டேய் வானரங்களா…

டேய் வானரங்களா…

 

அன்பழகன் சார் கால்களை மடித்து சம்மணமிட்டு உட்கார்ந்து ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்…’ என்று தொடங்கினால், ஊரே அடங்கிக் கேட்கும்.  அப்படித்தான் ஒவ்வொரு நாளும் தொடங்குவார் அவர். அதுவும் ‘அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே!’ என்று அந்தக் குரலில் அவர் முடிக்கும்போது ஏழாவது படிக்கும் சிறுவனான நான் சொக்கிக் போயிருப்பேன்.

மார்கழி மாதக் காலையில் பொங்கல் வாங்குவதற்குக் கூடப் பெருமாள் கோவில் போகாத முரட்டுத்தனமாய் சைவ நெறியை (கூடவே கௌமாரமும்) பின்பற்றிய ஒரு தலைமுறையின் குழந்தைகள் நாங்கள். மணக்குடியின் பாப்பாக் குளத்தின் அந்தப் பக்கம் வசித்த நாங்கள் குளத்தின் இந்தப் பக்கம் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறி வந்த ஓராண்டில் அது நடந்தது. பிராமணர்கள் வசிக்கும் அக்ரகாரத்தில் ஒரே ஒரு பிராமணரல்லாத வீடு எங்களுடையது.

‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!’ என்று சீர்காழி கோவிந்தராஜன் குரலில் புனல் வைத்து இசைத்தட்டு வழியே ஊரின் காதே கிழியும் அளவிற்கு பாடல் வந்துவிட்டால், சிறுவர்கள் மெத்தை வீட்டு ஐயர் வீடு நோக்கி ஓடுவார்கள். ‘டேய், மூஞ்சியும் மொகரையும் எப்படி இருக்கு பாரு, இப்படியேவா போற? இரு!’ என்று சிறுவர்களின் முகத்தைத் துடைத்து தலையில் வழியுமளவிற்கு எண்ணெய் தடவி வாரி முகத்தில் பாண்ட்ஸோ குட்டிகுராவோ அடித்து சட்டையை மாட்டி அனுப்புவார்கள் அம்மாக்கள். முகத்தில் பவுடர் அடிக்கும் நேரத்தில்தான் சிறுவர்கள் அவசரப்படுவார்கள். ‘அம்மா, எல்லாரும் போறாங்கமா, உடுமா!’ என்று பவுடர் வாயில் படாமல் மூஞ்சூறு மாதிரி  வாயை வைத்துக் கொண்டு சொல்லி அவசரம் காட்டுவார்கள். நான்கு பேர் முன்னிலையில் தன் பிள்ளை அழகாக இருக்கவேண்டும் என்பது அம்மாக்களுக்கே உரிய கூடுதல் கவனம்.

நிறைய மாடுகள் அடங்கியிருந்த மாட்டுக்கொட்டைகள் இருந்த அந்தக் கால மணக்குடியில் மெத்தய்யர் வீடு எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடுதான். நடுவில் பலராம ஐயர் வீடு, மாட்டுகொட்டைகள், மாட்டுகொட்டகையின் முன்பக்கத்தில் ஒரு பகுதி ரேஷன் கடை, இன்னொரு பகுதியில் கந்தசாமி டைலர் கடை, அதற்கடுத்து நரசுஸ் காஃபியில் வேலைக்கு போன விட்டி ஐயர் மகன் வேம்புவின் வீடு. அடுத்தது மெத்தய்யர் வீடுதான். உடையார் தெருவில் பாலதண்டாயுதம் உடையாரின் வீடும் மெத்தை வீடுதான். அதானால் இவர் ‘மெத்த வூட்டு அப்பா’ என்றும், மெத்தை வீடு கொண்ட ஐயர் ‘மெத்தை வூட்டு ஐயர்’ என்றுமே விளிக்கப்பட்டனர். மெத்தை வூட்டு ஐயர் வழக்கில் மருவி ‘மெத்தய்யர்’ ஆனது.

மெத்தய்யர் வீட்டில் உயரமான பெரிய பந்தல்கள் தெருவடைத்து போடப்படும். பேருந்து வசதிகள் இல்லாத அக்காலங்களில் தெருவடைத்த பந்தல்கள் சிரமமாகவே இருக்கவில்லை. மெத்தய்யர் வெட்டில் பந்தல் போட்டால் ‘ராமாயணம்’ நடக்கப் போகிறது என்று அர்த்தம். வருடா வருடம் பந்தல் போட்டு பத்து நாட்கள் ஸ்ரீராம நவமி விழா ராமாயணம் நடக்கும்.

ராமாயணம் நடக்கும் என்பதைவிட, ராமாயணச் சொற்பொழிவு முடிந்ததும்  சிறுவர்கள் கவனம் முழுதும் மெத்தய்யர் உட்கார்ந்திருக்கும் இடத்தை தாண்டியிருக்கும் கண்ணாடி போட்டு பொட்டு வைக்கப்பட்ட மரச்சட்டத்தில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியத்தின் அடியில் இருக்கும் பாத்திரத்திலேயே இருக்கும். ‘ராமர் இப்படியா இருப்பாரு, ஐயே!’ என்று அந்த வயதில் எண்ணம் வரவைக்கும் ராமர் சீதை லட்சுமணன் என எல்லோரும் ஒரே மாதிரியாக குண்டு குண்டான முகங்கள் கொண்ட தஞ்சாவூர் ஓவியம் கதம்ப மாலை சாத்தி வைக்கபட்டிருக்கும். அதனடியில் இருக்கும் எவர் சில்வர் பாத்திரத்தில் கறுப்புக் கொண்டக்கடலை சுண்டல் இருக்கும். காய்ந்த மிளகாயும், கருவேப்பிலையும் பரவிக் கிடக்கும் அதன் மேலேயே கண்ணாக இருப்பார்கள் சிறுவர்கள். நாகராசு மட்டும் அவ்வப்போது சுண்டல் வந்துவிட்டதா என்று போய் பார்த்துவிட்டு வருவான். ‘டாஆய், ஓடறா அந்தப் பக்கம்!;’ என்று விரட்டுவார் குஞ்சய்யர்.

பந்தலின் ஒரு காலில் கீற்றுக்கு மேலே புனல்கள் கட்டப்பட்டு காது சவ்வு கிழியும் சீர்காழி கோவிந்தராஜன் பாடல் முடிந்து, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்’ என்று டிஎம்எஸ்ஸின் இசைத்தட்டும் முடிந்து, ‘ஞானமும் கல்வியும் நல்லருட்செல்வமும் நம்பினோர்க்கருளும் முருகா !’ என்று கேபிசுந்தராம்பாள் வரும்போது, அன்பழகன் சார் வந்திருப்பார். அதுவரைக்கும் அந்த இடமே சிறுவர்களின் கொட்டத்தால் ரெண்டு படும். ‘டேய் வானரங்களா, சும்மா இருங்கடா!’ என்று அவ்வப்போது குஞ்சய்யர் வந்து கத்தி முறைத்து கட்டுப்படுத்திவிட்டுப் போவார்.

 

தெருப்பந்தலின் அடியில் மூன்று பென்ச்கள் அடுத்தடுத்து போடப்பட்டு அதன் மீது கொடு போட்ட புது ஜமுக்காளம் விரிக்கப்பட்டு தயாராகி இருக்கும் மேடையில் அந்தக் கால தமிழ் சினிமாக்களில் வில்லன்களின் கணக்குப்பிள்ளைகள் சம்மணமிட்டு உட்கார்ந்து வைத்து எழுத பயன்படுத்துவார்களே அப்படியொரு கணக்குப்பிள்ளை மேசையை அதன் மேல் வைத்து அதன் அருகிலேயே மைக்கை வைத்தால் ராமாயண மேடை தயார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் சுத்தமாய் மழித்த முகத்துடன் லூனாவில் வந்து இறங்குவார் அன்பழகன் சார்.

அவர் முன்னே ஒரு சொம்பில் பாலும், ஒரு சொம்பில் வெந்நீரும் வைப்பார்கள். கால்களை மடக்கி சம்மணமிட்டு கணக்குபிள்ளை மேசையை தன்னை நோக்கி இழுத்துப் போட்டுக்கொண்டு,  முதல் பத்தியில் சொன்னதைப் போல ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ சொல்லித்  தொடங்குவார்.

‘நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு, தாமரை உறங்கும் செய்யாள்’ என்றெல்லாம் அவர் சொல்லச் சொல்ல, சரயு நதியும் கோசல நாட்டுக் காட்சிகளும் கம்பனின் தமிழும் புரியாத அந்த வயதிலயே என்னுள் இறங்கின. அடுத்த நாள் ஓடிப்போய் அப்பாவின் எண்ணற்ற புத்தகங்களில் கம்பனைத் தேட, ‘இந்தா இதைப் பாரு’ என்று வாரியாரின் ‘கம்பன் கவிநயம்’ தந்தார் அப்பா.

எதுவும் புரியவில்லை என்றாலும், அன்பழகன் சார் சொல்லிய வரிகளை தேடிக் கண்டு ‘இங்க இருக்கு!’ என்று மகிழ்ந்து அவ்வரிகளை திரும்பத் திரும்பப் படித்ததே போதுமானதாக இருந்தது அவ்வயதில்.

‘தருவனத்துள் யானியற்றும் தவவேள்விக்கு இடையூறாய்’ என்று தொடங்கி ‘நிருதரிடை விலக்கா வண்ணம் செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்துஈதி என உயிர் இரக்கும் கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்’ என்று வரும் வரிகள் என்னுள் இறங்கிப் பதிந்து போயின. ‘உம் பசங்க நாலு பேருல கரிய செம்மலா இருக்கானே அவனைக் குடுன்னு உயிரை உருவுற எமன் மாதிரி கேட்டார்’ என்று இன்று புரிவதுபோல அன்று புரியாவிட்டாலும், அன்பழகன் சார் வார்த்தைகளை போட்ட வேகமும் விதமும், தெருக்கூத்து சம்பூர்ண ராமாயணத்தை விரும்பிய என்னை கம்பனை நோக்கி நெட்டித்தள்ளி நகர்த்தின.  இன்று ‘கரிய செம்மல்’ என்ற சொல் பயன்பாட்டைப் பார்த்து சிலாகிக்க முடியும், அன்று இவை எதுவும் புரியாத போதும், கம்பனின் ராமன் அற்புதமான படைப்பு என்று புரிந்தது. ராமனோடு ராமனை விட மேகநாதன் மீதும் அனுமன் மீதும் ஈர்ப்பு வந்தது. மேகநாதனைப் போலவே மாயங்கள் செய்பவனாக மேகத்தில் மறைபவனாக என்னை கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்.

பால கண்டம் சுந்தரகாண்டம், வாலி வதம் என்று அன்பழகன் சார் உரையில் ஒவ்வொரு நாளும் ராமகாதையை விட கம்பன் வரிகள் இறங்கின உள்ளே. இடையில் ஒருமுறை நிறுத்தி சொம்பில் இருக்கும் இளஞ்சூடான பாலை குடிப்பார். அப்புறம் தொடர்வார்.

‘அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்’ என்று சொல்லி அவர் முடிக்கும் போது, ‘முடிஞ்சிடுச்சா ச்சே!’ என்று இருக்கும்.

பிள்ளைகள் தஞ்சாவூர் ஓவியத்தின் அடியில் இருக்கும் எவர் சில்வர் பாத்திரத்தைப் பார்ப்பார்கள்.  அதற்குள் மெத்தய்யர், ‘ஓம் ஸ்ரீ ராம ராம ரமேதி ரமே’ என்று எதையோ சொல்லிக் கொண்டே தஞ்சாவூர் குண்டு மூஞ்சி ராமர் ஓவியத்துக்கு வலக்கையால் கற்பூரம் காட்டிக்கொண்டே இடக்கையால் மணியடித்துக் கொண்டிருப்பார். மணியடித்துக் கொண்டே எவர் சில்வர் பாத்திரத்தை திறப்பார், இங்கே பிள்ளைகளுக்கு வாய் திறக்கும், விரிந்து தானாக கீழ் தாடை கீழே விழும். சுண்டல் பாத்திரத்தை திறந்து அருகிலிருக்கும் பித்தளை பாத்திரத்திலிருந்து நீர் விளாவி நெய்வேத்யம் செய்வார்.  ‘ஆ… சீக்கிரம் ஐரே!’ என்றும் ‘சீக்கிரம் சாமி’ என்றும் பிள்ளைகள் சத்தம் வராமல் ஆசைக்குரலெழுப்புவார்கள். அன்பழகன் சார் விடை பெற்று லூனாவில் ஏறி போவதையே பார்த்துக்கொண்டு சுண்டல் குண்டான் குஞ்சய்யர் கைக்கு வந்ததையும் அங்கே ஒரு தள்ளு முள்ளு போராட்டம் நடந்ததையும் கவனிக்காமல் தவறவிட்டு திரும்ப வந்த போது சுண்டல் தீர்ந்து போக சுண்டலை இழந்து ஏமாற்றமாக வீடு திரும்பியிருக்கிறேன்.

‘புள்ள ஏமாந்து வர்றான்’ என்று அடுத்த நாளிலிருந்து அரைப்படி கொண்டைக் கடலை ஊறவைத்து ராமாயணம் முடிந்த பிறகு வீட்டிலேயே எனக்கு சுண்டல் தந்தது என் அம்மாவின் பெருங் கருணை.

எனக்கு சுண்டல் கிடைக்கவில்லை என்பது முரளிக்கு தெரிந்து, முரளியின் அண்ணன் சேகருக்கு தெரிந்து, குஞ்சய்யர் சுண்டல் கொடுக்கும்போது அருகில் நின்று ‘சிவாவுக்கு குடுங்கோ!’ என்று பரிந்துரை செய்து எனக்கு சுண்டல் வரும்படி பார்த்துகொண்டான் சேகர். சேகருக்கும் எனக்குமான நட்பே ராமாயண சுண்டலில்தான் தொடங்கியது.

பத்தாம் நாள் ‘இன்னைக்கு ராத்திரியோட ராமாயணம் முடியுது! ஸ்ரீராம நவமி!’ என்று சொன்னார்கள். நாள் முழுக்க ஏதோதோ பூசைகள் செய்தார்கள், தஞ்சாவூர் குண்டு மூஞ்சி ராமர் படத்திற்கு மாலைகள் சாத்தினார்கள். மாலை அதே சீர்காழி கோவிந்தராஜன், அதே செவியைக் கிழிக்கும் புனலில், ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!. ‘ஏய் பாட்டுப் போட்டாச்சி!’ என்று பிள்ளைகள் துடித்தார்கள். ‘மோரகட்டயப் பாரு’ என்று துடைத்து குட்டிகுரா போட்டு கழுத்துக்கு மேல முகம் மட்டும் வட்டமாய் வெள்ளையடித்து பிள்ளைகளை அனுப்பினார்கள் அம்மாக்கள்.

பந்தலுக்குள் இங்கேயும் அங்கேயும் என ஓடியாடி இரைச்சலோடு விளையாடிக் கொண்டிருந்தனர் பிள்ளைகள். ‘ டேய் வானரங்களா, சும்மா இருங்கடா!’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் குஞ்சய்யர். திடீரென்று பிள்ளைகளிடத்திலிருந்து ‘ஹோ’வென்று ஒரு சத்தம். பந்தலுக்கு மேலே மெத்தையின் கைப்பிடி தடுப்பு சுவரின் மீது வாலை தொங்கப்போட்டுக் கொண்டு ஒரு குரங்கு. மணக்குடிக்குள் குரங்குகள் வருவதில்லை. நாங்கள்தான் எல்லாமும். திடீரென்று ஊருக்குள் அவ்வளவு நெருக்கத்தில் குரங்கைப் பார்த்ததும் திடுக்கிட்டும், பதற்றப்பட்டும், உற்சாகப்பட்டும் போனார்கள் பிள்ளைகள்.

‘ஹேய்..’ என்று கத்தினான் ஒருவன். ‘கொரங்கே.. மறத்த விட்டு எறங்கே’ என்று கத்தினான் ஒருவன். ‘மரம் இல்ல, மெத்தை. கொரங்கே மெத்தையை விட்டு எறங்கே!’ என்று திருத்தி ராகமாக கூவினாள் சிறுமியொருத்தி. ஆளாளுக்கு கூச்சல் போட, குரங்கு மிரண்டு பார்த்தது. திடீரென்று குரங்கின் மீது கற்களை வீசினார்கள் பிள்ளைகள். ஒரு கல் ‘பொத்’ என்று குரங்கி உடலில் மோத, ‘ ஹ்ர்ர்ரர்ர்ர்’ என்று பல்லைக் காட்டி கோபச் சீறல் செய்த குரங்கு பின்வாங்கியது. அடுத்தடுத்து கல், தொடந்து சத்தம் என பிள்ளைகள் விரட்டவே, மெத்தையிலிருந்து அப்படியே மேற்புரமாகவே வீடுகளின் மீது தாவி எங்கோ ஓடிப்போனது. குரங்கு மறைந்ததும் இன்னும் உற்சாகமாகி பிள்ளைகள் இரைச்சலிட்டு விளையாடினார்கள். நடந்த எதுவும் தெரியாமல் இடைவெளி விட்டு வெளியில் வந்த குஞ்சய்யர், ‘டேய் வானரங்களா, சும்மா இருங்கடா!’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். அன்பழகன் சார் லூனாவில் வந்தார். சம்மணமிட்டு அமர்ந்தார், ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ சொல்லி தொடங்கினார். பட்டாபிஷேகம் முடித்து நிறைவு செய்தார். மெத்தய்யர் குண்டு மூஞ்சி ராமருக்கு கற்பூரம் காட்டினார், சேகர் மணியாட்டினார். அன்பழகன் சார் புறப்பட்டார். குஞ்சய்யர் எவர் சில்வர் குண்டானை எடுத்து சுண்டல் கொடுத்தார். ‘சிவாவுக்கு சுண்டல் கொடுங்கோ!’ என்றார் சேகர். சுண்டலை வாங்கி தின்று கொண்டே வீட்டிற்கு வருகிறேன்.

வீட்டு வாசலில் வெள்ளை யூரியா சாக்கைத் தரையில் விரித்து அம்மாவிற்கு அருகில் அமர்ந்திருக்கும் பாட்டி சொன்னது, ‘புள்ளைங்களா இதுங்க. ஒரு கொரங்கப் போயி கல்லால அடிச்சி விரட்டிருக்குங்க. ராமாயணம் கேட்க வந்த கொரங்கு அது. இன்னைக்கு ராமரு பொறந்த நாளு. ராமாயணம் கேட்க வந்த கொரங்கு அது’

என்னை உள்ளே அழைத்துப் போய் பயத்தம்பருப்பு சுண்டல் தந்தார் அம்மா. ‘இன்னைக்கு ராமர் பொறந்த நாளு. ராமாயணம் கேக்க வந்த கொரங்கு அது’ என்ற பாட்டியின் வாக்கியங்கள் மட்டும் தூங்கும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது. அன்று இரவு குரங்கு கனவில் வந்ததா என்று நினைவில்லை.

பல ஆண்டுகள் கழித்து ‘ராமா, நீ போன பின்னும், எவராவது உன் கதையை பேசுவர். அங்கே ஒரு மூலையில் நான் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று அனுமன் சொன்னதாக நூல் ஒன்றில் படிக்கையில், திடீரென்று மணக்குடிக்கு வந்த குரங்கு மனதில் வந்து போனது. மெத்தையின் தடுப்புச் சுவரில் வாலை தொங்கப் போட்டுகொண்டு உட்கார்ந்திருந்த அந்தக் குரங்கு.

அதிகம் தோப்புகள் இல்லாத வெறும் வயல்கள் நிறைந்த மருத நிலமான மணக்குடிக்கு ஏன் அன்று அந்தக் குரங்கு வந்தது?

‘சீச்சீ, அது ஏதோ வழி தவறி வந்த குரங்கு! தாகத்துக்கோ பசிக்கோ  வந்தது!’

ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் சென்னையில் ஆர்ஏ புரத்தில் அடுக்ககக் குடியிருப்பில். காலையுணவிற்கு அமர்ந்த என்னிடம், ‘இன்னைக்கு ராமர் பிறந்த நாள்’ என்றார் அத்தை. அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்து கொரானா வீட்டடங்கல் விதியால் இங்கேயேயிருக்கும் அம்மா, அத்தை சொல்வதைக்  கேட்டதும், ‘ஆமாம் பங்குனி மாசம்!’ என்றார்.

‘புள்ளைங்களா இதுங்க. ஒரு கொரங்கப் போயி கல்லால அடிச்சி விரட்டிருக்குங்க. ராமாயணம் கேட்க வந்த கொரங்கு அது. இன்னைக்கு ராமரு பொறந்த நாளு. ராமாயணம் கேட்க வந்த கொரங்கு அது’ வள்ளியம்மை பாட்டி வந்து போனார் நினைவில்.

‘மணக்குடி மெத்தய்யர் வீட்டு  ராமாயணம் ஞாபகத்துக்கு வருதும்மா!’

‘நானும் அதையேதான்டா தம்பி நெனைச்சேன்!’

சாப்பிட்டு முடித்து வந்து விட்டேன்.

மெத்தயர் இப்போது இல்லை. சேகர் ஒரு காதல் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான். முரளி புவனகிரியில் டாக்சி ஒட்டிக்கொண்டு இரவு படுக்க மணக்குடி மெத்தை வீட்டிற்கு வருகிறான்.  அன்பழகன் சார் அதற்கப்புறம் முதுகலை முடித்து ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டம் பெற்று, இப்போது புவனகிரியில் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துகிறார். இலக்கிய வட்டங்களில் விரிவுரையாற்றுகிறார்.  (முப்பது ஆண்டுகளுக்கு திருப்பத்தூர் கம்பன் கழகத்தில் ‘கம்பனிடம் கற்கிறேன்!’ என்ற தலைப்பில் உரையாற்ற போனபோது இரா.அன்பழகன் சாருக்கே மனதார நன்றி சொன்னேன்)

அந்தக் குரங்கு ஏன் வந்தது அன்று மெத்தய்யர் வீட்டுக்கு?

 

  • பரமன் பச்சைமுத்து
  • சென்னை
  • 04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *