பெரும் நன்றி…

கலகலவென்று கதைத்துக் கொண்டு கஞ்சியின் கடைசி மிடறு குடித்தவர் அப்படியே உறைந்து சுய நினைவு இழந்தார் என்ற செய்தி கேட்டு ஊருக்குப் புறப்பட்டேன்.  புதுச்சேரியில் மருத்துவமனையில் வைத்து சில மணி நேரங்கள் போராடினோம். தந்தையின் அருகில் நின்று கதறுவதைத் தவிர இறைவனை வேண்டுவதைத் தவிர வேறெதுவும் இயலவில்லை அத்தருணங்களில்.  உடல் விட்டு உயிர் பிரிந்த அவ்வேளையில் தனியனாய் நிற்கையில் எதையும் சிந்திக்க முடியவில்லை.  மணக்குடிக்கு பயணித்தோம்.

குத்தாலிங்கத்தை அழைத்து,
‘அநாதையைப் போல ஓர் உணர்வில் நிற்கிறேன். இப்படியாகிவிட்டது. மணக்குடியில் நல்லடக்கம் இன்று. மலரவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணுகிறேன். செய்தி தெரிவிப்பதா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!’ என்றேன். குத்தாலிங்கம், ராமசாமி,கார்த்திகேயன், குமரன் நால்வரும் ஏற்கனவே புறப்பட்டு இருந்தனர் அந்த அதிகாலையிலேயே. அவர்களாகவே மலரவர்களுக்கு க்ரூப்பில் தகவல் தெரிவித்தனர்.

மாலை தந்தையின் உடலுக்கு சிவாகமப்படி முறைகள் செய்த போது கவனித்தேன், சுற்றிலும் மலரவர்களாகிய நீங்கள். இடுகாட்டில் நல்லடக்கம் செய்யும் போதும், செய்த பின்னும் என்னுடனே நடந்த மலரவர்கள். நெகிழ்ந்து போனேன்.

அப்படியொரு கிராமத்திலிருந்து அப்படியொரு நிறைவான அருமையான வாழ்க்கையை வாழ்ந்து நெறிப்படுத்தித் தந்து விட்டு இறைவனடி சேர்ந்தார் என் தந்தை.

புதுச்சேரியில் எல்லா உதவிகளையும் செய்த, இறுதிச் சடங்கிற்கு வந்து தோள் கொடுத்த, அதன் பின்னரும் மணக்குடியைத் தேடி பயணித்து வந்து அன்பைத் தெரிவித்த, அழைத்து பேசிய, குனுஞ்செய்திகள் அனுப்பிய, இங்கிருந்தே பிரார்த்தனைகள் செய்த அனைத்து மலர்ச்சி மாணவர்களுக்கும், கல்லூரி நண்பர்களுக்கும், நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும்…

என் நன்றிகள்! பிரார்த்தனைகள்!

ஈடே செய்ய முடியாத தந்தையின் நினைவுகளை நெஞ்சில் கொண்டு அடுத்தடுத்த காரியங்களில் ஈடுபடுகிறேன்.

தந்தையின் ஆசிகள் வழி காட்டும்.
எல்லாம் வல்ல ஈடு இணையில்லா இறைவன் துணை செய்வான்.

பெரும் நன்றிகள்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
காஞ்சிபுரம்,
25.01.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *