இமயமலையின் அடிவாரத்து சாங்கு ஏரியில்…

பரந்து விரிந்த உயர்ந்த இமயமலையின் அடியில் ஓர் எறும்பு ஊர்வது எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது இமயமலை ரேஞ்சில் வளைந்து வளைந்து ஊர்ந்து டொயாட்டோ இன்னோவாவில் நாம் பயணிப்பது.

15,000 பனியாறுகளைக் கொண்டிருக்கிறது, எப்போதும் உறைந்திருக்கும் உலகின் உயர்ந்த சிகரத்தைக் கொண்டிருக்கிறது, பூமியினடியில் ஆசிய தட்டுகளுக்குள் ஐரோப்பிய தட்டுகள் உள்நுழைகின்றன, இதனால் இம்மலை ஆண்டுக்கு ஐந்து மீட்டர் உயருகிறது, மிகப் பிரம்மாண்டமானது என்றெல்லாம் எவ்வளவு படித்தாலும், கேட்டாலும் கிடைக்காத பல அனுபவங்கள்… இமயமலையின் முன்னே நிற்கும் போது, கண் முன்னே தெரியும் அந்த பரந்து விரிந்த உயர்ந்த பிரமாண்டத்தைப் பார்க்கும் போது கிடைத்து விடுகின்றன.

சிக்கிமின் தலைநகர் கேங்டாக்கிலிருந்து முன்பே விண்ணப்பித்துப் பெற்றிருந்த அனுமதி ஒப்புச் சீட்டைக் காட்டிவிட்டு இந்திய சீன எல்லையான நாதுலா பாஸ் செல்லும் பாதையில் கொஞ்சம் தூரம் பயணித்த பின்பு இடமும் வலமும் அடியும் முடியும் காண முடியுமா என்றெண்ணச் செய்யும்படி சரேலென எழுந்து நிற்கிறது இமயமலை. இமயத்தின் பிரமாண்டத்தை எழுத முடியாது. பார்த்தாலே புரியும். இதைப் பார்த்துவிட்டுதான் ‘ஐயாவென ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!’ என்று கதறினாரோ மாணிக்கவாசகர் என்று ஐயம் கூட வருகிறது.

சிவாஜியையும் எம்ஜியாரையும் சரியாகப் பார்க்காதவரே, ரஜினியையும் கமலையும் சிலாகிப்பார்கள். ரஜினியையும் கமலையும் சரியாகப் பார்க்காதவர்களே அடுத்த நிலையில் இருப்போரை சிலாகிப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதே மாதிரி இமயமலையை பார்க்கும் வரையே மற்ற மலைகளை சிலாகிப்பர் எவரும் என்ற அழுத்தமான எண்ணம் வந்தது அதன் மடியில் ஊர்ந்து பயணித்த போது இன்று.

திடீரென்று ஏற்படும் நிலச்சரிவு, செங்குத்தான வளைந்து வளைந்து ஊர்ந்து செல்ல வேண்டிய பாதை எனப் பல காரணங்களால் முப்பத்தியாறு கிலோ மீட்டரை கடக்க மூன்று மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். சுள்ளென்று அடிக்கும் வெய்யிலில் கிளம்பிய நமக்கு இன்னும் சிறிது தூரத்தில் வேறு உயரம் வேறு வெப்ப நிலை என்று புரியும் அனுபவம் இல்லாமையால், சிறுநீர் கழித்துத் தேநீர் குடிக்கலாம் என்று இறங்கிய இடத்தில், வண்டியிலிருந்து வெளியில் வந்ததும் தாக்கும் 8 டிகிரியில் உடல் அதிரும் அனுபவம் கொள்கிறோம். அந்தக் குளிருக்கு சூடாக நெருப்புக் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் அங்கு கிடைக்கும் கொதிக்கும் மாகி நூடுல்ஸையும் நல்ல தேநீரையும் சுடச்சுட உள்ளே தள்ளுகிறோம், வாய் சுட்டாலும் பரவாயில்லையென்று.

உயர்ந்த மலையில் அங்கங்கே சிமெண்ட் போட்டுப் பூசி ஒட்டுப் போட்டு அதற்கு மட்டும் வெள்ளைப் பெயிண்ட் அடித்ததைப் போலத் தெரிந்த சங்கதிகளைக் காட்டி, ‘பய்யா… ஓ க்யா ஹை?’ என்றேன். ‘ஸ்னோ!’ என்று பதிலத்தவனை நம்பாமல், ‘அது பனியா!’ என்று கேட்டு ‘ஹாங் ஜீ!’ என்றவன் சொன்னதும் கைகள் தானாக ஜாக்கெட்டை எடுத்தன.

கேங்டாக்கிலிருந்து முப்பத்தியாறு கிலோ மீட்டரில் வருகிறது புத்தமதத்தினரால் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வண்ணம் காட்டும் அதிசயம் என்று போற்றப்படும் ‘சாங்கு ஏரி’. இமயத்தின் பனி உருகி இங்கே கூடி இந்த ஏரியாய் உருவாகியுள்ளது. இதன் வெளியேற்றம் ஆறாய் கீழ் நோக்கிப் பாய்கிறது.

ஏரியினருகில் இறங்கிய உடனேயே பிலுபுலுவென ஓடி வந்துப் பிடித்துக் கொள்கிறார்கள், யாக் எருமையை வைத்து சவாரி வியாபாரம் நடத்தும் உள்ளூர்க்காரர்கள். கேங்டாக்கிற்கு மேலே செல்ல வேண்டுமென்றாலே இந்தி தெரிந்தால்தான் இவர்களிடம் தொடர்பிலிருக்கலாம் என்ற நிலைதான். யாக் எருமை சவாரி என்ற பெயரில் பணம் பிடுங்க அலைகின்றனர். ‘தஸ் மினிட் கே பாத் பையா!’ என்று சொல்லி சொல்லி தள்ளிப் போட்டு அவர்களை பேரத்திற்குள் கொண்டு வரலாம். யாக் எருமைகள் நம்மை முதுகில் ஏற்றிக் கொண்டு மிக வேகமாக ஓடுகின்றன. ஏறும் ஆளைப் பொறுத்து ஓட வைப்பார்கள் போல.

கர்நாடகாவின் சாவன்துர்கா மலையில் 5500 அடிகள் உயரம் ஏறியிருக்கும் எனக்கு, கடல் மட்டத்திற்கு மேலே 12,310 அடிகள் என்ற இந்த உயரம் உற்சாகம்தான். சாங்கோ ஏரி இந்த உயரத்தில் இருக்கிறது. வெயிலின் அருமையை இங்கே உயிரும் உடலும் உணர்கின்றன. பகல் ஒரு மணிக்கு திடீரென ஒரு மேகக் கூட்டம் பனிப்புயலைப் போல நம்மை அடிக்கிறது. வெயிலை மறைக்கிறது, குளிர் உடலை கைகளைச் சில்லிடட வைக்கிறது, உடல் குளிர்கிறது. சிலருக்கு நடுங்குகிறது. படியில் ஏற சுவாசம் தடுமாறுகிறது. திடீரென வெய்யில் வருகிறது. எல்லாமே மாறுகிறது. வெய்யில் உலகிற்கு உயிர்கட்கு அதிசயம் செய்கிறது.
இயல்பு நிலை திரும்புகிறது. இரவில் அந்த இடம் எப்படியிருக்குமென நினைக்கவே நடுக்கம் வருகிறது. அதே பகுதியில் பனியிலும் மழையிலும் இருக்கும் இராணுவத்தினரை நினைக்கையில் கைகள் தானாக குவிகிறது.

கோடையில் நீல வண்ணத்தில் தெரியும் இந்த ஏரியின் நீர் பனிக்காலத்தில் உறைந்து முற்றிலும் பனியாக ஆகி விடுமாம். சாங்கோ ஏரி உன்னதமான அனுபவம் தரும் இடம்.

ஒன்று புரிகிறது. பரந்து விரிந்த இந்த இந்தியா தன்னுள்ளே பல சங்கதிகளைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பார்க்க எவ்வளவோ சங்கதிகள் இருக்கின்றன.

சாங்கு ஏரியை நோக்கிய பயணம் பல சிலிர்ப்புகளைத் தந்தது.

ஒரு பயணத்தில் சென்றடையும் இடம் முக்கியமென்றாலும், அதை நோக்கிச் செல்லும் பாதையில் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் அதை விட முக்கியமானவை. பயண வழியில் கிடைக்கப்பெறும் அனுபவங்கள் சென்றடையும் இடத்தின் அனுபவத்தை ஆழப்படுத்திவிடுகின்றன. உடல் வலிக்க மலைப் பாதையில் நடந்து திருமலையிலேறிப் போகும் அனுபவம், நின்ற திருக்கோலத் திருமாலைப் பார்க்குமனுபவத்தை ஆழப்படுத்தி விடுவதைப் போல.

‘சிக்கிம் டைரி’

#Gangtak
#Sikkim
#ParamanInSikkim
#ChanguLake

#SikkimDiary

– பரமன் பச்சைமுத்து
கேங்டாக், சிக்கிம்
01.06.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *