மலர்ச்சி தினம் 2020

திருவண்ணாமலை, புதுச்சேரி, வேலூர், சேலம், பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை என பல இடங்களிலிருந்தும் வந்து குவிந்திருந்த மலரவர்களின் உண்மையான கொண்டாட்டங்களால் ‘மலர்ச்சி தினம் 2020’ மிகச் சிறப்பாக நடந்தேறியது ( 22.01.2020)

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஜனவரி 22ல் மலர்ச்சியைத் தொடங்கி வைத்த தந்தையை நினைத்து கொஞ்சம் நான் தடுமாற, நான் தடுமாறுவதை உணர்ந்து மலரவர்கள் கலங்க என தொடக்கத்தில் கொஞ்ச நேரம் சிறு போராட்டமாயிருந்தது.  அதிலிருந்து மீட்டு வர தந்தையைப் பற்றி இனி கொள்ள வேண்டிய பார்வையைப் பற்றி பேச வேண்டியிருந்தது.  சில நிமிடங்களுக்கு முன்னால் திறந்து வைக்கப்பட்ட மு. பச்சைமுத்து அறக்கட்டளை பற்றி சொல்ல வேண்டியிருந்தது.

அதைத் தொடர்ந்து குத்தாலிங்கமும் பூர்ணிமா நீத்துவும் எடுத்துக்கொள்ள மலரவர்களின் பகிர்வுகள் அருமையாக ஆழமாக வந்து விழுந்தன. ‘நான் ஒரு மெண்ட்லா இருந்தேன். அப்பதான் மலர்ச்சில கொண்டு வந்து விட்டாங்க! ஆனா இன்னைக்கு…’ என்ற மலரவரின் பகிர்வு உண்மையில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மலர்ச்சிக்கு தான் வந்த கதையை, முதல் அனுபவத்தை, மலர்ச்சி வந்த பின் கிடைத்த வளர்ச்சிகளை மலரவர்கள் பகிர்ந்தது கேட்கவே ஆனந்தமாக இருந்தது அனைவருக்குமே.

‘இத்தனை பாக்கெட்ஸ் அடிச்சிட்டு இருந்தேன். இன்னிக்கு அதெல்லாம் இல்லவே இல்லை’ ‘தடுமாறி தவித்த பெண், இன்று இத்தனை கிளைகள் கொண்ட ஒரு தொழிலின் பிராண்டின் நிறுவனர்’ என்ற வகையில் பகிரப்பட்டவைகளும், குத்தாலிங்கத்தின் பகிர்வும் ஆழமானவை, மலரவர்களால் சிலாகிக்கப்பட்டவை.

அதைத்தொடர்ந்து நடந்த ‘சித்திரம் பேசுகிறேன்…’ நூல் வெளியீடும், அதன் மூன்றாம் பிரதி பெற்ற அன்பர்கள் செய்த பகிர்வும் சுருக்கென்று(சுருக்கமாய்!) ஆனால் நறுக்கென்று இருந்தது.

அதைத் தொடர்ந்து மொட்டுகள் – அரும்புகளும், மலரவர்களும் செய்த திறமை வெளிப்பாடு அட்டகாசம். சிவதாண்டம் ( நந்தினி, சிவபுஷ்பலதா, கஜலட்சுமி) ‘கண்ணம்மா…’ பாடல், விஜய்&விஜய் டான்ஸ் என எல்லோருமே நன்றாகக் கொடுத்தார்கள். குத்தாலிங்கம் – ராஜலட்சுமியின் பையன்கள் பட்டையைக் கிளப்பினர், வாணி பிரதீப் டீம் உடை – நடை என எல்லாவற்றிலும் கலக்கி கவர்ந்தார்கள். ‘அப்படிப் போடு’ தொடங்கி ‘காந்தக் கண்ணழகி’க்கு மாறி, தெம்மாங்குக் குத்து குத்தி, என் ஜோடி மஞ்சக் குருவிக்கு போன அந்த தொடர் டான்ஸில் எல்லோருமே மிக மிக நன்றாகச் செய்தாலும், முகபாவனைகளால் பெயரைத் தட்டிக் கொண்டு போனதென்னவோ ‘அவனா நீ…!’ வகை உணர்ச்சி காட்டிய அஷ்வத்குமார் தான்.

எப்போதும் போல அஜீத் அருமையாகப் பாடினார், தனுஷா இந்த முறை கூடுதலாகக் கலக்கி விட்டார்.

நன்றாகப் பயிற்சி செய்தும் வர முடியாமல் தவற விட்ட ஷன்மதி மோகனவேலையும், ரதி – ரம்யா குழுவையும் நினைத்துக் கொண்டேன்.

ராமசாமியும், தனுஜாவும் அழகாகத் தொகுத்து வழங்கினார்கள்.  மலர்ச்சி வினாடி வினா சிறப்பான நிகழ்ச்சி, நேரமின்மையால் நன்றாக விளக்கித் தயார் செய்து போட்டியை தொடங்க முடியாமல் போனது. இந்த நிகழ்ச்சிக்காக ராமசாமி செய்திருந்த தயாரிப்புப் பணிகளின் அளவை நான் அறிவேன். வேறொரு நிகழ்வில் இதைத் தொடர்வோம் என நம்புகிறேன்.

இவற்றைத் தொடர்ந்து ஆசிரியரிடமிருந்து வந்த சில நிமிட வளர்ச்சிப்பாதை வேண்டியதை தந்ததென்றே அறிகிறேன் (நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்ரீநிவாச ராகவன் போன்றோர் செய்த கற்றல் பகிர்விலிருந்து அறிகிறேன்)

தந்தை இறந்து அதற்கான காரியங்கள் தொடர்பாக மலர்ச்சி் தினத்திற்கு முந்தைய நாள் வரை மணக்குடியிலேயே நான் இருந்து விட, இங்கே மலர்ச்சி தின ஏற்பாடுகளை சிரமேற்று செய்த என் முதல் சுற்றின் வாலண்டியர்களை எவ்வளவு தழுவினாலும் போதாது. என் பிரார்த்தனைகள் அவர்களுக்கு.

மூன்று மணி நேரத்தில் முற்றிலும் வித்தியாசமான கலவையாக இருந்தது மலர்ச்சி தினம் 2020.

நமக்கெல்லாம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கும், வழி நடத்திக் கொண்டிருக்கும் மலர்ச்சியை நன்றியோடும், மகிழ்வோடும் கொண்டாட மூன்று மணி நேரங்கள் போதவில்லைதான் என்றாலும் அதில் என்ன முடியுமோ, அதைச் சிறப்பாக செய்தோம்.

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
சத்யம் சினிமாஸ்
26.01.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *