மலையாளக் கரையிலிருந்து பறம்புநில பாரியின் கதை

நிலம் கொள்ள பொன் கொள்ள புகழ் பெருக்க படை கொண்டு இயற்கையை அழித்தவர்கள் தமிழ் மூவேந்தர்கள் என்று சு.வெங்கடேசன் எழுதிய போது சோழக்காதலர்கள் அதிர்ந்து போயினர். ஆயினும் பறம்பின் பாரியை தோழமையின் கபிலரை குறிஞ்சி நில இயற்கையில் அவர் நனைத்துக் கொடுத்த விதம் நெஞ்சில் இறங்கி நின்றது (இன்னும் நிற்கிறது!).

ராபர்ட் டௌனி ஜூனியரின் உருவத்தில் திரையில் உலவும் ‘டோனி ஸ்டார்க்கை, அயர்ன் மேனை கொன்று விடாதீர்கள்!’ என்று உலகமே கோரிக்கை வைத்ததே மார்வல் நிறுவனத்தை நோக்கி. அப்படி ஒரு சங்கதியை அதற்கு ஓராண்டுக்கு முன்னரே நடத்திய சரித்திரம் சு.வெங்கடேசனின் ‘வேள் பாரி’க்கு உண்டு. உலகம் முழுவதிலிருந்தும் விகடனின் வழியே லட்சோபலட்சம் பேர் ‘வேள் பாரியைக் கொன்று விடாதீர்கள்!’ என்று கதறினர். பறம்பின் தலைவன் பாரியை வெங்கடேசனின் வழியே அப்படி உள்வாங்கி பிம்பப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடியது தமிழ் உலகம். வாசகர்களின் கருத்துகளை ஏற்று, விருது பெற்ற மேடையிலேயே ‘வரலாற்றுக்கு இல்லாத ஒரு வசதி புதினம் எழுதுபவனுக்கு இருக்கிறது’ என்று ஏற்புரை செய்து புதினத்தின் முடிவில் போரில் வெற்றிபெற்று நீலனை மீட்டுக்கொண்டு யானையில் பயணித்தான் பாரி என்று முடித்து வைத்து வயிற்றில் பாலையும் நெஞ்சில் தேனையும் வார்த்தார் சு.வெங்கடேசன்.

இன்று மலையாள மண்ணிலிருந்து மிகச்சிறந்த படைப்பாக சாகித்ய விருது வென்று வந்து இறங்கியிருக்கும் திருவண்ணாமலை கே.வி. ஜெயஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்பு நூல், ஓர் ஆவலைத் தாண்டி ஒரு துளி கலக்கத்தையும் உண்டாக்குகிறது. சில திரைப்படங்களை ஒன்றிப் பார்துக்கொண்டிருக்கும் போதே, ‘ஐயோ! முடிவு அப்படி இருக்கப்போவுது போல, ஐயோ! வேண்டாமே!’ என்று வயிற்றில் கொஞ்சமாக சரேலென ஓர் அமிலம் சுரக்குமே அப்படியோர் உணர்வு வருகிறது.

பாரியை களத்தில் கொன்று விட்டார்கள், அவரது மகள்கள் அங்கவை, சங்கவியை மனம் செய்துவைத்தது நட்பின் கபிலரே என்பதே வரலாறு சொல்லும் நிதர்சனம். ஆசைகள், விருப்பங்கள், கற்பனைகளைத் தாண்டி வரலாறு சொல்லும் உண்மைகள் சுடத்தானே செய்யும்.

வாசிப்போம் கே.வி. ஜெயஸ்ரீயின் வழியே மலையாள மண் கொண்டாடும் தமிழ்க்குடியின் பறம்பின் தலைவன் பாரியை. வாசித்துவிட்டு மீண்டும் பகிர்கிறேன்.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து,

சென்னை,

01.03.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *