‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தேசத்தின் முக்கியப் பொறுப்பிலும், கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் முக்கியத் தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் போது இறந்து போகிறார். மருத்துவமனை வாசலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கொந்தளிக்கும் தொண்டர்கள் கூட்டம். ஆட்சியையும் கட்சியையும் எடுத்துக் கொள்ளப் போவது யார்? பழம் தின்றுக் கொட்டைப் போட்ட பழுத்த அரசியல்வாதிகள் கூட்டமாய் விவாதிக்கும் வேளையில், பல ஊழல்கள் வழக்குகள் கறைகள் கொண்ட கோட் சூட் அணிந்த மருமகன் அவர்களை கைப்பொம்மைகளாக்கி மொத்தத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான்.

அந்த அகில இந்திய கட்சியைக் காப்பாற்ற தலைவரின் நாற்பது வயது மகனை வெளிநாட்டிலிருந்து இறக்குகிறார்கள். அவனுக்குத் துணையாக அவனது சகோதரியும் வந்தால் கட்சியைக் காப்பாற்றலாம் என்ற நிலையில் மருமகனால் அவளது வாழ்வில் பெரும் பிரச்சினைகள். மருமகன் கையில் கட்சியும் ஆட்சியும் போனால் மண்ணின் கலாசாரம் அழியும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மண்ணை அடகு வைத்துவிடுவான் என்ற நிலையில் கட்சியின் மீதும் மண்ணின் மீதும் இருள் கவிழத்தொடங்குறது. எல்லா முனைகளிலும் சிக்கல் என்ற நிலையில், இந்தப் பேரிருளைக் கிழித்துக் கொண்டு ஒரு விடி வெள்ளி வெளி வந்தால், அது சாத்தான்களுக்கெல்லாம் பெரிய சாத்தானாகாவும் நல்லவர்களுக்கு நல்லது புரிவதாகவும் இருந்தால் எப்படி இருக்கும்! அந்த விடிவெள்ளி, சாத்தான்… ‘லூசிஃபர்’!

இது வரை சொன்னது மொத்தக் கதையல்ல. வெறும் தொடக்கமே. ‘எஸ்தப்பன்’ என்று கேரள வழக்கு மொழியில் விளிக்கப்படும் ஸ்டீஃபன் பாரம்பளி என்ற லூசிஃபராக மோகன்லால் வெளுத்து வாங்குகிறார்.
முதல் ஃப்ரேமிலிருந்து சஸ்பென்ஸ் உடைக்கும் கடைசி ஃப்ரேம் வரை கண்கள், கன்னம், கைகள் என மொத்த உடலையும் நடிக்க வைத்து விளாசுகிறார் மனிதர்.

வெறுப்பு உமிழும் கண்கள், மகளை நினைத்து பதறும் முகம், அரசியலில் இறங்கும் சகோதரனை நினைத்து மகிழும் முகம், அண்ணனிடம் சரணடைந்து கதறும் முகம் என வேண்டிய இடத்தில் வேண்டியதைத் தந்திருக்கிறார் பிரியதர்ஷினியாக வரும் மஞ்சு வாரியர்.

பிரித்விராஜ் அழகாக செய்திருக்கிறார். எதிர்கட்சித் தலைவர், ஒற்று அறிபவர், கூட இருந்தே துரோகம் செய்பவர் என அனைவரும் அவரவர் பாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளனர். விவேக் ஓபராய் அழகான வில்லனாக.

‘ஸ்டீஃபன் நடுவுல அவ்ளோ வருஷம் எங்க போன நீ? சொல்லுவியா?’ என்று கேட்கும் பாதிரியாரிடம், ‘தேவதூதன் ஏசு…பதினெட்டு வருஷம் கலீலோவில இல்லையே, எங்கே போனீங்கன்னு அவர்கிட்ட கேப்பீங்களா நீங்க?’ என்று எதிர்க்கேள்வி கேட்கும் ஸ்டீபன், படம் முடிவில் அதற்கான பதிலை ‘பாட்ஷா’த்தனமாக சொல்வது ரசிக்கும் படி இருக்கிறது.

ஃப்ரான்ஸின் உளவுத்துறையில் படத்தைத் தொடங்கி, பிகேஆர் மரணம், அரசியல் குழப்பங்கள், வாரிசு உரிமைப் போர், ட்ரக் மாஃபியா, ஆசிரமம், சிறைச்சாலை என எங்கெல்லாமோ பயணித்தாலும் மொத்தத்தையும் அழகாகக் கட்டித் திரும்ப கொண்டு வந்து தொடங்கிய இடத்தில் கோர்த்து வைத்திருக்கும் ‘சிக்’கென்ற திரைக்கதை நம்மை கவர்கிறது.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘லூசிஃபர்’ – மோகன்லாலுக்கு அடுத்த ‘புலிமுருகன்’ அரசியல் களத்தில். பாருங்கள்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *