
18.05.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *