எவர்க்ரீன் எல் ஆர் ஈஸ்வரி

நேற்றைய ப்ளாக்பஸ்டர் படம்.

பாலதண்டாயுதம் சித்தப்பா அதிகம் சிலாகித்தப் படங்களின் வரிசையில் பார் மகளே பார், பாச மலர், கௌரவத்திற்கு அடுத்து வரும் படம் இது.

ஜில்ஜில் ரமாமணி, ரோசாரமணி ஆகிய இந்தப்பாத்திரத்தின் பெயர்களை ராஜவேலு – முத்தையா – சடாட்சரம் சித்தப்பாக்கள் மறக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன்.

மனோரமா கதாபாரத்திரம் செய்த இதே பாட்டை – கூத்தை ஒட்டியே, அப்படியே நகலெடுத்தே ( பாடல் – உடை – கர்ணம் ) ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’ பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கும். நடிகனாக சென்னைக்கு வருவதற்கு முன்பு உள்ளூரில் கூத்து நாடக நடிகனாக காட்டப்பட அந்தப் பாடல் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

சிவாஜியும், பத்மினியும், பாலையாவும் பின்னியிருப்பார்கள்.

படத்தின் இசை, இன்று அமேசான் ப்ரைமில் ‘அலெக்ஸ் இன் வொண்டர்லாண்டு’ வரை வந்துள்ளதை வைத்தே சொல்லலாம் ‘வேற லெவல்’ என்று. இன்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குடும்ப – சமூக நிகழ்வுகளில் ஒலிக்க விடும் மங்கள வாத்திய இசை, இந்தப் படத்தின் இசைத் துண்டுதான் என்பது பலருக்கு தெரியாது.

இதையெல்லாம் தாண்டி…
சுசீலா, டிஎம்எஸ் அவர்களின் பெரு வெளிச்சத்தில் நாம் அதிகம் கவனியாமல் விட்டது எல் ஆர் ஈஸ்வரியின் குரல்! இப்படிப் பாட எல்லோராலும் முடியாது.
‘நெஞ்சு துடிக்குது ஜெமினி்ஜெமினி’யின் ஃபாஸ்ட் டெம்ப்போவிற்காக அனுராதா ஸ்ரீராமைப் பாராட்டியது உலகம். ஃபாஸ்ட் டெம்ப்போவை அசால்ட்டாக தந்தவர் எல் ஆர் ஈஸ்வரி. அதனால்தான் இப்போதும் 80 வயதிலும் டி ராஜேந்திரரோடு சேர்த்து ‘கலாசலா கலக்கலா.. கலாசலா கலக்கலா.. ஒஸ்தி!’ என்று பாடமுடிகிறது அவரால்.

‘எலந்த பழம்’ பாடல் ஒன்று போதும் அவரை உரக்க அறிவிக்க.

‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ ‘மாரியம்மா…’ என்ற இவரது பாடல்கள் ஒலிக்காத கோவில்கள் குறைவு தமிழ்நாட்டில் (மணக்குடி, கொளப்பாக்கம் உட்பட). இவரது ‘வாராயோ தோழி வாராயோ..’ ஒலிக்காமல் மணப்பெண் அழைப்பு இல்லை தமிழ்நாட்டில் எனலாம் ( கிறித்துவ, முஸ்லீம் திருமணங்கள் தவிர்த்து)

‘பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது’ போல சந்திரபாபுவோடு அட்டகாச துள்ளலிசை பாடல்கள் பாடிய அதே வேளையில்
‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ ‘கட்டோடு குழலாட ஆட’ ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ போன்ற பாடல்களிலும் குழைய வைத்து அசத்தியவர்.

இசையை ரசிப்பவர்களுக்கு மறக்க முடியாத குரல் எல் ஆர் ஈஸ்வரியினுடையது.

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    06.05.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *