கை கொடுக்க வேண்டும் நாம்…

‘பரமன்… என் காலேஜ்மேட் எல்ஸா லீனா பத்து மாடி கட்டடத்திலிருந்து குதிச்சி தற்கொலை பண்ணிகிட்டாளாம். இப்பதான் நியூஸ்ல பாத்தேன். ஃபீலிங் பேட். டிப்ரஷன்ல இருந்தா, ட்ரீட்மெண்ட்ல இருந்தா, கணவனோட இல்ல, ஒரு குழந்தை வேற இருக்கு!  மலர்ச்சி அவளுக்குக் கெடைச்சிருந்தா, வாழ்க்கையே வேறய இருந்திருக்கும், எழுந்து நின்னு நிறைய செஞ்சிருப்பா!’

மலரவள் ஒருவரிடமிருந்து சற்று முன் எனக்கு வந்த குறுஞ்செய்தி இது. அவர் கொடுத்திருந்த இணைப்பில் போய் பார்த்ததில் அது பற்றிய செய்தியை கேரள ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. கணவனிடமிருந்து பிரிந்து தாயோடும் மகளோடும் கொச்சினில் ஓர் அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாழ்ந்த, மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு மருத்து எடுத்துக் கொண்ட அந்த இளம்பெண்மணி, அதிகாலை நடைப்பயிற்சிக்கு செல்வதாகச் சொல்லி சென்று தான் குடியிருந்த அதே அடுக்கு மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்து உடல் சிதைந்து இறந்து போனார்.  தந்தையுமின்றி இப்போது தாயும் விட்டுப் போன அவரது அந்த ஒன்பது வயது மகளின் நிலை என்ன!

‘மலர்ச்சி மட்டும் அவளுக்குக் கிடைத்திருந்தால்…!’ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. சென்னையில் டொயட்டோ விற்பனையகம் வைத்திருந்த பெண்மணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஊடகத்தில் வந்தது, வளர்ச்சிப் பாதையில் அதைக் குறித்து பேசிய அதே தினம், ‘பரமன், அவ என் ஃப்ரண்டுதான் பரமன், மலர்ச்சிக்கு கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன் பரமன்! மிஸ் ஆயிடிச்சி, போயிட்டா!’ என்று பகிர்ந்து பதற வைத்தார் ஒரு மலரவள்.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்!  நமக்கு மலர்ச்சி கிடைத்தது, தொடர்ந்து வளர்ச்சிப்பாதையும் பிற வகுப்புகளும் பரமனும் கிடைத்துக் கொண்டேயிருப்பது நமக்கு இறைவன் அருளால் கிடைத்த நல்ல சங்கதி. ‘அப்பாடா… எனக்கு கெடைச்சது. வாழ்க்கை நல்லா இருக்கு!’ என்று இருந்து விடுவதா வாழ்க்கை? நம்மை சுற்றியுள்ளோருக்கு உதவுவதும், நமக்குக் கிடைத்ததை மற்றவருக்குக் கொடுப்பதும் நம் கடமை இல்லையா?

நமக்குத் தெரிந்தவர் திணறிக் கஷ்டப்படும் போது, கை கொடுக்கத்தானே வேண்டும்! காப்பாற்ற கை நீட்டினாலும் நீட்டிய நம் கையை  சிலர் தட்டி விடவே செய்வார்கள், சிலர் கையை கடிக்கக் கூடச் செய்வார்கள். செய்யட்டும், அதையும் மீறி சிறு முயற்சி செய்வோம் அவர்களுக்கு உதவுவதற்கு.  கடைசியில் அவர்களுக்கே நன்மை நடக்கப் போகிறது!

22.01.2020 மலர்ச்சி தின விழாவில், ‘நான் மெண்ட்டலா இருந்தேன். மலர்ச்சியில கொண்டு வந்து வுட்டாங்க. ஆனா… இன்னைக்கு இவ்ளோ உயரத்தில…’ என்று பகிர்ந்த அந்த தொழிலதிபரை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். அவரைக் கொண்டு வந்து சேர்த்த பாக்யாவும் – செந்திலும் கண்ணில் தெரிகிறார்கள். பாக்யாவும் செந்திலும் வருவதற்கு விதை போட்ட டாக்டர் ஆனந்தும் – அபர்ணாவும் தெரிகிறார்கள் அதைத்தாண்டி. ‘நமக்கு எதுக்கு அதெல்லாம்!’ என்று எண்ணாமல் ‘நமக்குத் தெரிந்த இவருக்கு நல்லது நடக்கட்டுமே!’ என்று எண்ணிய அந்த உள்ளங்களால் இன்று இரண்டு தொழில்கள் வளர்ந்து நிற்கின்றன, பதினைந்து குடும்பங்கள் வாழ்கின்றன, ஒரு பெண்மணி நிம்மதியாய் மகிழ்ச்சியாய் உறங்குகிறாள்.

ஒரு சிறு மெனக்கெடல், ஒரு சிறு முயற்சி, சிறு உதவி எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. வாழ்க்கையே மாற்றி விடுகிறது.

நம்மைச் சுற்றி நிறைய பேருக்கு கை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்படி நடந்து கொண்டாலும் அவர்களுக்கு உதவ வேண்டும் நாம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.01.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *